ஐதராபாத்: தெலுங்கானாவில், ஏற்கனவே, 12 எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு மாறியுள்ள நிலையில், காங்.,கைச் சேர்ந்த மற்றொரு, எம்.எல்.ஏ.,வும் தாவுவதற்கு தயாராக உள்ளார்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. 18 காங்., - எம்.எல்.ஏ.,க்களில், 12 பேர் சமீபத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் இணைந்தனர். அதனால், சட்டசபையின், காங்.,கின் பலம், ஆறாக குறைந்தது. இந்த நிலையில், நால்காண்டோ அருகில் உள்ள, முனுகோடே தொகுதியின், காங்., - எம்.எல்.ஏ.,வான, கோமதி ரெட்டி ராஜகோபால் ரெட்டி, கட்சி மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பா.ஜ., மூலமே நாடு வளர்ச்சி:
அவர் கூறியதாவது: மாநிலத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு எதிராக, நான் மட்டுமே பேசி வருகிறேன். அந்தக் கட்சியை எதிர்க்கக் கூடிய தலைமை, இங்கு இல்லை. இதனால், கட்சித் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். தெலுங்கானாவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் காங்., கட்சி மிகப் பெரிய சிக்கலில் உள்ளது. பா.ஜ., மூலமே, நாடு வளர்ச்சியை எட்ட முடியும். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு மாற்றாகவும், பா.ஜ., உள்ளது. நான் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை.
அதே நேரத்தில், காங்.,கில் தொடர முடியாத சூழ்நிலை உள்ளது. பா.ஜ.,வில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. என்னுடைய ஆதரவாளர்களின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE