வங்கத்திடம் 'பங்கம்' ஆன விண்டீஸ்! *சாகிப் அசத்தல் சதம்

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019
Advertisement
 வங்கத்திடம் 'பங்கம்' ஆன விண்டீஸ்! *சாகிப் அசத்தல் சதம்


டான்டன்: உலக கோப்பை அரங்கில் இரு முறை சாம்பியனான வீண்டீஸ் அணியின் புகழுக்கு பங்கம் ஏற்படுத்தியது வங்கதேசம். நேற்றைய லீக் போட்டியில் சாகிப் அல் ஹசன் சதம் விளாச, 'மெகா' இலக்கை சுலபமாக விரட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று டான்டனில் நடந்த லீக் போட்டியில் விண்டீஸ், வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.


கெய்ல் 'டக்'







விண்டீஸ் அணிக்கு கெய்ல், லீவிஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. 13 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் கெய்ல், அவுட்டானார். லீவிஸ், ஒருநாள் அரங்கில் 4வது அரைசதம் கடந்தார். இவர் 70 ரன்னில் சாகிப் அல் ஹசன் சுழலில் சரிந்தார்.
பூரன் (25) கைவிட, ஹோப், 12வது அரைசதம் கடந்தார். 25வது பந்தில் அரைசதம் அடித்த ஹெட்மயர் (50), முஸ்தபிஜுர் பந்தில் அவுட்டானார். ரசல் 'டக்' அவுட்டானார்.
ஹோல்டர் 15 பந்தில் 33 ரன்கள் எடுக்க, ஹோப் 96 ரன்னுக்கு அவுட்டாகி, சத வாய்ப்பை இழந்தார். விண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 321 ரன்கள் குவித்தது.
மின்னல் வேகம்
கடின இலக்கைத் துரத்திய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (48), சவுமியா சர்கார் (29) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முஷ்பிகுர் (1) வந்த வேகத்தில் வெளியேறினார். வேகமாக ரன்கள் சேர்த்த சாகிப் அல் ஹசன், ஒருநாள் அரங்கில் 9வது சதம் கடந்தார். உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்து அடித்த 2வது சதம் இது.
விண்டீஸ் வீரர்களின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. கேபிரியல் ஓவரில் லிட்டன் தாஸ் 'ஹாட்ரிக்' சிக்சர் அடிக்க வெற்றி எளிதானது.
கடைசியில் லிட்டன் தாஸ் ஒரு பவுண்டரி அடிக்க, வங்கதேச அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் விண்டீஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பெற்றது. சாகிப் அல் ஹசன் 124 ரன் (99 பந்து), லிட்டன் தாஸ் (94) அவுட்டாகாமல் இருந்தனர்.

1
உலக கோப்பை தொடரில் விண்டீஸ் அணியை முதன் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேச அணி. இரு அணிகள் மோதிய 5 போட்டியில் விண்டீஸ் 3 (1999, 2007, 2011), வங்கதேசம் 1ல் (2019) வென்றன. 2003ல் நடந்த போட்டிக்கு முடிவில்லை.


6000


நேற்று சாகிப் அல் ஹசன் 23 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 6000 ரன்களை கடந்தார். தமிம் இக்பாலுக்கு (6,742 ரன்) அடுத்து இந்த இலக்கை எட்டிய 2வது வங்கதேச வீரர் ஆனார்.
* ஒருநாள் அரங்கில் 6000 ரன்கள், 250 விக்கெட்டும் மேல் வீழ்த்திய உலகின் நான்காவது வீரர் ஆனார் சாகிப் (6,101, 252 விக்.,). ஜெயசூர்யா (13,430 ரன், 323 விக்., இலங்கை), காலிஸ் (11,579 ரன், 273 விக்., தெ.ஆப்.,), அப்ரிதி (8,064 ரன், 395 விக்., பாக்.,) இதுபோல சாதித்தனர்.

ஹோப் குஷி

வங்கதேசம் என்றாலே ஷாய் ஹோப்பிற்கு குஷியாகி விடும் போல. இந்த அணிக்கு எதிராக கடைசியாக களமிறங்கிய 6 போட்டிகளில் 146, 108, 109, 87, 74 மற்றும் 97 ரன்கள் விளாசினார். வங்கதேசத்துக்கு எதிரான விளையாடிய 10 போட்டிகளில் ஹோப், 3 சதம், 4 அரைசதம் உட்பட 758 ரன்கள் குவித்துள்ளார்.


105


நேற்று மொர்டசா பந்தில் விண்டீஸ் வீரர் ஹோல்டர் அடித்த பந்து 105 மீ., துாரம் சென்றது. இந்த உலக கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட நீண்ட சிக்சராக இது அமைந்தது. இதே போட்டியில் ஹெட்மயர் 104 மீ., துாரத்திற்கு சிக்சர் அடித்தார். மற்றொரு விண்டீசின் ரசல், 103 மீ., துரம் சிக்சர் (எதிர்-ஆஸி.,) அடித்துள்ளார்.


இது 'பெஸ்ட்'


நேற்று வங்கதேச அணி 322 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஒருநாள் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் வங்கதேச அணியின் சிறந்த 'சேஸ்' வரிசையில் இது 'நம்பர்-1' இடம் பிடித்தது. இதற்கு முன் 2015 உலக கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்துக்கு (318/8) எதிரான இலக்கை துரத்தி வென்றது (322/4).
* உலக கோப்பை அரங்கில் இது சிறந்த இரண்டாவது 'சேஸ்' ஆக அமைந்தது. 2011 தொடரில் அயர்லாந்து (329/7), இங்கிலாந்தை (327/8) 'சேஸ்' செய்து வென்றது முதலிடத்தில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X