அதிகாரிகளின் அலட்சியத்தால் அழியும் பசுமைச்சூழல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளின் அலட்சியத்தால் அழியும் பசுமைச்சூழல்

Added : ஜூன் 18, 2019 | கருத்துகள் (1)

மதுரை : மதுரையில் சாலை விரிவாக்கம், பாலம் அமைப்பதற்காக ரோட்டோர மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகிறது. கடந்தாண்டு சொக்கிகுளம் ஐ.ஓ.சி., ரவுண்டானா - புதுநத்தம் ரோடு செட்டிகுளம் வரை பறக்கும் பாலம் மற்றும் செட்டிகுளம் - நத்தம் நான்குவழிச் சாலை அமைக்க ரோட்டோரம் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. அங்கு மரங்கள் வெட்டிய அதே வேளையில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டட விரிவாக்க பணிக்காக 15 மரங்கள் வேருடன் அகற்றி வளாகத்தின் வேறு பகுதியில் நடப்பட்டது.

மரங்கள் வேறு இடத்தில் நடப்பட்டதை சுட்டிக்காட்டி புது நத்தம் ரோட்டிலும் மரங்களை வெட்டாமல் வேறு இடத்தில் நடலாம் என தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பில் 2018 ஆக., 27ல் செய்தி வெளியானது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் அப்பகுதியின் பசுமைச்சூழல் அழிக்கப்பட்டது. வைகை வடகரை, தென்கரை, ஒத்தக்கடை சாலை விரிவாக்கத்திற்காக அங்கிருந்த மரங்களும் வெட்டப்பட்டன. தற்போது காளவாசல் - சொக்கலிங்க நகர் பஸ் ஸ்டாப் வரை பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

இதற்காக காளவாசல்- ஆரப்பாளையம் - பைபாஸ் ரோட்டில் இருந்த 40க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது இயற்கை ஆர்வலர்கள் மரங்கள் வெட்டுவதற்கு எதிராக போராடியதால் பொன்மேனி பகுதியில் உள்ள மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டிய நிலையில் விட்டுச் சென்றுள்ளனர்.காளவாசல் மரங்களை காப்போம்சே.ஸ்ரீதர் நெடுஞ்செழியன் ஒருங்கிணைப்பாளர், மண்ணின் மரங்கள் பாதுகாப்பு இயக்கம்இயக்கத்தில் உள்ள நண்பர்கள் அனைவரும் இயற்கையை பாதுகாக்கும் சேவையை செய்கிறோம். புது நத்தம் ரோட்டில் மரங்கள் வெட்டிய போது போராட்டங்கள் நடத்தி சில மரங்களை காப்பாற்றினோம். அங்கு4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன.

ஆனால், அதிகாரிகள் 910 மரங்களை மட்டும் வெட்டுவதாக கூறி அனைத்து மரங்களையும் வெட்டினர்.காளவாசலில் மரங்கள் வெட்டுவதை தடுக்கக்கோரி போராட்டம் நடத்தினோம். கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள் காளவாசலில் மரங்களை வெட்ட யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை, வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எங்களுக்கு நேற்று பதில் அனுப்பினர்.'காளவாசல் மரங்களை காப்போம்' என்ற வாட்ஸ் ஆப் குழு மூலம் மரம் வெட்டுவதை தடுக்க முயற்சித்து வருகிறோம்.

மரங்களை வெட்டுவதற்கு பதில் அதை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நடும் தொழில்நுட்பத்தை அதிகாரிகள் பின்பற்றலாம். தண்ணீர் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசு, வறட்சியை போக்க மரங்களை பாதுகாக்கப்பது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X