தலையும் இல்லே... வாலும் இல்லே...! தவியாய் தவிக்குது பாரதியார் பல்கலை| Dinamalar

தலையும் இல்லே... வாலும் இல்லே...! தவியாய் தவிக்குது பாரதியார் பல்கலை

Added : ஜூன் 18, 2019
Share
ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்ட சாலையில், சித்ராவும், மித்ராவும் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தனர். வழித்தடத்தில் வைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை, பலரும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.அதை எட்டிப்பார்த்த சித்ரா, இமை மூடாமல் ஆச்சரியமாக பார்த்தாள்.''அக்கா, என்ன அதிசயமா பார்க்குறீங்க...'' என, கேட்டாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''சிறுதுளி என்கிற தன்னார்வ அமைப்பு
 தலையும் இல்லே... வாலும் இல்லே...! தவியாய் தவிக்குது பாரதியார் பல்கலை

ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்ட சாலையில், சித்ராவும், மித்ராவும் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தனர். வழித்தடத்தில் வைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை, பலரும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.அதை எட்டிப்பார்த்த சித்ரா, இமை மூடாமல் ஆச்சரியமாக பார்த்தாள்.''அக்கா, என்ன அதிசயமா பார்க்குறீங்க...'' என, கேட்டாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''சிறுதுளி என்கிற தன்னார்வ அமைப்பு துவங்கி, 16 வருஷம் ஆயிடுச்சு; காலம் எவ்ளோ வேகமா ஓடுது பாரு. ஏகப்பட்ட நீர் நிலைகளை துார்வாரி, தண்ணீர் தேக்கியிருக்காங்க. இதே மாதிரி, ஏரியாவுக்கு ஒரு அமைப்பு உருவாக்கணும். மழை தண்ணியை ஒழுங்கா சேமிச்சாலே போதும்; தண்ணி பிரச்னையே வராது,'' என்றாள்.

ஆங்காங்கே கல்லுாரி மாணவர்கள், மாணவியரும் ஒதுங்கி நின்று, அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.கலெக்டர் கேம்ப் ஆபிசை தாண்டியதும், ''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்துச்சு. அதுல, கலெக்டர் ராஜாமணி, ஒரு பிடி பிடிச்சிட்டாராம்...'' என்றாள் மித்ரா.''ஏன்... என்னாச்சு?''''எதிர்க்கட்சியை சேர்ந்த விவசாயிகள் சிலர், அரசு நலத்திட்டங்களை பொத்தாம் பொதுவா புகார் சொல்லிட்டு இருந்தாங்க. குறுக்கிட்ட கலெக்டர், 'கூட்டத்துல பொத்தாம் பொதுவா சொல்றதை கேட்கறதுக்கு, நான் ஆளு கிடையாது. எந்த புகாரா இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுங்க; நடவடிக்கை எடுக்கிறேன். இது, அரசியல் களம் அல்ல' என்றதும், 'நீங்க தவறா புரிஞ்சிட்டிங்க'னு சொல்லி சமாளிச்சாங்க,''

''அப்புறம்...''''கேரளாவுல இருந்து மருத்துவ கழிவு அள்ளிட்டு வர்ற லாரிகள் பிடிபட்டா, வழக்கு போடாம அலுவலகத்திலேயே நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டு இருக்காம். வழக்கு பதிவு செஞ்சா, கோர்ட்டுல பைன் கட்டிட்டு, 'எஸ்கேப்' ஆகறதும், மீண்டும் விதிமீறலில் ஈடுபடுறதும் தொடர் கதையா நடக்குது. வழக்கு போடாம வண்டியை ஓரங்கட்டி நிறுத்துனா, எடுத்துட்டு போக முடியாது; கொஞ்ச நாள்ல வண்டி துருப்பிடிச்சு போயிடும். இனிமே, 'இல்லீகல்' விஷயங்களுக்கு யாரும் வண்டி கொடுக்க முன்வர மாட்டாங்கன்னு சொல்லியிருக்காங்க...''

''அடடே, சூப்பர்... இதே மாதிரி எல்லா விஷயத்துக்கும் நடவடிக்கை எடுத்தா, நல்லா இருக்கும்,'' என்றாள் சித்ரா.''அதெல்லாம் சரி, ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் சிட்டின்னு மாசம் மாசம் 'மீட்டிங்' நடத்துறாங்க. ரோடெல்லாம் குண்டும் குழியுமா இருக்குது. ரேஸ்கோர்சை, மாதிரி சாலையா மாத்தப்போறதா சொன்னாங்களே. என்னாச்சுன்னே தெரியலையே,'' என, மித்ரா நோண்டினாள்.

''அதுவா, மித்து, ரேஸ்கோர்ஸ் பகுதியில புதுசா ரெண்டு அடுக்குமாடி குடியிருப்பு உருவாகிட்டு இருக்கு. அதுக்கேத்த மாதிரி, மாதிரி சாலையை உருவாக்குவாங்க போலிருக்கு. ஏன்னா, இப்ப இருக்கற சாலை அகலத்தை கணக்கிட்டா, அந்த குடியிருப்புகளுக்கு அனுமதியே கொடுத்திருக்க முடியாதாம். குடியிருப்புக்கு ஏற்ப, ரோட்டை மாத்தப் போறாங்க போலிருக்கு...'' என்றாள் சித்ரா.

''நீங்க சொல்றத பார்த்தா... ரேஸ்கோர்ஸ்ல இருக்கற எல்லா மரத்தையும் வெட்டுவாங்க போலிருக்கே...''''கரெக்ட்... அதுக்கும் திட்டம் வச்சிருந்தாங்க. ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டுல மரம் வெட்டுறதுக்கு கடுமையா எதிர்ப்பு வந்ததுனால, ரேஸ்கோர்ஸ் திட்டத்தை கெடப்புல போட்டுட்டாங்க. விசாரிச்சா, இன்னும் அனுமதி கெடைக்கலைன்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.

அப்போது, கார்ப்பரேஷன் குப்பை லாரி, அவர்களை கடந்து சென்றது.அதைப்பார்த்த மித்ரா, ''கார்ப்பரேஷன் அலுவலகத்துல கரெப்ஷன் அதிகாரிகளை மாத்தப் போறதா சொன்னீங்களே... 'ஆர்டர்' கொடுத்த மாதிரி தெரியலையே...'' என, கிளறினாள்.

''பொறுமையா இரு மித்து, ஜெனரல் செக் ஷன்ல இருந்து, 'டிபார்ட்மென்ட்' வாரியா ஊழியர்கள்/ அதிகாரிகள் 'லிஸ்ட்' எடுத்துருக்காங்க. கமிஷனர், துணை கமிஷனர் டேபிளுக்கு போயிருக்கு. 20 வருஷமா ஒரே இடத்துல 'குப்பை' கொட்டுறது யாரு, 10 வருஷம், 5 வருஷம், 3 வருஷத்துக்கு மேல, யாரு யாரு எந்தெந்த 'டிபார்ட்மென்ட்'டுல வேலை பார்க்குறாங்கன்னு 'லிஸ்ட்' எடுத்து, தயாரா வச்சிருக்காங்க. பதவி மட்டும் வாங்கிட்டு, 'ஓபி' அடிக்கிற அதிகாரிங்க பட்டியலும் எடுத்திருக்காங்க. இந்த வார கடைசியில, 'டிரான்ஸ்பர்' ஆர்டர் வெளியிடுறதுக்கு வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.

''ஓ...''ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சாலையை ஒரு 'ரவுண்டு' முடித்திருந்தனர். அங்கிருந்த ரேஷன் கடையில், பொருட்கள் இறக்கிக் கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, ரேஷன் கடையை சரியான நேரத்துக்கு தெறக்காத விவகாரத்துல, ஒருத்தரிடம் 'கரன்சி' வாங்கிட்டு, கருணை காட்டுனதா பேசுனோமே. அவரு, ஏற்கனவே, 'பர்மிஷன்' வாங்கியிருந்ததா கடிதம் வாங்கி, 'பைலை' மூடிட்டாங்களாம்,'' என்றாள்.''அரசாங்க அதிகாரிங்க நெனைச்சா, எது வேணும்னாலும் செய்யலாம்னு சொல்லு,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.

''ஆமாப்பா, நகர ஊரமைப்பு துறையில, பழைய கோப்புகளை எரிச்சாங்கள்ல. அது சம்பந்தமா விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. அங்க இருக்குற முக்கியமான அதிகாரியை வேற ஊருக்கு 'டிரான்ஸ்பர்' செய்யப்போறதா, பேச்சு ஓடிட்டு இருக்கு. ஆனா, உண்மையிலேயே, 'சஸ்பெண்ட்' செய்யணும். சென்னை அலுவலகத்துல இருக்கறவரும், இங்க இருக்கற அதிகாரியும் நெருக்கமானவங்களாம். அதனால, வேற ஊருக்கு இட மாற்றம் செய்யப் போறதா சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.

அப்போது, சைரன் ஒலித்துக் கொண்டே, 108 ஆம்புலன்ஸ் வேகமாக கடந்தது.''அக்கா, நம்மூரு கவர்மென்ட் ஆஸ்பத்திரியில, நிர்வாகத்துக்கு பிடிக்காதவங்களை பழிவாங்க, ஓய்வு பெற்ற அலுவலரை 'யூஸ்' பண்றாங்களாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''என்னப்பா, இது, புதுக்கதையா இருக்கு,'' என, ஆச்சரியப்பட்டாள் சித்ரா.''அதாவது, டாக்டர், நர்ஸ், ஊழியருன்னு, 750க்கும் மேற்பட்டவங்க வேலை பார்க்குறாங்க. யாராவது நிர்வாகத்தின் பேச்சை கேட்கலைனா, பழிவாங்குற நடவடிக்கை எடுக்குறாங்க. இதுக்காகவே, 10 வருஷத்துக்கு முன்னாடி, ஓய்வு பெற்ற ஒருத்தரை வச்சிருக்காங்க. யாரையாவது காலி செய்யணும்னு நெனைச்சா, துறை ரீதியா நடவடிக்கை எடுக்குற அளவுக்கு புகார்களை தட்டி விடுவாராம்; அந்தளவுக்கு கை தேர்ந்தவராம். இதுக்காக, அவருக்கு ஓய்வூதியத்தோட, கணிசமான தொகையும் வழங்கப்படுதாம்,'' என்றாள் மித்ரா.

''புது டெக்னிக்கா இருக்கே,'' என்ற சித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்களும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிட்டு இருக்காங்களாமே,'' என, கேட்டாள்.''ஆமாக்கா, ரெண்டு நாளைக்கு முன்னாடி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தியிருக்காங்க. லோக்சபா தேர்தல்ல தோத்துட்டோமேன்னு முடங்கி போயிடக்கூடாது. உள்ளாட்சி தேர்தல் வரப்போகுது. இதுல, எதிர்க்கட்சிக்காரங்களுக்கு வாய்ப்பு கொடுத்துடக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க...'' என்றாள் மித்ரா.

''இதே கூட்டணி தொடருமா... முறிஞ்சிடுமா...'' என, நோண்டினாள் சித்ரா.''கண்டிப்பா, தொடரும்னு சொல்றாங்க. அதனால, ஜெயிக்கக்கூடிய வார்டுகள் எது எதுன்னு இப்பவே, பி.ஜே.பி., கட்சிக்காரங்க கணக்கெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஏகப்பட்ட கட்சிகள் கூட்டணியில இருக்கறதுனால, மேயர், துணை மேயர், மண்டல தலைவர், நிலைக்குழு தலைவர் பதவிகளை பிரிக்கிறதுல, ஏழரை கெளம்பறதுக்கு வாய்ப்பு அதிகமா இருக்குன்னு சொல்றாங்க,''என்றாள் மித்ரா.''தண்ணீ பிரச்னை வேற இருக்கே...''

''மழை பெஞ்சு, குளம், குட்டை நிரம்புனா, உள்ளாட்சி தேர்தல் நடத்துவாங்க. இல்லேன்னா, வழக்கம்போல நொண்டிச்சாக்கு சொல்லி, தள்ளிப்போடுறதுக்கு வாய்ப்பு இருக்கறதா அதிகாரிங்க பேசிக்கிட்டு இருக்காங்க...''

''புது எம்.பி., நடராஜனுக்கு தொழில்துறையை சேர்ந்தவங்க, பாராட்டு விழா நடத்துனாங்களே...''''ஆமாப்பா, அவுங்களோட கோரிக்கையை சொல்லியிருக்காங்க. மத்தியில பி.ஜே.பி., அரசு நடக்குது; இவரோ, கம்யூ., கட்சிக்காரரு. இவரால, நம்ம பிரச்னைக்கு தீர்வு காண முடியுமான்னு தொழில்துறையை சேர்ந்தவங்களுக்கு சந்தேகமும் இருக்கு. அதனால, கூட்டத்துக்கு ஏகப்பட்ட பேரு வரலை. பி.ஜே.பி.,ல இருக்கற முக்கிய நிர்வாகிகள் மூலமாக, மத்திய அரசுக்கு கோரிக்கையை கொண்டு போகலாம்னு சில பேரு சொல்றாங்களாம்,'' என, விளக்கமாக சொன்னாள் சித்ரா.

இருவரும் 'வாக்கிங்'கை முடித்துக் கொண்டு, வீட்டுக்கு திரும்பினர்.'டிவி'யை 'ஆன்' செய்தாள் மித்ரா. கோடை விடுமுறைக்கு பின், மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்பட்டது தொடர்பாக, செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

''அக்கா, பாரதியார் பல்கலையில, ஏகப்பட்ட 'போஸ்டிங்' காலியா இருக்காம்...'' என்றாள் மித்ரா.''ஆமாம், நானும் கேள்விப்பட்டேன். பதிவாளர், தொலைதுார கல்வி மைய இயக்குனர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரின்னு, அஞ்சு முக்கியமான பணியிடங்கள் காலியா இருக்கு. துணைவேந்தர் பதவியும் கூட காலியா தான் இருக்கு. இதுவரைக்கும் மூணு தடவை விண்ணப்பம் வாங்கியிருக்காங்க. ஒவ்வொரு முறையும் கெடப்புல போட்டுட்டு, ஆறு மாசத்துக்கு மேலாயிருச்சு. விண்ணப்பம் காலாவதியாகின்னு சொல்லி, 'ரிஜக்ட்' பண்ணியிருக்காங்க. இனி, துணைவேந்தர் நியமிச்சதுக்கு அப்புறம், விண்ணப்பம் வாங்கலாம்னு நெனைக்கிறாங்களாம்...''

''இன்னொரு குரூப் அணி மாறுறதுக்கு 'டீல்' பேசுதாமே...'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''யாருப்பா, அது... புதுசா கெளப்புற...'' என, அப்பாவியாய் கேட்டாள் சித்ரா.

''நம்மூர்ல தினகரன் கட்சியில சேர்ந்தவங்கள்ல, ஏகப்பட்ட பேரு வக்கீல்கள். அதுவும் தென்மாவட்டத்துக்காரங்க. லோக்சபா தேர்தல்ல அதிகமா ஓட்டு கெடைக்கும்; இடைத்தேர்தல்ல நாலஞ்சு சீட்டு பிடிப்போம்ன்னு, 'கான்பிடன்டா' பேசிக்கிட்டு இருந்தாங்க. மொத்தமா ஊத்திக்கிட்டதால ரொம்பவே, 'அப்செட்' ஆயிட்டாங்க. அந்த கட்சியில இருக்கிற அட்வகேட்டுளை, மீண்டும் இழுக்குற முயற்சியில அ.தி.மு.க., வக்கீல் அணியை சேர்ந்தவங்க, 'டீல்' பேசிட்டு இருக்காங்களாம்...'' என்றாள் மித்ரா.

''என்னப்பா, போலீஸ் மேட்டர் எதுவுமே சொல்லலையே...''

''ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லயும் கட்டப்பஞ்சாயத்து நடக்கத்தானே செய்யுது. போலீஸ் விவகாரம் இல்லாமலா இருக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த 'ரெவியூ' மீட்டிங்கள்ல, போதை கலாசாரத்தை தடுத்து நிறுத்துறதுக்கு உத்தரவு போட்டிருக்காங்க.கஞ்சா விக்கிற கும்பலை, தேடித்தேடி பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. புறநகர்ல இருக்கற கல்லுாரிகளுக்கு, சுற்றுவட்டாரத்துல கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விக்கிறது ஜாஸ்தியாகிருக்கு. நள்ளிரவு நேரத்திலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமா இருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஒரு கல்லுாரி மாணவரை, 'அரெஸ்ட்' பண்ணியிருக்காங்க...'' எனக்கூறி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X