கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 தண்ணீர்,பிரச்னை,ஐகோர்ட்,நெத்தியடி

சென்னை,: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையில், சென்னை உயர் நீதிமன்றம், நேற்று நெத்தியடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 'எத்தனை நீர்தேக்கங்களில் துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? பணிகளின் நிலை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?' என, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், நீர் மேலாண்மை குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு, அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நீதிபதிகள், இதற்கான செயல் திட்ட அறிக்கை அளிக்கும்படி, பொதுப்பணித் துறை செயலருக்கு, உத்தரவிட்டு உள்ளனர்.
வேலுார் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வள பாதுகாப்பு சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு, தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, முறையாக பராமரிக்க, உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.
இம்மனு, நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து, அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி, பதில் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, சென்னைப் பெருநகர குடிநீர் வாரியத்தின், தலைமைப் பொறியாளர், எஸ்.ஆறுமுகம் பதில் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்ஆஜரானார்.
பதில் மனுவை படித்த பின், நீதிபதிகள் கூறியதாவது: சோழவரம், செங்குன்றம் ஏரிகளில், இப்போது சுத்தமாக தண்ணீர் இல்லை. ஒவ்வொரு நாளும், தண்ணீர் குறைந்து வந்தது, அதிகாரிகளுக்கு தெரியாதா? தமிழக அரசிடம், நீர் மேலாண்மை நடவடிக்கை இல்லை. அரசாணைகளை பிறப்பித்து, நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டும் போதுமா?
நீர் நிலைகளுக்கு, நேரில் சென்று ஆய்வு செய்தனரா? நீர் நிலைகளை துார்வார வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அதற்கு பதில் இல்லை. ஆவணங்களில், 'சிவில் ஒர்க்' என காட்டப்பட்டுள்ளது. அதற்கு என்ன அர்த்தம்... கட்டடப் பணி என்று தான் அர்த்தம்!
பொதுப்பணித் துறை தான், இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த துறை, என்ன பணிகளை செய்கிறது என்பது தெரியவில்லை. வெறும் அரசாணைகளால் மட்டும், பணிகளை மேற்கொண்டு விட முடியாது. இவ்வாறு, நீதிபதிகள் கூறினர். பின், அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதன் விபரம்:

* தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு, தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
* மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
* நீர் நிலைகளை துார்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைள் என்ன?
* சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், செங்குன்றம் ஏரிகள் வறண்டு வரும்போது, மாற்று ஏற்பாடு என்ன செய்யப்பட்டது? இவ்வாறு, நீதிபதிகள் கேட்டனர்.
அப்போது, அரசு வழக்கறிஞர் ஒருவர், 'தண்ணீர் சேமிப்பு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது' என்றார். அதற்கு நீதிபதிகள், 'சாகப்போகும் போது என்னவோ சொல்வரே, அதுபோல் கடைசி நேரத்தில், விழிப்புணர்வு பிரசாரத்தால், என்ன பலன் ஏற்படும்?' என்றனர்.
அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ''பருவ மழை தவறியதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ௨௭௦ சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும், மூன்றாவது யூனிட் இயங்க துவங்கினால்,

சென்னையின் குடிநீர் தேவைக்கு, பருவ மழையை எதிர்பார்க்க தேவையில்லை,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மாநிலம் முழுவதும் நிலவும் சூழ்நிலை கருதி, விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே, இவ்வழக்கில், பொதுப்பணித் துறை செயலர் சேர்க்கப்படுகிறார். எத்தனை நீர்தேக்கங்களில், துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, பணிகளின் நிலை என்ன என்பது குறித்து, விரிவான அறிக்கை, தாக்கல் செய்யப்பட வேண்டும்.
சில நீர்தேக்கங்கள் மற்றும் ஏரிகள், ஆக்கிரமிப்புகளால் சுருங்கி விட்டதாக, கவனத்துக்கு வந்துள்ளது. ஏரிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும், தண்ணீர் தேக்கம் குறைவதற்கு முக்கிய காரணம். ஏரிகளை பாதுகாக்கும் பொறுப்பு, பொதுப்பணித் துறைக்கு உள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்தும், பொதுப்பணித் துறை செயலர், அறிக்கை அளிக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை அளிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, பொதுப்பணித் துறை செயலர், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் குறித்தும், கூடுதலாக நிலையம் அமைக்க, ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும், அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணையை, வரும், 26ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n.palaniyappan - karaikal ,இந்தியா
19-ஜூன்-201919:44:47 IST Report Abuse

n.palaniyappanபழனியப்பன் காரைக்கால் நமது நாட்டிற்கு கடல் நீரை குடிநீராக்குவது தேவையே இல்லை தண்ணீர் சேமிப்பு சரியாக இருந்தால் எல்லாம் சரியாகும் பெட்ரோல் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளில் இது தேவை. அங்கு தண்ணீர் விலையைவிட பெட்ரோல் விலை குறைவு. இங்கு ஆள்பவர்கள் சிந்திக்கட்டும் உங்களை புதிய ஏரியை குளங்களை வெட்ட சொல்லவில்லை இருக்கின்றதை துார் வாருங்கள். மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் ஏரி யும் குளமும் அதிகமாக வேண்டும். அரசர்கள் ஆண்டபோது வெட்டியதை நாம் பராமரிக்காமல் இழந்து வருந்துகிறோம். நமது சந்ததிகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். வருகின்ற தண்ணீரை கடலில் கலக்கவிட்டு அதை சுத்தபடுத்தி தருகிறேன் என்பது நன்றாக இல்லை.

Rate this:
venkat - chennai,இந்தியா
19-ஜூன்-201919:34:34 IST Report Abuse

venkatஇன்றும் OMR இன்போசிஸ் எதிரே, மின் வாரியம் அருகில், சோழிங்கநல்லூர் ஏரியில் கட்டட வேலை ஜரூராக நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன கட்டடம், யார் அனுமதி என்ற எந்த தகவல் பலகையும் இல்லை. இதே ஏரிக்கரையில் Elcot HCL தாண்டி மேற்கே சென்றால் ஏரி முழுக்க ஆக்கிரமிப்பு கட்டடங்கள், அவற்றிற்கு உதவ புதிதாய் முளைக்கும் சாலைகள்தான். . பல வெளிநாட்டு பறவைகள் வரும் இந்த ஏரி தூர்ந்து வறண்டு தூர் வாராமல் ஆக்கிரமிப்பில் அதிகாரிகள் நீதிமான்கள் கண்ணெதிரில் சுருங்குகிறது.

Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
19-ஜூன்-201918:44:03 IST Report Abuse

Varun Ramesh'தண்ணீர் சேமிப்பு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது' என்று அரசு வழக்கறிஞர் கூறுகிறார். தண்ணீரை சேமிக்க மக்கள் அதிகபட்சம் மழை நீர் சேகரிப்பு ஏற்பாடுகளை செயல்படுத்தலாம். அதற்கப்பால், ஏரி குளங்களை தூர் வாரவும் அணைகளை கட்டவும் உபரி நீர் சமுத்திரத்தில் கலப்பதை தடுத்து நிறுத்தவும் மக்களால் முடியுமா?

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X