ஆதலின் யோகா செய்வோம்! நாளை உலக யோகா தினம்

Added : ஜூன் 20, 2019
Advertisement
ஆதலின் யோகா செய்வோம்! நாளை  உலக யோகா தினம்

இந்திய பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் தனிப்பட்ட கொடையாக யோகா விளங்குகிறது.உடலால் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது. மனதாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலையும், மனதையும் ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கும் யோகா, இந்திய கலாசாரத்தின் அடையாளமாக, பன்னாடுகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது. உலக யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன் 21ல் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி இவற்றின் அடிப்படையில் நாடுகள் அனைத்தும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு யோகா தினத்தை ஆண்டு தோறும் கொண்டாடுகின்றன.வட துருவத்தில் சற்று நீளமாக, தென் துருவத்தில் சற்று குறைந்த நாளாக திகழும் ஜூன் மாதம் 21ம் தேதி ஆதியோகி அல்லது ஆதிகுரு என்று அழைக்கப்படும் மூத்தகுடி சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால் யோகா தினம் வரையறுக்கப்பட்டுள்ளது.மாமுனிவர் பதஞ்சலி'யோக்' என்றால் இணைத்தல் என்று சமஸ்கிருதத்தில் பொருள். 'ஓகம்' என்றால் ஒருங்கிணைத்தல் என்று தமிழில் பொருள். கட்டுப்படாத மனதை, கட்டவிழ்த்தப்பட்ட உடல் உறுப்புகள், ஒருங்கிணைக்கும் தன்மை யோகத்திற்கு உண்டு என்பதால் உடல் ஆரோக்கியம், மன அமைதி வேண்டும் என எதிர்பார்ப்பவர் யோகாவை பின்பற்றத் தொடங்குகின்றனர். நாம் இப்பொழுது பின்பற்றும் யோகக்கலைக்கு முன்னோடிகளாக பதஞ்சலி முனிவரும், திருமூலரும் குறிப்பிட்டு சென்றுள்ளார். யோகா என்பதை ஆசனமாக மட்டும் கருத முடியாது. யோகாவில் ஒரு படிதான் ஆசனம். ஆசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் உட்பட எட்டு வித நிலைகளை கடந்தே உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்பதே யோகாவின் அடிப்படை உண்மை. யோகாவை கற்றுத்தரும் யோகியும், யோகாவை கற்றுக் கொள்ளும் மாணவரும் எட்டுவித யோக படிகளை கடந்து வர வேண்டும்.யோகாவின் '8' படிகள்மனதை சுத்தமாக வைத்திருக்கும் 'இயமம்', செய்யும் செயலில் நேர்மையாக இருக்கும் 'நியமம்', இருக்கை நிலையை உணர்த்தும் 'ஆசனம்', சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் 'பிரணாயாமம்', ஐம்பொறி புலன்களை கட்டுப்படுத்தும் 'பிரத்தியாகாரம்', வெற்றி அடையும் வரை முயற்சி செய்து போராட உதவும் 'தாரணை', மனதை ஒருங்கிணைக்கும் 'தியானம்', மற்றும் இறைவனை போல் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும், என்ற கருணை உணர்வுடன் திகழ, மெய்பொருள் நிலை அடைய உதவும் 'சமாதி' நிலை ஆகிய எட்டு படிகளை படிப்படியே கற்றுத் தேர்ந்தால் மட்டுமே முழுமையான யோக பலன்களை பெற முடியும்.சூரிய வணக்கம் ஏன்யோக பயிற்சியின் ஆரம்பமே சூரிய வணக்கம் தான்.பன்னிரண்டு நிலைகளில் செய்யப்படும் சூரிய வணக்கம் அனைத்து ஆசனங்களுக்கும் அடிப்படையாகும். சூரிய வணக்கத்தின் மூலம் ஆசனம், மூச்சுப்பயிற்சி, தியானம், தாரணை, இயமம், நியமம் என அனைத்து யோக படிகளும் பூர்த்தியடைகின்றன. பன்னிரண்டு நிலைகளாக அடுத்தடுத்து பன்னிரண்டு முறை செய்யப்படும் சூரிய வணக்கம் மூன்று முதல் நான்கு கிலோ மீட்டர் துாரம் ஒருவர் நடப்பதற்கு சமம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அபயம் நீக்கும் யோகாயோகா பயிற்சியினால் எந்தவித அபாய விளைவுகளும் ஏற்படுவதில்லை. ஆகவே தான் அனைவருக்கும் யோகப் பயிற்சி ஏற்றதாக கருதப்படுகிறது. எந்த ஆசனங்களை நம்மால் எளிதாக செய்ய முடிகிறதோ, அந்த ஆசனங்களை மட்டுமே செய்தால் போதுமானது. மலையை போல் நிமிர்ந்து அசையாமல் நிற்கும் 'தாடாசனம்', உடம்பை முன்னோக்கி வளைத்து உள்ளங்கைகளால் தரையை தொடும் 'பாதஹஸ்தாசனம்', தரையில் அமர்ந்து இரண்டு கால்களையும் நீட்டி கைகளால் கால்களை பிடிக்கும் 'பச்சிமோத்தாசனம்', ஒரு காலை மடக்கி மறு காலை நீட்டி இரண்டு கைகளால் கால் விரலைப் பிடிக்கும் 'ஜானுசீராசனம்', இரண்டு பாதங்களையும் தொடையின் மேல் வைத்து தாமரைமலர் போல் சம்மனமிட்டு அமரும் 'பத்மாசனம்'.முழங்காலிட்டு புட்ட பகுதியை குதிகால் மேல் வைத்து இரண்டு கைகளையும் முழங்காலின் மேல் வைத்து நிமிர்ந்து பார்க்கும் 'வஜ்ராசனம்', குப்புறப்படுத்து கைகளை இரண்டு பக்கமும் ஊன்றி புஜங்களை பாம்பு போல் நிமிர்த்தும் 'புஜங்காசனம்', நிமிர்ந்து நின்று இடப்பக்கம் முழுவதும் திரும்பி இடது கால் மற்றும் வலது காலை மாறி மாறி குனிந்தவாறே தொடும் 'திரிகோணாசனம்', ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி மறுகாலை தொடையில் மடக்கி கைகளை மார்பின் முன்பு கும்பிட்டவாறு வைத்து மரம் போல் நிற்கும் 'விருட்சாசனம்', போன்ற எளிய ஆசனங்களை ஆரம்ப நிலையில் செய்து பழகலாம்.நோய் தீர்க்கும் ஆசனம்யோக குருவின் கீழ் யோகா பயிற்சிகளை செய்வது நல்லது. நமக்கு எந்த ஆசனம் எளிதாக வருகின்றதோ, அந்த ஆசனத்தை மட்டும் செய்வது போதுமானது. ஒவ்வொருவரும் தங்கள் உடல் பிரச்னைகளுக்கு ஏற்றாற்போல் கீழ்கண்ட ஆசனங்களை செய்து வருவது நல்லது. வயிற்று புண்களுக்கு - திரிகோணாசனம், சர்வாங்காசனம், ஜானுசீராசனம், புஜங்காசனம். ரத்த சோகைக்கு - சிரசாசனம், பிரணாயாமம், சர்வாங்காசனம், சாந்த ஆசனம். முதுகு வலிக்கு - திரகோணாசனம், சர்வாங்காசனம், பாதஹஸ்தாசனம், தனுராசனம், சேதுபந்தாசனம். தோள்பட்டை வலிக்கு - வீரபத்ராசனம், பார்வட்டாசனம், உஷ்டாசனம், தனுராசனம், திரிகோணாசனம். ஆஸ்துமாவிற்கு - சர்வாங்காசனம், ஜானுசீராசனம், தனுராசனம், சேதுபந்தாசனம், நாடிசுத்தி, கபாலநேத்தி, உஜ்ஜயி.சுகமான சாந்தியாசனம்ரத்தக்கொதிப்பிற்கு - ஹாலாசனம், வீராசனம், சித்தாசனம், பத்மாசனம், கோமுகாசனம், சாந்தியாசனம், பிரணாயாமம், நாடிசுத்தி. மலச்சிக்கலுக்கு - சர்வாங்காசனம், சிரசாசனம், சலபாசனம், மாலாசனம், திரிகோணாசனம், பாவனமுக்தாசனம். சர்க்கரை நோயிற்கு - சிரசாசனம், சர்வாங்காசனம், ஜானுசீராசனம்,அர்த்தமச்சேந்திராசனம், தனுராசனம், சலபாசனம், நவாசனம், மயூராசனம், உட்டியானா, மச்சாசனம், நவுலி, நாடிசுத்தி. வலிப்பு நோயிற்கு - ஹாலாசனம், சர்வாங்காசனம், பச்சிமோத்தாசனம். பார்வை குறைபாட்டிற்கு - சிரசாசனம், சர்வாங்காசனம், சூரிய நமஸ்காரம், நாடிசுத்தி, சண்முகி முத்ரா. குதிகால் வலிக்கு - சர்வாங்காசனம், சிரசாசனம், அதோமுகசுவானாசனம், வீராசனம், மாலாசனம், மச்சேந்திராசனம். துாக்கமின்மைக்கு - சிரசாசனம், சர்வாங்காசனம், பச்சிமோத்தாசனம், நாடிசுத்தி, சூரிய வணக்கம், சாந்தியாசனம்.இயமம் எனும் இமயம்மூட்டுவலிக்கு - பரத்வாஜாசனம், கூர்மாசனம், பேகாசனம், தாடாசனம், விருட்சாசனம், திரிகோணாசனம், ஜானுசீராசனம், சாந்தியாசனம். தைராய்டு குறைபாட்டிற்கு - சிரசாசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், ஜானுசீராசனம், பாவனமுக்தாசனம், மயூராசனம், புஜங்காசனம், உட்டியானா, நவுலி, நாடிசுத்தி, சாந்தியாசனம் ஆகியவற்றை அவரவர் உடலின் தன்மைக்கு ஏற்றாற் போல் பின்பற்றுவது நல்லது. பிறர் பொருள் மேல் ஆசைப்படுதல், பொறாமை, கோபம் போன்ற குணம் உள்ளவர் இயமத்தை கடைப்பிடித்து மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.மேற்கண்ட ஏழு யோக நிலைகளை தாண்டி தான, தர்மம் செய்து எல்லா உயிரையும் சமம் என நினைத்து அனைவரும் ஏற்று கொள்ளும் விதமாக ஈகை குணத்துடன் வாழ நினைத்து 'சமாதி நிலை' என்ற உலகப் பற்றற்ற நிலைக்கு தங்களை கொண்டு வர முடியும் என திருமூலரின் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. யோகாவின் அடிப்படை தன்மையை மாற்றாமல் எட்டு படிகளையும் கடந்து நமது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருந்து பிணியின்றி வாழ சிறு குழுவாக அல்லது தனியாக நம்மால் செய்ய முடிந்த யோகப் பயிற்சிகளை மட்டும் மூச்சுப்பயிற்சி, தியானம், ஆசனம் ஆகியவற்றின் அடிப்படையில் செய்து வந்தால் நோயின்றி வாழ முடியும். யோகம் கற்போம்; ரோகம் வெல்வோம்.-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்சித்தமருத்துவ எழுத்தாளர்மதுரை.98421 67567.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X