புதுடில்லி: லோக்சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர், முன்னாள், எம்.பி., என்பதற்கான அடையாள அட்டையை கேட்டுள்ளதையடுத்து, அவர்களின், பார்லிமென்ட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுஷ்மா சுவராஜ், 67. இவர், 1990ம் ஆண்டிலிருந்து, 2019ம் ஆண்டு வரை, ராஜ்யசபா அல்லது லோக்சபா உறுப்பினராக இருந்து வந்தார். 1997ல், சில மாதங்கள், டில்லி முதல்வராக இருந்தார். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் இருந்த அரசில், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தார். பிரதமர் மோடி தலைமையில், 2014 - 19ல் இருந்த, தே.ஜ., கூட்டணி அரசில், வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.
கடந்த, 2016ல் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு, மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இதனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அவர் போட்டியிடவில்லை. ராஜ்யசபா உறுப்பினராகலாம் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர், முன்னாள், எம்.பி., என்பதற்கான அடையாள அட்டை கேட்டு, பார்லி., செயலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில், லோக்சபா சபாநாயகராக இருந்தவர், சுமித்ரா மஹாஜன், 76. கடந்த, 1989 - 2019ம் ஆண்டு வரை, மத்திய பிரதேச மாநிலம், இந்துார் லோக்சபா தொகுதியின், எம்.பி.,யாக இருந்தார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், போட்டியிட விரும்பவில்லை என, பா.ஜ., தலைமைக்கு, சுமித்ரா தெரிவித்துவிட்டார். இவரும், முன்னாள் எம்.பி.,க்கான அடையாள அட்டைக்கு விண்ணபித்து, அட்டையும் பெற்று விட்டார். இதையடுத்து, சுஷ்மா, சுமித்ராவின், 30 ஆண்டுகால பார்லி., வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE