ராஜ்யசபாவில் மெஜாரிட்டி : மோடி பச்சைக்கொடி| Dinamalar

ராஜ்யசபாவில் மெஜாரிட்டி : மோடி பச்சைக்கொடி

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (17)

புதுடில்லி : ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி மெஜாரிட்டி பெறுவதற்காக தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் இணைய பிரதமர் மோடி பச்சைக் கொடி காட்டி உள்ளார். இதனையடுத்து சந்திரபாபு நாயுடு மீது அதிருப்தியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,க்களை பா.ஜ.,வில் இணைய வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜ்சபாவில் பல காலமாக தேங்கிக் கிடக்கும் முத்தலாக் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியே தீர வேண்டும் என அமித்ஷாவிடம் கூறி உள்ளார் மோடி. இதனால் ராஜ்யசபாவில் நமக்கு கூடுதல் எம்.பி.,க்கள் தேவை எனவும் அமித்ஷாவிடம் மோடி கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ., வட்டார தகவல்களின் படி, அதிருப்தி எம்.பி.,க்கள் பா.ஜ., பக்கம் வந்து விட்டால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தாங்கள் கவனித்து கொள்வதாக அவர்களிடம் அமித்ஷா கூறி உள்ளார்.
தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைய முடிவு செய்திருப்பதாக அறிவிப்பதற்கான வரைவை உயர்மட்ட சட்ட அதிகாரிகள் குழுவை அமைத்து, கடிதமாக தயாரித்து ராஜ்யசபா தலைவர் வெங்கைய்ய நாயுடுவுக்கு அனுப்ப செய்துள்ளார் அமித்ஷா.
சந்திரபாபு நாயுடுவுக்கு மிக நெருக்கமான வெங்கைய்ய நாயுடுவிற்கு, இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியை தந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவிற்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ள சந்திரபாபு நாயுடுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளார், வெங்கைய்ய நாயுடு. ஆனால் சந்திரபாபு நாயுடுவோ, இது பற்றி தனக்கு முன்பே தெரியும் எனவும், அதிருப்தி எம்.பி.,க்களில் 4 பேரில் ஒருவரான ஒய்.எஸ்.சவுத்ரி இது பற்றி தனக்கு தகவல் அளித்து விட்டதாகவும் கூறி உள்ளார்.

எம்.பி.,க்களுக்கு அமித்ஷாவின் அட்வைஸ் :


அதிருப்தி எம்.பி.,க்களான ஒய்.எஸ்.சவுத்ரி, டி.ஜி.வெங்கடேஷ், சி.மெ்.ரமேஷ் மற்றும் ஜி.மோகன் ராவ் ஆகியோர் பாதுகாப்பான முடிவை எடுத்திருப்பதாக கூறி உள்ளார் அமித்ஷா. ஆனால் ராஜ்யசபா எம்.பி.,க்களான தோட்டா சீதாராம லட்சுமி மற்றும் கனகமெதலா ரவீந்திர குமார் ஆகியோர் இவர்களுடன் சேரவில்லை.
இவர்கள் வேறு ஏதாவது ஒரு கட்சியில் இணைந்தால், கட்சி தாவல் தடை சட்டத்தின் படி அதை அங்கீகரிக்க குறைந்தபட்சம் பார்லி.,யில் 3 ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.ராஜ்யசபாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு உள்ள 6 எம்.பி.,க்களில் 4 பேர் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். இதனால் தெலுங்குதேசத்திற்கு 2 இடங்கள் மட்டுமே உள்ளது. ராஜ்யசபாவில் பா.ஜ.,வின் பலம் அதிகரிக்கும் என்பதால் இந்த எம்.பி.,க்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது.
தெலுங்குதேசம் எம்.பி.,க்கள் 4 பேர் இணைந்துள்ளதால் தற்போது ராஜ்யசபாவில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 106 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் 245 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற 18 உறுப்பினர்கள் குறைவாக உள்ளது. அதே சமயம் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 66 இடங்கள் உள்ளது. பா.ஜ., - காங்., உடன் கூட்டணி வைக்காத கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 66 ஆகும். தற்போது ராஜ்யசபாவில் 9 இடங்கள் காலியாக உள்ளன.

சந்திரபாபுவுக்கு தெரிந்தே கட்சி உடைகிறதா?

சவுத்ரி உள்ளிட்ட மற்ற எம்.பி.,க்கள் கட்சியில் இருந்து விலக நினைப்பதை சந்திரபாபு நாயுடு நன்கு அறிவார் என தெலுங்கு தேச கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவில் இருந்து சவுத்ரியுடன் பேசி உள்ள நாயுடு, அவர் விலகுவதை தடுக்கவில்லை.
தெலுங்குதேசம் ஆரம்பம் முதலே ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. அதுனால் மனம் தளரவில்லை என நாயுடு, சவுத்ரியிடம் கூறி உள்ளார். சவுத்ரியும் தனது தரப்பு விளக்கங்களை நாயுடுவிடம் கூறி உள்ளார். பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதால் தெலுங்குதேசம் மீது தனக்கு அதிருப்தி ஏற்பட்டதாக சவுத்ரி கூறி உள்ளார்.தொழிலதிபரான சவுத்ரி, வங்கி கடன் மோசடி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு புறம் ஆந்திராவின் தலைமை மாறியதில் பா.ஜ., மகிழ்ச்சி அடையவில்லை என கூறப்படுகிறது.


தெலுங்குதேசத்திற்கு முடிவு ஆரம்பமாகி விட்டதா ?


தெலுங்குதேசத்தின் வீழ்ச்சி தற்போது தடுக்க முடியாதாகி விட்டது. கப்பு சமூகத்தை சேர்ந்த தெலுங்குதேசம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 20 க்கும் மேற்பட்டவர்கள் காக்கிநாடாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனியாக சந்தித்து பேசி உள்ளனர்.
ஆனால் பா.ஜ., பக்கம் இணைய உள்ளதாக கூறப்பட்டதை மறுத்துள்ள அவர்கள், நாயுடு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு திரும்பிய பிறகே அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., அல்லது வேறு கட்சியில் சேர முடிவு செய்தால், ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை நாயுடு இழக்க நேரிடும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X