வீழ்வதற்கு முன் விழித்துக் கொள்வோம்!
மழை நீர், கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்க, நவீன மேலாண்மை தொழில்நுட்பத்தை உருவாக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வி.பி.ஆர்.மேனன் என்பவர், சமீபத்தில், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு, நீதிபதிகள், வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீர் நிலைகளைப் பாதுகாக்க, நீர் வழித் தடங்களை, ஆறு மாதங்களுக்குள் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்தப் பணிகளை, தலைமைச் செயலர் தலைமையில், தனிப் பிரிவை அமைத்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கடமை தவறும் அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநில போலீசார் ஒத்துழைக்கா விட்டால், ராணுவத்தை கூட வரவழைக்கலாம்
எனவும் உத்தரவிட்டனர்.'நீர் நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால், நம் முன்னோர், ஆறு, குளம், ஏரிகளில் பார்த்த தண்ணீரை, வருங்கால சந்ததி, குப்பிகளில் மட்டுமே பார்க்க வேண்டிய அவல நிலை வரும்' எனவும், நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.இது, ஒருபுறம் இருக்கட்டும்...கடந்த, ௨௦௦௫ ஆண்டிலேயே, நீர் நிலைகளை மீட்க, அவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பைக் கூறியது.'நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அரசு உடனடியாக அகற்ற வேண்டும்; 25 ஆண்டுகளாக ஒருவர் வசம், ஆக்கிரமிப்பு இடம் இருந்தாலும், அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களுக்கு எவ்வித நஷ்ட ஈடும் கொடுக்கத் தேவையில்லை' என,
அதிரடி உத்தரவிட்டது.ஆனால், நீதிபதிகள் என்ன... கடவுளே வந்து ஆணையிட்டாலும், 'தண்ணீர்... தண்ணீர்' என மக்கள், கதறி, கண்ணீர் விட்டாலும், நாங்கள் அசைந்து கொடுக்கப் போவதில்லை என, அரசு, ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, 'தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையே இல்லை' என, 'தமாஷ்' பண்ணுகிறார். அவரை, அமைச்சராக பெற்றது, நம் மாநில மக்கள் செய்த பெரும், 'பாக்கியம்!'கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே, நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறி விட்டோம். இயற்கை வளங்களை அழித்து விட்டோம்; நீர் நிலைகளில், நீர் சேமிப்புக்கு ஆதாரமாக விளங்கும் மணல் முழுவதையும் சுரண்டி விட்டோம்; ஏரி, குளங்களை அழித்து, குடியிருப்புகளை உருவாக்கி விட்டோம்; விவசாய நிலங்களை, தொழிற்சாலைகளுக்கு விற்று விட்டோம்.
விளைவு, இன்று, தமிழகம் எங்கும், 'தண்ணீர்... தண்ணீர்...' என்ற கூக்குரல் எழுந்துள்ளது. ஒரு குடம் தண்ணீருக்காக, இரவு, பகல் பாராமல், மக்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர். இங்கு, எல்லாமே வியாபாரம் தான். விரைவில் தண்ணீருக்கு, ரேஷன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!சென்னையில், பல இடங்களில், சுத்திகரிக்கப்படாத, சாதாரண ஒரு குடம், குடி தண்ணீர், ௧௦ முதல், ௨௦ ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவும் ஒருவருக்கு, இரண்டு குடம் தண்ணீர் தான். இந்நிலை தொடருமானால், தண்ணீருக்காகத் தமிழகத்தில் பெரிய போராட்டம் வெடிக்கும். அந்த காலம், வெகு தொலைவில் இல்லை!நம் முன்னோர், ஏரி, குளம், ஆறு போன்ற நீர் ஆதாரங்களை, தங்கள் கண்களை போல பாதுகாத்து, பராமரித்து வந்தனர். தண்ணீர் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்திருந்தனர். ஒரு கிராமத்தை உருவாக்கும் போதே, நீர் ஆதாரங்களையும் அங்கு உருவாக்கினர்.
நீர் நிர்வாகத்தில், அவர்கள் பல நுணுக்கங்களையும், தொழில் நுட்பங்களையும் அறிந்திருந்தனர். நீர் சமூகம் என்ற ஒரு தனி சமூகத்தை உருவாக்கி, நீர் மேலாண்மையை சிறப்பாக நிர்வகித்தனர்.
நதிகளில் ஓடும் நீரை, ஏரிகளுக்கு கொண்டு சென்று, அதை பக்குவமாகப் பாதுகாத்து, விளை நிலங்களுக்கு உயிர் ஊட்டி, உணவு உற்பத்திக்கு உறுதுணையாய் இருந்தனர்.நீர் சமூகத்தில், பல விதமான பிரிவுகள் உருவாக்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டன.ஆற்று நீரை, நீர் நிலைகளில் சேர்த்தோரை, 'நீரணிக்காரர்கள்' என்றும்; நீர் நிலைகளில் சேர்ந்த நீரை, பாதுகாத்தோரை, 'நீர்க்கட்டியாளர்கள்' என்றும் அழைத்தனர்.ஏரியின் உயிராகக் கருதப்படும், கரையைக் காத்தோரை, 'கரையாளர்கள்' என்றும்; ஏரியின் முழுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியோரை, 'குளத்துக் காப்பாளர்' என்றும்; ஏரியின் துாய்மையைப் பராமரித்தோர் மற்றும் ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர், கடைசி வயல் வரை சென்றடைகிறதா என, கண்காணித்தோரை, 'நீர் வெட்டியாளர்கள்' என்றும், பட்டம் அளித்து கவுரவித்தனர்.
மேலும், மதகு, மடை, குமிழி, துாம்பு போன்ற, நீர் வழிகளை பராமரித்தோரை, 'மடையாளர்கள்' என, நம் முன்னோர் அழைத்தனர். நீர் சமூகத்தினர் ஒவ்வொருவரும், இன்று இருக்கும் அரசு பணியாளர்களைப் போல அல்லாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினர்.
'தியாகம் தான் தெய்வீகம்; சேவை தான் லட்சியம்' என்பதை, வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர்.ஆனால், பழந்தமிழர்களின் நீர் சமூகம், இன்று காணாமல் போய் விட்டது. குளம் வெட்டினால் தான், நீர் பெருகும் என்பதையும், மழை நீர் முழுவதையும் சேர்த்து, சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்தினால் தான், நீர் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்பதையும், பெரும்பாலானோர் மறந்து விட்டனர்.'நீர் வளம் இன்றி, நில வளம் இல்லை; நில வளம் இன்றி, மனிதனின் உயிர் நலம் இல்லை' என்பதையும், நம் முன்னோர் அறிந்து, நீர் நிலைகளைப் பாதுகாத்தனர்.'குளம், கலிங்கு, வரத்துக்கால், பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம், ஆயக்கட்டுப் பகுதிகளை உருவாக்குதல், பொதுக் கிணறு அமைத்தல் ஆகிய, ஐந்து அம்சங்களுடன் ஏரியை அமைப்பவன், சொர்க்கத்திற்குப் போவான்' எனக் கூறுகிறது, 'சிறுபஞ்சமூலம்' எனும், சங்க காலத்து நுால்.'வேந்தனே நீ மறு உலகத்தில் பெருஞ்செல்வத்தோடும், பெரும் பேற்றோடும் இருக்க விரும்புகிறாயா... இந்த உலகம் முழுவதையும் வென்று, பேரரசன் ஆக விரும்புகிறாயா... உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைத்து நிற்க வேண்டும் என்று விரும்புகிறாயா?'அப்படியானால், நான் சொல்வதை கேள். நீர் வளத்தையும், நில வளத்தையும் பெருக்கியோர் தான், மக்கள் வளத்தைப் பெருக்கியோர் ஆவர். ஆகவே, நீ, நாடு முழுவதும் நீர் நிலைகளைப் பெருக்குவாயாக! இதை செய்வோர், மூவகை இன்பத்தையும் பெற்று புகழ் அடைவர்!'இவ்வாறு, ௨,௧௦௦ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, குடபுலவியனார் என்ற புலவர், தன் வேந்தன், பாண்டியன் தலையாலங்கானத்து செறு வென்ற நெடுஞ்செழியனுக்கு கூறிய அறிவுரைகள்.சங்க காலத்தில், நீர்ப் பாசனத் தொழில் நுட்பம், நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நீர்த் தேக்கங்களுக்குப் பதிலாக, தொடர் ஏரிகளை அமைத்தனர். ஆற்றிலிருந்து பெரும் அளவில் வரும் நீரை, ஏற்கும் வகையில், ஏரிகளை அமைத்தனர். வரத்துக் கால்வாய்களையும், பாசனக் கால்வாய்களையும் ஒழுங்குற வடிவமைத்தனர்.
மதகு, கலிங்கு, மண் கரை ஆகியவற்றை, சிறந்த தொழில்நுட்பத்தோடும், உயர்ந்த தரத்தோடும் அமைத்தனர். நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு, நம் முன்னோர், எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதற்கு, இவற்றை விட, வேறு சான்றுகள் தேவையில்லை.
ஏரிகளை பாதுகாக்க, அவர்கள் கடைப்பிடித்த தொழில்நுட்பங்களும், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதில், அவர்கள் கடைப்பிடித்த, நீர் மேலாண்மைக் கோட்பாடுகளும், இன்றைக்கும் பின்பற்றப்பட்டு இருக்குமேயானால், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கியிருக்க முடியும்.இன்று, தமிழகத்தில் கடந்த, 4௦ - 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கிராமங்களில், நிலத்தடி நீர், 1,000 அடிக்கும் கீழ் சென்று விட்டது. கடந்த, ௧௯௮௫களில் சென்னையில், ௨௦ அடியில் கிடைத்த தண்ணீர், இன்று, ௩௦௦ அடிகளில் கூடக் கிடைப்பதில்லை.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது போல, ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து, போர்க்கால அடிப்படையில், நீர் நிலைகள் அனைத்தையும் புனரமைக்க, அரசு உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.எதிர்வரும், தென் மேற்குப் பருவ மழையைக் கருத்தில் கொண்டு, கண் எதிரில் இருக்கும், சிறு நீர்நிலைகளையும், தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, பராமரித்து பாதுகாக்க, முயற்சிக்க வேண்டும்.ஏரி, குளங்களில் கழிவு நீர் விழுவதையும், கழிவுகள் கொட்டுவதையும், ஆக்கிரமிப்பு செய்வதையும், அறவே தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. உயிர் கொடுக்கும் நீரை, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தை ஆரம்பித்து, கிராமத்தில் உள்ள, அனைத்து நீர் நிலைகளையும், தங்கள் உயிரைப் போல, பாதுகாத்து வர வேண்டும். 'அரசு பார்த்துக் கொள்ளும்' என நினைக்காமல், நாம் செய்ய வேண்டிய கடமைகளை, அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும்.
சரியான திட்டமிடலும், தொலைநோக்குப் பார்வையும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், ௨௦௨௫ம் ஆண்டில், இந்தியாவில், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும்; ௨௦௭௦ல் தமிழகம் பாலைவனமாக மாறும் என்றும், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.அடுத்த உலகப் போர் என்று, ஒன்று வருமேயானால், அது தண்ணீருக்காகத் தான் இருக்கும் என்ற அச்சமும், உலகெங்கும் நிலவி வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும், மிகவும் அவசியமானது, நீர் மேலாண்மைத் திட்டம்.'நீர் இன்றி அமையாது உலகு' என்பதையும் மனதில் கொண்டு, சிறப்புக் கவனத்துடன், உடனடியாக அரசும் செயல்பட்டால் தான், தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும்.
நம் நாட்டின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு, 'நீர்த் தேக்கங்களும், அணைக்கட்டுகளும் தான், நவீன இந்தியாவின் கோவில்' என்றார். நம் ஆட்சியாளர்கள் மற்றும் அலட்சியமாக இருக்கும் பொதுமக்களின் காதுகளுக்கும் இது எட்ட வேண்டும். வீழ்வதற்கு முன், விழித்துக் கொள்ளலாமே!தொடர்புக்கு:இ - மெயில்:gomal_44@yahoo.com