திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, குடிநீரின்றி பரிதவித்த கிராம மக்களுக்கு, இளைஞர்கள் திரண்டு, ஆழ்துளை கிணறு அமைத்து, ஊருக்கே தண்ணீர் வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் அருகே, பள்ளிச்சந்தல் ஊராட்சி உள்ளது. பெண்ணை ஆற்றை ஒட்டிய கிராமம் இது. ஒரு புறம் பெண்ணை ஆறு, மறுபுறம் சாத்தனுார் அணைக்கட்டில் இருந்து வரும் வலது புற கால்வாய் தண்ணீர் என, இக்கிராமம் எப்போதும் செழிப்புடன் இருக்கும்.
வறட்சி
தற்போது நிலவும் கடும் வறட்சியால், மூன்று மாதங்களாக, பெண்ணை ஆறு மற்றும் ஏரிகள் வறண்டன. இதனால், ஊருக்கு குடிநீர் வழங்கிய ஆழ்துளை கிணறும் வற்றியது. குடிக்கத் தண்ணீர் இன்றி, பழைய பள்ளிச்சந்தல் கிராமத்தில் இருந்து குடிநீர் பெற்று, கிராம மக்கள் பயன்படுத்திவந்தனர்.தண்ணீர் பிரச்னை தீவிரம் அடைந்ததால், இரண்டு மாதங்களாக, அவர்களும் தண்ணீர் வழங்குவதை நிறுத்தி விட்டனர்; அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், தீர்வு கிடைக்கவில்லை. குடத்துடன், தண்ணீருக்காக, பல, கி.மீ., அலைந்து திரிந்தனர்.'இனி அரசை நம்பி பயனில்லை' என்பதை உணர்ந்த கிராமத்து இளைஞர்கள், அப்துல் கலாம் நற்பணி மன்ற தலைவர், மணிகண்டன் தலைமையில் திரண்டு, பொதுமக்களிடம் பணம்வசூலித்து, ஆழ்துளை கிணறு அமைக்க முடிவுசெய்தனர்.
நிலத்தடி நீரைகண்டறியும் ஆய்வாளரை அழைத்து, தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அங்கு, 250 அடி ஆழத்திற்கு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.சொந்த செலவுபின், அதில் மோட்டார் பொருத்தி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி, நேற்று வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்தனர்.அரசை நம்பி இருந்தால், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த மக்கள், 1.80 லட்சம் ரூபாய் மதிப்பில், சொந்த செலவில், ஆழ்துளை கிணறு அமைத்து, தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்தனர்.
அப்துல் கலாம் நற்பணி மன்ற தலைவர், மணிகண்டனை பாராட்ட விரும்புவோர், 98435 14157 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.