நாமக்கல்: தமிழக அரசின், வருவாய் நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில், விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான விபரங்களை, இ-அடங்கல் இணைய தளத்தில் பதிவேற்றி, அரசு திட்டங்களை அவர்களுக்கு விரைவில் கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் இ-சேவை இணைய தளத்தில் விவசாயிகள் நிலம், சாகுபடி பயிர்கள் உள்ளிட்ட விபரங்களை, இ-அடங்கல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த, ஒருநாள் பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள, 322 கிராம ஊராட்சிகளில், வேளாண் பணிகள் செய்துவரும் விவசாயிகள், அவர்களின் நிலம் அளவீடு, அனைத்து வகையான பயிர் சாகுபடி, சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளிட்ட விபரங்களை, வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,க்கள் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்து மின் அடங்கல் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும். வரும் காலங்களில், அரசு வழங்கும், இ-சேவையுடன், இ-அடங்கல் சேவை படிப்படியாக அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார். சப் -கலெக்டர் கிராந்திகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தாசில்தார்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.