நாமக்கல்: நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், 2019-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில், 25 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழு நியமிக்கப்பட்டது. செயலாளர் பதவிக்கு, தற்போதைய செயலாளர் அருள், மீண்டும் மனு தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த ரவி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற நிர்வாகிகள், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, வரும், ஜூலை, 4ல் நடக்கவுள்ளது. இந்நிலையில், அருள், சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் நாமக்கல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'ரவி என்பவரை போட்டியின்றி செயலாளராக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால், தன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து, செயலாளர் பதவிக்கு தன்னை ஒரு வேட்பாளராக ஏற்று, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டப்பதிவாளர், தேர்தல் குழு தலைவர் மற்றும் ரவி ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளார். அதையடுத்து, தேர்தல் குழு தலைவர் உள்ளிட்ட, 28 பேர், ஜூலை, 10ல், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கில், 'போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ரவி, பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது' என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.