சென்னை:'நான் எடுத்த கூட்டணி முடிவு சரியானதுதான்; அதை யாரும் விமர்சிக்க வேண்டாம்' என தே.மு.தி.க. மாவட்ட செயலர்களை பிரேமலதா எச்சரித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. போட்டியிட்டது. இதில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் உட்பட நான்கு வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர்.
தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க மாவட்ட செயலர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நேற்றைய கூட்டத்தின் போது மாவட்ட செயலர்களை தவிர மற்றவர்கள் வரவில்லை. விஜயகாந்திற்கு பதிலாக அவரது மனைவி பிரேமலதா தலைமையில் இக்கூட்டம் நடந்தது. ஐந்து மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட செயலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் உள்பட பலரும், 'தேர்தல் தோல்விக்கு கூட்டணியும் சரியான தொகுதிகளை கேட்டு பெறாததும் முக்கிய காரணம்' என குற்றம் சாட்டினர்.
இறுதியாக பிரேமலதா 30 நிமிடங்கள் பேசியுள்ளார்.
அவர் பேசியது குறித்து தே.மு.தி.க. வட்டாரங்கள் கூறியதாவது: கூட்டணி தொடர்பாக நானும்
விஜயகாந்தும் எடுத்த முடிவு சரியானது தான். நம் கூட்டணி கட்சிதான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியை தொடர்கிறது. நம்மால் மட்டுமே அந்த கட்சிகளிடம் பேசி காரியம் சாதிக்க முடியும்.
எதிர்கட்சிகள் பெரிய வெற்றி பெற்றாலும் அவர்களால் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது. எனவே கூட்டணி பற்றி கருத்து சொல்வதை நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் இதே கூட்டணி பலத்துடன் வெற்றி பெறுவதற்கு வியூகம் வகுக்க வேண்டும்.
இங்கு பேசும் தகவல்கள் பத்திரிகைகளுக்கு கசிந்து விடுகின்றன. அப்படி தகவல் அளிக்கும் நபர்களை கண்டுபிடிக்க ரகசிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசியுள்ளார்.