கல்வித்துறையில கறாரு... லஞ்ச ஒழிப்புத்துறை உஷாரு! | Dinamalar

கல்வித்துறையில 'கறாரு'... லஞ்ச ஒழிப்புத்துறை உஷாரு!

Added : ஜூன் 24, 2019
Share
சிங்காநல்லுார் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில் திருச்சி ரோட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ராமநாதபுரம் தாண்டியதும், போக்குவரத்து நெருக்கடி. வாகன ஓட்டிகள் திணறி, திணறி ஊர்ந்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை பாலம் கட்டுற வேலையை செய்து கொண்டிருந்தது.அதைப்பார்த்த சித்ரா, ''என்னப்பா இது, பாலம் கட்டுறது 'ஓகே'. 'கர்டர்' தயாரிக்கிற வேலையை
 கல்வித்துறையில 'கறாரு'... லஞ்ச ஒழிப்புத்துறை உஷாரு!

சிங்காநல்லுார் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில் திருச்சி ரோட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ராமநாதபுரம் தாண்டியதும், போக்குவரத்து நெருக்கடி. வாகன ஓட்டிகள் திணறி, திணறி ஊர்ந்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை பாலம் கட்டுற வேலையை செய்து கொண்டிருந்தது.அதைப்பார்த்த சித்ரா, ''என்னப்பா இது, பாலம் கட்டுறது 'ஓகே'. 'கர்டர்' தயாரிக்கிற வேலையை ஊருக்கு வெளியே செய்யலாம் இல்லையா, ரோட்டுலயே வச்சு செஞ்சுக்கிட்டு இருந்தா, இப்படி நெருக்கடி வரத்தானே செய்யும். இதையெல்லாம், 'ஹைவேஸ்' அதிகாரிங்க பார்க்க மாட்டாங்களா,'' என, அலுத்துக் கொண்டாள்.குறுக்கிட்ட மித்ரா, ''இதுக்கெல்லாம், சிட்டி முழுக்க, கலெக்டர் ஒரு 'ரவுண்ட்' வலம் வரணும்னு நெனைக்கிறேன். 'பீக் ஹவர்ஸ்'ல, முக்கியமான அதிகாரிங்க, டூவீலர்லயோ அல்லது காரிலோ சிட்டிக்குள்ள வலம் வந்தா, மக்கள் படுற கஷ்டம் தெரியும்,'' என்றாள்.சுங்கம் பகுதியில், ஹெல்மெட் அணியாம பைக்கில் வந்தவர்களை ஓரங்கட்டிய போலீசார், அபராதம் வசூலித்தனர். அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, காதல் ஜோடியை மிரட்டி லஞ்சம் வாங்கிய விவகாரத்துல, போலீஸ்காரங்களை 'சஸ்பெண்ட்' செஞ்சிட்டாங்களாமே,'' என்றாள்.''அதுவா, நானும் கேள்விப்பட்டேன். பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துல, ஒரு காதல் ஜோடியிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்காங்க. அந்த ஜோடி, எஸ்.பி., சுஜித்குமாரை நேர்ல சந்திச்சு, ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டுனதா புகார் சொல்லியிருக்கு.''உடனே, சம்பந்தப்பட்ட போலீஸ் தலைமை காவலர் சுரேஷ் என்பவரை 'சஸ்பெண்ட்' செஞ்சு, 'ஓபன்' மைக்குல எஸ்.பி., உத்தரவிட்டிருக்காரு. இன்னொரு போலீஸ்காரர் பழனிசாமியை, ஆயுதப்படைக்கு அனுப்பியிருக்காரு...''''அப்புறம்...''''ஓபன் மைக்குல எஸ்.பி., உத்தரவு பிறப்பிச்சதுனால, போலீஸ் வட்டாரத்துல பரபரப்பு ஏற்பட்டுருக்கு. போலீஸ்காரங்க மத்தியில பீதி ஏற்பட்டிருக்கு. அடுத்து, யாரு தலை உருளப்போகுதோனு மிரண்டு போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.வாலாங்குளம் பைபாஸில் ஸ்கூட்டரை திருப்பி, உக்கடம் நோக்கி பயணித்தனர். குளக்கரையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது.அதைபார்த்த மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன்ல கமிஷனரும், டெபுடி கமிஷனரும் இந்த ஊருக்கு ஏதாவது செய்யணும்னு நெனைக்கிறாங்க. ஆனா, ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டிலும் ஒருங்கிணைப்பு இல்லாம இருக்கு,'' என்றாள்.''கார்ப்பரேஷன்ல, அப்படி என்ன பஞ்சாயத்து ஓடுது...'' என, நோண்டினாள் சித்ரா.அதற்கு, ''வாலாங்குளத்துல ரயில்வே தண்டவாளத்தை கடந்ததும், ஏகப்பட்ட ஓட்டு வீடு இருக்கு. அதை காலி செஞ்சு கொடுத்தா தான், இன்ஜினியரிங் செக் ஷன்காரங்க வேலை செய்ய முடியும். வீடுகளை இடிக்க வேண்டியது, 'டவுன் பிளானிங் செக் ஷன்' வேலை. இவுங்களோ, 'பில்டிங் அப்ரூவல்' கொடுக்குறதுல மட்டுமே கவனம் செலுத்துறாங்க. மத்த விஷயத்த கண்டுக்காம விட்டுடுறாங்க. இதுனால, 'ஸ்மார்ட் சிட்டி' ஒர்க் ரொம்பவே 'லேட்'டாகிட்டு வருதாம்,'' என்றாள் மித்ரா.அப்போது, அரசு பணிமனையை கடந்து சென்றனர்.அதைப்பார்த்த சித்ரா, ''போக்குவரத்து அதிகாரி எப்போதுமே போதையில் இருக்காராமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.அதற்கு மித்ரா, ''பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் போதையில் இருக்கக்கூடாதுங்கறது விதிமுறை. அவுங்களை, 'செக்' பண்றதுக்கு 'டிப்போ'க்கள்ல, 'பிரீத் அனலைசர்' சோதனை நடத்தணுமுனு உத்தரவு இருக்கு.''உக்கடம் 'டிப்போ'வுல 'செக்' பண்றதில்லை. ஏன்னா, அந்த 'டிப்போ'வுல இருக்குற 'அசிஸ்டெண்ட்' அதிகாரி எப்போதுமே போதையில தான் இருக்காராம். டிரைவர், கண்டக்டர்கள சோதனை நடத்துனா, பூமராங் மாதிரி, அவரையே, திரும்ப தாக்குமே. அதனால, சோதனை நடத்தாம இருக்காங்க,'' என்றாள்.அப்போது, மித்ராவின் மொபைல் போனுக்கு மணிவண்ணன் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. 'சைலன்ட் மோடு'க்கு மாற்றி விட்டு, பேச்சை தொடர்ந்தாள்.உக்கடத்தை கடந்து, பேரூர் பைபாஸில் ஸ்கூட்டரை செலுத்தினாள் சித்ரா.''அக்கா, பெரிய குளத்தை சூப்பரா மாத்திக்கிட்டு இருக்காங்க. அருமையான பொழுதுபோக்கு இடம் உருவாகப் போகுது,'' என, பெருமிதப்பட்டாள் மித்ரா.''மித்து, பொறுமையா இரு. எதுவுமே நிரந்தரம் கிடையாது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல, எட்டு குளத்தையும் மேம்படுத்தணும்னு 'பிளான்' போட்டிருந்தாங்க. இப்ப, குளத்துல இவ்ளோ கோடியை கொட்டணுமான்னு யோசிக்கிறாங்க. அநேகமா, மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத குளங்களை, 'லிஸ்ட்'டுல இருந்து எடுக்குறதுக்கு வாய்ப்பு இருக்காம்,'' என்றாள் சித்ரா.''ஓ... அப்படியா, இருந்தாலும், ஆக்கிரமிப்பு ஏற்படாத அளவுக்கு, சுத்தியிலும் இரும்பு தடுப்பு அமைச்சாங்கன்னா, நல்லா இருக்கும்,'' என்றாள் மித்ரா.உக்கடத்தில் இருந்து பெரிய கடை வீதி வழியாக, ரயில்வே ஸ்டேஷன் நோக்கிச் சென்றனர்.சி.இ.ஓ., அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''அக்கா, நம்மூர்ல ஸ்கூலுக்கு அங்கீகாரம் வாங்குறதுக்கும், புதுப்பிக்கறதுக்கும் ஏஜன்ட் நியமிச்சு, வசூல் வேட்டை நடத்துறாங்களாம்,'' என்றாள்.''அடப்பாவிகளா...'' வாயைப்பிளந்தாள் சித்ரா.''அங்கீகாரம் வாங்குறதுக்கு ஒரு லட்சமாம்; புதுப்பிக்கறதுக்கு ரூ.50 ஆயிரமாம். கரன்சி கொடுத்தா மட்டுமே வேலை நடக்குதாம். பிரைவேட் ஸ்கூல் தலைமை ஆசிரியர்கள் ஒன்னா சேர்ந்து, சி.இ.ஓ., ஆபீசுல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. இருந்தாலும், இதுநாள் வரைக்கும் நோ ஆக் ஷன்...'' என, அலுத்துக் கொண்டாள் மித்ரா.அப்போது குறுக்கிட்ட சித்ரா, ''தன்னார்வ தொண்டு அமைப்பினர், ரொம்பவே குஷியா இருக்காங்களாமே...'' என, கேட்டாள்.''ஆமாக்கா, 'நம்ம கோவை'ன்னு ஒரு 'வாட்ஸ்அப்' குரூப் இருக்கு. இதுல, அரசு துறை உயரதிகாரிங்க பலரும் இருக்காங்க. தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவங்க, தொழில்துறையை சேர்ந்தவங்களும் இருக்காங்க. இவுங்க, கலெக்டர் ராஜாமணியை சந்திக்கிறதுக்கு நேரம் கேட்டுருக்காங்க.''அவரோ, ஒரு சிறப்பு கூட்டத்தையே நடத்தியிருக்காரு. ஏகப்பட்ட பேரு கலந்துக்கிட்டாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா கோரிக்கை முன்வச்சாங்க. கலெக்டரும் ரொம்ப ஆர்வமா, கோரிக்கையை கேட்டுக்கிட்டாரு. தொண்டு நிறுவனத்துக்காரங்க ரொம்ப குஷியாகிட்டாங்க. சில பிரச்னைகளுக்கு உடனடி தீர்வும் கெடைச்சிருக்கு...''''கேக்குறதுக்கு நல்லா இருக்கு. நடவடிக்கை எடுத்தா தேவலை. இதே மாதிரி ஊருக்குள்ள அந்தரத்துல நிக்குற பாலங்களை கணக்கெடுத்து கட்டுறதுக்கு ஏற்பாடு செஞ்சாருன்னா, கலெக்டரோட திறமையை பாராட்டலாம்,'' என்ற மித்ரா, ''கலெக்டர் ஆபீசுல ஒவ்வொரு வாரமும் நடக்குற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை, சில கட்சிக்காரங்க, 'மிஸ்யூஸ்' பண்றாங்களாமே...'' என, இழுத்தாள்.அதற்கு சித்ரா, ''ஆமாப்பா, அப்பாவி மக்கள ஏமாத்தி பணம் சம்பாதிக்கிறாங்க. மனு கொடுத்தா பட்டா கெடைச்சுடும்; உதவித்தொகை கெடைச்சுடும்னு சொல்லி, விவரம் தெரியாத அப்பாவிகளை அழைச்சுட்டு வந்து, மனு கொடுக்க ஏற்பாடு பண்றாங்க. கூட்டம் சேர்த்துட்டு வர்றவங்களை, 'வார்னிங்' செஞ்சா நல்லா இருக்கும்,'' என்றாள்.போலீஸ் கமிஷனர் ஆபீசை கடந்ததும், பேக்கரி முன் ஸ்கூட்டரை ஓரங்கட்டி, இஞ்சி டீ ஆர்டர் கொடுத்தனர்.டீயை உறிஞ்சிய மித்ரா, ''நீதித்துறை பணியாளர் தேர்வை கடைசி நேரத்துல ஒத்திவச்சிட்டாங்களே... ஏதாச்சும் காரணம் இருக்குமே...'' என, கேட்டாள்.''காரணம் இல்லாம இருக்குமா, எல்லா மாவட்டத்திலும் இதே மாதிரி ஆள் எடுக்குறாங்க. ஒருத்தரே, பல மாவட்டங்களுக்கு 'அப்ளிகேஷன்' போட்டு, தேர்வு எழுதுறாராம். நேர்முகத்தேர்வு நடத்தும்போது தான் வெளிச்சத்துக்கு வருதாம். அதனால, மாநில அளவுல ஒரே நாள்ல தேர்வு நடத்துறதுக்கு முடிவு செஞ்சிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்கு மித்ரா, ''தள்ளிப்போட்டதெல்லாம் சரிதான். ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொல்லியிருந்தா, விண்ணப்பதாரர்களுக்கு அலைச்சல் இல்லாம இருந்திருக்குமே,'' என்றாள்.டீயை குடித்து முடித்ததும், ரேஸ்கோர்ஸ் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.அப்போது, சுகாதாரத்துறை வாகனம் கடந்து சென்றது.அதை கவனித்த மித்ரா, ''ஏகப்பட்ட புகார் வந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்காங்க,'' என, பொடி வைத்து பேசினாள்.''யாருப்பா, அவ்ளோ பெரிய ஆளு,''''சுகாதார துறையில முக்கியமான பொறுப்புல இருக்காரு. டிரைவர் பணியிடம் நிரப்புறதுல ஊழல் செஞ்சிருக்காரு. கரன்சி இல்லாம எந்த பைலிலும் கையெழுத்து போட மாட்டாரு. ஆனைமலை மருத்துவமனைக்கு ஒதுக்குன நிதியில கை வச்சதால, நிதிக்குழுவே விசாரணை நடத்திருக்கு. மேலிடத்துக்கு வேண்டப்பட்டவரா இருக்கறதுனால, நடவடிக்கை எடுக்காம இருக்காங்க,'' என்றாள் மித்ரா.''யாருன்னு, கண்டுபிடிச்சிட்டேன், மித்து''''சொல்லுங்க... பார்க்கலாம்... சரியான்னு சொல்றேன்...''''இவருக்கு முன்னாடி இருந்த அதிகாரிக்கு, 'டிரான்ஸ்பர்' ஆர்டரை வாங்கிட்டு வந்து, அவர் கையில் கொடுத்த, 'லேடி'தானே...'' என்றாள் சித்ரா.''அடடே... சூப்பர்,'' என, சர்ட்டிபிகேட் கொடுத்த மித்ராவுக்கு, தோழியிடமிருந்து போன் அழைப்பு வந்தது.இருவரும் வீட்டை வந்தடைந்தனர். தோழியிடம் பேசிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர்.'டிவி'யில் இட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை பற்றிய செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தது.''ஏம்ப்பா, கார்ப்பரேஷன்ல, 'டிரான்ஸ்பர்' லிஸ்ட் ரெடியாகுதுன்னு சொன்னியே... இன்னும் வெளியிடாம இருக்காங்களே... ஏதும் எதிர்பார்க்குறாங்களா...'' என, நோண்டினாள் சித்ரா.''அதிகாரிகள் லிஸ்ட், கமிஷனர் டேபிளில் இருக்கு; அவரை பார்க்கப் போனபோது, நானே பார்த்திருக்கேன். வேலையை தனித்தனியா பிரிச்சு, அதிகாரிகளுக்கு பொறுப்பு கொடுக்க திட்டமிட்டு இருக்காங்க. எந்த வேலைக்கு எந்த அதிகாரி பொருத்தமா இருப்பாருன்னு யோசிச்சு யோசிச்சு, 'லிஸ்ட்' ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க.''லேடி அதிகாரிங்க நெறைய்ய பேரு இருக்கறதுனால, கஷ்டமான வேலையை ஒதுக்குறதுக்கு யோசிக்கிறாங்க. அதே நேரத்துல, அவுங்களுக்கும் வேலை கொடுத்தாகணும். என்ன 'ஒர்க்' கொடுக்கறதுன்னு, முடிவு செஞ்சு வச்சிருக்காங்க. ஒரு அதிகாரிக்காக 'லிஸ்ட்' வெளியிடாம இருக்காங்க. அநேகமா, இந்த மாசக்கடைசியில, ஒவ்வொருத்தருக்கும் 'ஆர்டர்' வரும்னு சொல்றாங்க.''''ஓ... அப்படியா... அந்த அதிகாரி யாருன்னு எனக்கு தெரியுமே...'' என, குதுாகலித்தாள் சித்ரா.''சொல்லுங்க... பார்ப்போம்...''''வாங்குற லஞ்சப்பணத்தை வாரம் தவறாம, தங்கக்காசு வாங்கி குவிக்கிறாரே... அவருதானே...''''எப்படிக்கா... அவரேதான்...'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X