மதுரை : அங்கீகாரம் இல்லாத பிளாட்கள், 'லே-அவுட்'களை வரன்முறைப்படுத்த, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறையை மீண்டும் துவக்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கோவில்பட்டி பொறியாளர் மதிவாணன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனையிடங்கள்(பிளாட்கள்), திட்ட அமைப்பு வரைபடம் (லே-அவுட்) மற்றும் கட்டுமானங்களை பத்திரப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அங்கீகாரம் இல்லாத பிளாட்கள், 'லே-அவுட்'களை முறைப்படுத்த தமிழக அரசு 2017 ல் அரசாணை வெளியிட்டது. இதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை துவக்கப்பட்டது. இதன்படி 35 சவீத அங்கீகாரமற்ற பிளாட், 'லே-அவுட்'கள் வரன்முறைப்படுத்தப்பட்டன. 65 சதவீதம் வரன்முறைப்படுத்தப்படவில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு 2018 நவ.,16 ல் முடிவுற்றது. பதிலாக சி.எம்.டி.ஏ., அல்லது டி.டீ.சி.பி.,அலுவலகங்களை அணுக வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் அங்கு செல்வது சாத்தியமற்றது. மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை மீண்டும் துவக்காவிடில், அங்கீகாரமற்ற பிளாட், 'லே-அவுட்'களை முறைபடுத்த இயலாது. விதிமீறல் தொடர வாய்ப்புள்ளது. அங்கீகாரம் இல்லாத பிளாட்கள், 'லே--அவுட்'களை வரன்முறைப்படுத்த, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறையை மீண்டும் துவக்க பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மதிவாணன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர், நகர் ஊரமைப்புத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூலை 16 க்கு ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE