திருச்சி:மணப்பாறை போக்குவரத்து இன்ஸ்பெக்டர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன் சொந்த செலவில், 50 பேருக்கு, 'ஹெல்மெட்' வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.
திருச்சி, மணப்பாறை நகரில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர், பாண்டிவேலு. சென்னையில் பணியாற்றிய இவர், ஒராண்டுக்கு முன், மணப்பாறைக்கு மாறுதலாகி வந்தார்.இங்கு வந்தது முதல், போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தினமும், சாலையோரத்தில் நடத்தி வருகிறார். மேலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடமும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.'தலைகவசம் உயிர் கவசம்' என, நேற்று முன்தினம், தன் சொந்த செலவில், இருசக்கர வாகன ஓட்டிகள், 50 பேருக்கு, இலவசமாக, ஹெல்மெட் வாங்கி வழங்கியுள்ளார். நிகழ்ச்சியில், மணப்பாறை, டி.எஸ்.பி., ஷர்மு பங்கேற்று, வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினார்.மேலும், 500க்கும் மேற்பட்ட மாணவர்களை வைத்து, போக்குவரத்து விதிமுறை தொடர்பான பேரணியையும், பாண்டிவேலு நடத்தினார்.மணப்பாறை கடைவீதியில், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில், குடிநீர் வினியோகமும் செய்து, மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறார். இதற்காக, தினமும், தன் செலவில், இரண்டு தண்ணீர் கேன்களை வாங்கி, ஜீப்பில் எடுத்து வந்து, முக்கிய இடங்களில் வைத்து செல்கிறார்.வித்தியாசமான அணுகுமுறையால், இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு மீது, மணப்பாறை மக்களுக்கு, தனி மரியாதை ஏற்பட்டுள்ளது. இவரை பாராட்ட விரும்பினால், 80724 72320 என்ற, மொபைல் எண்ணில் அழைக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE