தேனி:நிலத்தை அபகரித்து, தாயை அடித்து துரத்திய மகனிடம் இருந்து, நிலத்தை மீட்டு, மூதாட்டியிடம், உத்தமபாளையம், சப் - கலெக்டர் வழங்கினார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே, உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர், சின்னத்துரை மனைவி முத்துப்பேச்சி, 75. இவருக்கு, 48 - 45 - 40 வயதில், மூன்று மகன்கள், 38, வயதில் மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.சில ஆண்டுகளுக்கு முன், சின்னத்துரை இறந்தவுடன், உப்புக்கோட்டை கிராமத்தில் இருந்த, 60 சென்ட் நிலத்தை, 7 கோடியே, 89 லட்சம் ரூபாய்க்கு விற்று, பிள்ளைகளுக்கு, சம பங்காக, முத்துப்பேச்சி வழங்கியுள்ளார்.அந்த பத்திரப்பதிவிற்காக, தேனி சார் பதிவாளர் அலுவலகம் சென்றனர். அப்போது, இவரது பெயரில் இருந்த, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, மற்றொரு சொத்தான, 45 சென்ட் நிலத்தை, இரண்டாவது மகன் நாகேந்திரன், 45, ஏமாற்றி, தாயின் கையெழுத்தை பெற்று, தன் பெயரில் பதிவு செய்து கொண்டார்.பின்னர் தான், இது முத்துப்பேச்சிக்கு தெரிந்தது. நாகேந்திரனிடம் கேட்ட போது, தாயை அடித்து, அவதுாறாக பேசி, வீட்டிற்குள் இருக்க கூடாது என, கூறி துரத்தி விட்டார்.உத்தமபாளையம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு குறை தீர்ப்பாயத்தில், முத்துப்பேச்சி, 6ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த, சப் - கலெக்டர் வைத்திநாதன், 45 சென்ட் இடத்தின்பத்திரப்பதிவை ரத்து செய்து, நிலத்தின் ஆவணங்களை, முத்துப்பேச்சியிடம் வழங்கினார்.வைத்திநாதன் கூறுகையில், ''இந்த வழக்கில், ஏற்கனவே, முத்துப்பேச்சியின்அனுமதியோடு விற்ற சொத்து பதிவுகள் செல்லும். 45 சென்ட் நிலத்தை, பதிவு செய்த பத்திரம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE