ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானமா? சமோசா கடைக்கு வருமான வரித்துறை, நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானமா? சமோசா கடைக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்'

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (20)
வருமானம்,  சமோசா கடை, வருமான வரித்துறை, நோட்டீஸ்

அலிகார்: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சமோசா கடையில், ஆண்டுக்கு, 60 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடி ரூபாய் வரை, வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வரி செலுத்தும்படி, கடை உரிமையாளருக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அலிகார் நகரில், சீமா சினிமா தியேட்டர் அருகில், 'முகேஷ் கச்சோரி' என்ற, சிறிய, சாதாரண, சமோசா கடை உள்ளது. அலிகார், நகர மக்களிடையே, இந்த கடை, மிகவும் பிரபலம்.ரகசிய தகவல்சூடான, சுவையான, கச்சோரி, சமோசா உள்ளிட்டவை, இங்கு, அதிகாலை முதல், நள்ளிரவு வரை, விறுவிறுப்பாக விற்பனையாவது வழக்கம். இந்த கடையில், விற்பனை அதிகம் உள்ளதாகவும், ஆனால், இதற்கு வருமான வரி எதுவும் செலுத்துவதில்லை என்றும், வரித்துறையினருக்கு, சிலர், ரகசிய தகவல் கொடுத்தனர்.

விசாரணையில், கடையின் உரிமையாளர், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், தன் கடையை பதிவு செய்யவில்லை என்ற தகவலும் தெரிய வந்தது.வரித்துறை அதிகாரிகள் சிலர், அந்த கடையின் அருகே நின்றபடி, வாடிக்கையாளர்கள், விற்பனை, லாபம் ஆகியவை குறித்த தகவல்களை, ரகசியமாக கண்காணித்தனர். இதில், தினமும், 700க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் கடைக்கு வருவதாகவும், கடைக்கு, ஆண்டுக்கு, 60 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடி ரூபாய் வரை, வருமானம் கிடைக்கும் என்றும், கணக்கிடப்பட்டது.

இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளருக்கு, வரித்துறை அதிகாரிகள், 'நோட்டீஸ்' அளித்துள்ளனர். வரித் தொகையை செலுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.ஒத்துழைப்புஇது குறித்து, கடை உரிமையாளர் முகேஷ் கூறியதாவது:கடந்த, 12 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறேன். சரக்கு மற்றும் சேவை வரி, வருமான வரி போன்ற விஷயங்கள் எல்லாம், எனக்கு தெரியாது. வாழ்வாதாரத்துக்காக இந்த கடையை நடத்தி வருகிறேன். வருமானம் அதிகம் கிடைப்பது உண்மை தான். வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

வரித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'இதுபோன்ற கடைகளில், ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தால், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், அந்த கடையை, பதிவு செய்ய வேண்டும். வருவாயில், 5 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X