இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா?

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (4)
Share
மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பெரும் நிலப் பரப்பில் வாழ்ந்தவன், பழந்தமிழன். அந்த நிலத்தில், இயற்கையாய் தேங்கிய நீரையும், ஆற்றின் வழியாக கடலுக்கு சென்ற நீரையும், தேக்கத் துவங்கிய மனிதன், வரலாற்று காலத்திற்குள் வருகிறான். அதாவது, எழுத்தைக் கண்டுபிடித்தவன், வரலாற்று கால மனிதன்.இனக்குழுத் தலைவர்கள், பெரும் நிலப்பகுதிக்கு தலைமை ஏற்க துவங்கியது இக்காலத்தில் தான்.
 இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா?

மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பெரும் நிலப் பரப்பில் வாழ்ந்தவன், பழந்தமிழன். அந்த நிலத்தில், இயற்கையாய் தேங்கிய நீரையும், ஆற்றின் வழியாக கடலுக்கு சென்ற நீரையும், தேக்கத் துவங்கிய மனிதன், வரலாற்று காலத்திற்குள் வருகிறான். அதாவது, எழுத்தைக் கண்டுபிடித்தவன், வரலாற்று கால மனிதன்.இனக்குழுத் தலைவர்கள், பெரும் நிலப்பகுதிக்கு தலைமை ஏற்க துவங்கியது இக்காலத்தில் தான்.

நிலத்தையும், அந்நில மக்களையும் பஞ்சம், பட்டினியின்றி காக்க துவங்கிய தலைவர்கள், அரசர்களாயினர். அவர்கள், நீங்காத புகழுக்காக, பல செயல்களை செய்தனர். இன்று, நீர்நிலைகளை அழித்து, தலைநகர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நீர்நிலைகளை உருவாக்கிய பின் தான், தலைநகர்களையே உருவாக்கினர்,பண்டைத் தமிழர்.

தமிழகத்தை பல்லவர்கள்,சோழர்கள், பாண்டியர்கள் என,காலவரிசையில் ஆண்டுள்ளனர். இனி, 1,500 ஆண்டு களுக்கு முன், பல்ல வர்கள் செய்த நீர் மேலாண்மை குறித்தும், புதிய நீராதாரங்கள் குறித்தும், தமிழக தொல்லியல் துறையின், முன்னாள், துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன் கூறுவதைக் கேட்போம்:

இயற்கை அமைத்த, ஏரி, ஆறு, குளங்களுக்கு அருகில், வரலாற்றுக்கு முன்பிருந்த மனிதர்கள் தங்கி, விவசாயம் செய்ததையும், அதற்கான கருவிகள் செய்ததையும் பார்த்தோம்.அரசன், புதிதாக கிராமங்களை உருவாக்கினான். அதற்கு முன், அங்கு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை உருவாக்கினான். அவற்றை, தன் பெயருடன் இணைத்தான். அதற்கான ஆதாரங்கள் நிறைய
கிடைக்கின்றன.தற்போது, திருச்சி மாவட்டம், லால்குடி - அரியலுார் சாலையில், புள்ளம்பட்டி அருகில், ஆலப்பாக்கம் என்ற ஊர் உள்ளது.

இந்த ஊரை உருவாக்கியவன், பல்லவ மன்னனான, நந்திவர்மன்.அவன் பெயரில் அந்த ஊர், நந்திவர்மன் மங்கலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.இவ்வூரில், ஒரு ஏரியை உருவாக்கியதையும், அதற்கு, தன் பட்டப் பெயரான, 'மார்பிடுகு' என்ற பெயரில், மார்பிடுகு ஏரி என, பெயரிட்டுள்ளான். இந்த கதையை,அங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.மேலும், உதயசந்திரமங்கலம் என்ற ஊரையும், நீர்நிலைகளையும் உருவாக்கிய செய்தியை, உதயேந்திரம் செப்பேடும், ஏகதீரமங்கலம் என்ற ஊரை உருவாக்கி, நீர்நிலைகளை ஏற்படுத்தியதையும், நயதீரமங்கலம் என்ற ஊருக்காக, பேரேரி என்றும், நெசலப்பூண்டி ஏரி என்றும் அழைக்கப்படும் ஏரியை உருவாக்கிய செய்தியையும், கசாக்குடிச் செப்பேடு கூறுகிறது.

இந்த ஏரிகளுக்கு செய்யாறு, வேகவதியாறு, திரையனேரி ஆகிய நீர்நிலைகளில் இருந்து, நீர் வரும் வகையில், ஆற்றுக்கால், வெள்ளக்கால் ஏற்படுத்தியதையும், நீர்நிலைகளில் இருந்து, யார் யார், எந்த வகையில் நீரை பயன்படுத்தலாம் என்ற செய்தியையும், செப்பேடுகள்
கூறுகின்றன.அதேபோல, கூரம் எனும் கிராமத்தில், பரமேசுவர வர்ம பல்லவன், 'பரமேச்சுர தடாகம்' என்னும் ஏரியை அமைத்திருக்கிறான். இந்த ஏரிக்கு, பாலாற்றிலிருந்து, பெரும்பிடுகு கால் என்னும், கால்வாய் தோண்டி, நீர் வர வைத்திருக்கிறான்.

அதாவது, பல்லவ மன்னர்கள், தங்களின் பெயரையும், பட்டப் பெயர்களையும் நீர்நிலைகளுக்கு இட்டனர். இதற்கு சான்றாக, மாமண்டூரில் உள்ள, 'சித்தரமேக தடாகம்' - உத்திரமேரூரில், 'வயிரமேக தடாகம்' என்னும் நீர்நிலைகள் பற்றி, கல்வெட்டுகள் கூறுகின்றன.இவ்வாறு கூறினார், ஸ்ரீதரன்.நீர் ததும்பும் தடாகம் என்பது எதைக் குறிக்கிறது, பல்லவர்களின் நீர் மேலாண்மையும், நீர் பயன்பாடும் எப்படி இருந்தது... இந்த கேள்விகளுடன் காத்திருப்போம்.

விடை அடுத்தகட்டுரையில்...!

-நடுவூர் சிவா

naduvoorsiva@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X