பொது செய்தி

தமிழ்நாடு

'மாதாந்திர அளவை திறந்து விடவும்' ஆணையம் பாடிய பழைய பல்லவி

Added : ஜூன் 25, 2019
Advertisement

புதுடில்லி, மழைப்பொழிவு மற்றும் அணைகளுக்கு வந்து சேரும் நீரைப் பொறுத்து தண்ணீரை திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் பங்கீடு இந்த முறையும் வருமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தின் முடிவில் ஆணையத் தலைவர் மசூத் உசேன் கூறியதாவது:காவிரி டெல்டா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் வானிலை அம்சங்கள் அங்கு பெய்து வரும் மழையின் அளவு ஆகியவை ஆராயப்பட்டன. மேலும் ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை இம்முறை பொய்த்துவிட்டது.இந்நிலையில் பில்லிகுண்டுலுவில் தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 9.19 டி.எம்.சி. மற்றும் 31.24 டி.எம்.சி. நீர் திறந்து விடப்பட வேண்டும்.இருப்பினும் தற்போதுள்ள நிலவரங்களை ஆராய்ந்தோம். இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி ஜுன் 1 முதல் ஜுன் 20 வரை கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைப்பகுதிகளில் போதுமான மழை பெய்துள்ளது. தவிர பில்லிகுண்டுலுவில் ஜுன் 23 நிலவரப்படி 1.9 டி.எம்.சி. நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்நிலையில் காவிரி நதி நீர் பங்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஜுன் மற்றும் ஜுலை மாதங்களுக்குரிய தமிழகத்தின் பங்கை கர்நாடகா திறந்துவிட வேண்டும்.இவ்வாறு மசூத் உசேன் கூறினார்.கடந்த முறை உத்தரவிட்ட நீரின் அளவை கர்நாடகா இது வரையிலும் தரவில்லையே என கேட்டதற்கு ''தண்ணீர் வரத்து அணைகளில் கையிருப்பு ஆகியவற்றை பொறுத்து நீர் திறந்துவிடப்படுகிறது. பருவமழை தீவிரம் பெறும்; பற்றாக்குறை தீரும் என நம்புகிறோம்'' என்றார் மசூத் உசேன்.இந்நிலையில் ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகத்திற்குரிய நீரின் அளவை திறந்து விடும்படி பொத்தாம் பொதுவாக கூறி உறுதியான உத்தரவு பிறப்பிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழக தரப்பிலிருந்து கிளப்பப்படுகிறது.உத்தரவை அமல்படுத்தும் முறையோ கண்காணிக்கும் முறையோ இல்லாத நிலையில் அதிகாரிகள் கூடுவதும் இவ்வாறு அறிவிப்பதும் மட்டுமே இனி நடக்கப்போகிறது என்ற அச்சமும் எழுகிறது.இதுவரை ஆணையம் போட்ட இரண்டு உத்தரவுகளையும் கர்நாடகா கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அம்மாநிலம் கூறுவதெல்லாம் 'எங்களுக்கே தண்ணீர் இல்லை; இருந்தால் தருகிறோம்' என்பதுதான்.ஆக ஆணையம் கூடுவதும் மழைப்பொழிவு மற்றும் அணைகளுக்கு வந்து சேரும் நீரைப் பொறுத்து தண்ணீரை திறந்துவிடும்படி ஒப்புக்காக ஒரு உத்தரவு போடுவதும் மரபாக மாறுவதால் காவிரியில் தமிழகத்தின் தண்ணீர் பங்கு என்பது மீண்டும் கேள்விக்குறியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X