சக்சேனாவுக்கு உத்தரவாதம் வழங்க உறவினர்கள் தயாரா: சுப்ரீம் கோர்ட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சக்சேனாவுக்கு உத்தரவாதம் வழங்க உறவினர்கள் தயாரா: சுப்ரீம் கோர்ட்

Added : ஜூன் 25, 2019
சக்சேனாவுக்கு உத்தரவாதம் வழங்க உறவினர்கள் தயாரா: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் 'அப்ரூவராக' மாறிய இடைத்தரகர் ராஜிவ் சக்சேனா சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அவரது உறவினர்கள்இருவர் தலா ஐந்து கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்தி உத்தரவாதம் வழங்க தயாரா என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' என்ற நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் 3600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கதுறை விசாரித்து வருகிறது.இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜிவ் சக்சேனா என்பவர் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டார். இவர் 'அப்ரூவராக' மாறினார். இதையடுத்து 'ஜாமின்' வழங்கப்பட்டது.இந்நிலையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சக்சேனா வெளிநாடு சென்று சிகிச்சை பெற அனுமதி கேட்டார். இதற்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை தள்ளுபடி செய்த டில்லி உயர் நீதிமன்றம் ஜூன் 25 முதல் ஜூலை 24 வரை சக்சேனா வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது.இந்நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்க துறை மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ''சக்சேனாவுக்கு இந்தியாவில் உறவினர்கள் யாரும் இல்லை. சொத்துக்களும் இல்லை. எனவே அவரை வெளிநாடு செல்ல அனுமதித்தால் அவர் திரும்பி வரமாட்டார்''.''இந்த ஊழல் வழக்கில் அவருடைய பங்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய தொடர்புகள் குறித்தும் அவனிடம் தகவல்கள் பெற வேண்டி இருக்கிறது. எனவே அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது'' என வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 'சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சக்சேனா வழக்கு விசாரணைக்காக மீண்டும் இந்தியா திரும்புவார் என அவரது உறவினர் இருவர் தலா ஐந்து கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்தி உத்தரவாதம் வழங்க தயாரா' என கேள்வி எழுப்பினர்.இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X