பொது செய்தி

இந்தியா

வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

Added : ஜூன் 26, 2019
Advertisement
 வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

புதுச்சேரி:'வீடுகள், வணிக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதை அரசு கடுமையாக அமல்படுத்தும்' என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வது, நீர்நிலைகளை துார் வாருவது, நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது.முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமைச் செயலர் அஸ்வனிக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டம் முடிந்த பின், அமைச்சர் நமச்சிவாயம் அளித்த பேட்டி:புதுச்சேரியில் அனைவருக்கும் தரமான குடிநீரை வழங்குவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதியிலும், கிராமப்புறத்திலும் ஒரு சில இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது.குடிநீர் பிரச்னை எழும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, பிரச்னையை தீர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.பருவமழை விரைவில் துவங்க உள்ளதால், ஏரி, குளங்களை துார் வாருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.16 கோடியே 72 லட்சம் செலவில் 20 ஏரிகள், 32 குளங்களை துார் வார திட்டமிடப்பட்டு, 16 ஏரிகளும், 3 குளங்களும் துார் வாரி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மற்ற ஏரி, குளங்கள் துார் வாரப்படும். ஊசுடு ஏரியிலும் துார் வாரும் பணி மேற்கொள்ளப்படும்.ஏரிகளில் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, காரைக்கால் விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. விவசாயிகள் அணுகினால் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.மழை நீரை சேமிப்பது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை நீரை சேமிப்பது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் திட்டம் நிறைவேற்றப்படும்.வீடுகள், வணிக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவது கட்டாயம் என, நகரமைப்புக் குழும விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதை அரசு கடுமையாக அமல்படுத்தும்.புதுச்சேரி, காரைக்காலில் வறட்சி பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பணி முடிந்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.காரைக்காலில் 55 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த மணலுக்கு அரசு விலை நிர்ணயம் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களே விற்பனை செய்யும். காரைக்காலில் இருந்து மணலை புதுச்சேரிக்கு எடுத்து வருவதில் சில சட்ட பிரச்னைகள் உள்ளன. இதுதொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் ஏ.டி.எம்., அமைப்பது, இ-டாய்லெட் கட்டுவது உள்ளிட்ட 20 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கும் நிலையில் உள்ளன.இவ்வாறு, நமச்சிவாயம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X