மத்திய அரசு முடிவில் தலையிட முடியாது: சுருக்கு வலை விவகாரத்தில் முதல்வர் பளீச்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு முடிவில் தலையிட முடியாது: சுருக்கு வலை விவகாரத்தில் முதல்வர் 'பளீச்'

Added : ஜூன் 26, 2019
Share
 மத்திய அரசு முடிவில் தலையிட முடியாது: சுருக்கு வலை விவகாரத்தில் முதல்வர் 'பளீச்'

புதுச்சேரி:சுருக்கு வலையை மத்திய அரசு தடை செய்துள்ளதால், அதுபற்றி நாம் ஒன்றும் பேச முடியாது என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
சுருக்கு வலை மற்றும் மடி வலையை பயன்படுத்துவதால் மீன்வளம் அழியும் அபாயம் ஏற்படும் என, ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்ததையடுத்து, அதனை மத்திய அரசு தடை செய்தது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால், புதுச்சேரி யில் தடை செய்யப்பட வில்லை. தமிழக பகுதி களில் புதுச்சேரி மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தும்போது பிரச்னை ஏற்படுகிறது.மேலும் பெரிய படகு களில் சுருக்கு வலை பயன்படுத்துவதால், பைபர் படகுகள் மற்றும் சிறிய படகுகளில் சென்று மீன்பிடிப்பவர்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவிப்பதால், மீனவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், புதுச்சேரியில் சுருக்கு வலை பயன்பாட்டை தடை செய்ய மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மீனவ பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமயில், சட்டசபை கமிட்டி ஹாலில் நேற்று நடந்தது.எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், தனவேலு, ஜெயமூர்த்தி, அன்பழகன், கலெக்டர் அருண், சீனியர் எஸ்.பி., அபூர்வா குப்தா உள்ளிட்ட காவல்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடை விதிக்க மீனவர்களின் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவிக்க, அதிக விலைக்கு வலைகளை வாங்கி தொழில் நடத்துகிறோம், திடீரென தடை விதித்தல் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபபடும் என, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அமைச்சர் முன்னிலையில் இரு தரப்பாக மீனவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை எம்.எல்.ஏ.,க்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
தகவல் அறிந்து, கூட்டம் நடந்த அறைக்கு வந்த முதல்வர் நாராயணசாமி, 'சுருக்கு வலைக்கு தடை மத்திய அரசின் முடிவு. அதற்கான மத்திய அரசின் ஆணை உள்ளது. பல மாநிலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் நமது மாநில மீனவர்களின் வலைகளை கூட பறிமுதல் செய்துள்ளனர்.எனவே, இது தொடர்பாக பிறகு பேசி முடிவெடுப்போம் என கூறி, இரு தரப்பு மீனவ பிரதிநிதிகளை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.இதுனால், முடிவு ஏதும் எடுக்காமலேயே கூட்டம் முடிந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X