சென்னை : நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் பதவிக்காலம், மேலும், நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை, எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, 2017 செப்., 25ல், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடிக்க, மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் விசாரணையை முடிக்க முடியாததால், மேலும், ஆறு மாதங்களுக்கு, கமிஷன் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின், தலா, நான்கு மாதங்கள் என, நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை, ஜெ., உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலா உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என, 147 பேரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும், அப்பல்லோ டாக்டர்கள், துணை முதல்வர் பன்னீர்செல்வம், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலோ போன்றோரிடம், விசாரணை நடத்த வேண்டி உள்ளது.

இந்நிலையில், விசாரணை கமிஷனுக்கு எதிராக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, மருத்துவ நிபுணத்துவம் பெற்ற, 21 பேர் அடங்கிய தனி குழு அமைக்கும் வரை, ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க, தடை விதிக்க கோரப்பட்டது. அதை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் சென்றனர்.
உச்ச நீதிமன்றம், விசாரணை கமிஷனுக்கு, இடைக்கால தடை விதித்தது. இதன் காரணமாக, விசாரணை தொடராமல் உள்ளது. இந்த சூழ்நிலையில், விசாரணை கமிஷன் பதவி காலம், நேற்றுடன் நிறைவடைந்தது. விசாரணை இன்னமும் நிறைவடையாததால், கமிஷன் பதவி காலத்தை, மேலும், நான்கு மாதங்களுக்கு நீட்டித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE