தஞ்சாவூர்:தஞ்சை அருகே, 1 ஏக்கர் நிலத்தில், தனி ஆளாக, நெற்பயிரை நடவு செய்த கல்லுாரி மாணவிக்கு, பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
தஞ்சாவூர், ஒரத்தநாடு அடுத்த அக்கரை வட்டம் பகுதியைச் சேர்ந்தோர், கருப்பையன் - காந்திமதி, தம்பதி; விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் மகள், ராஜலட்சுமி, 19, ஒரத்தநாடு அரசு கலை கல்லுாரியில், பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவர்களுக்கு சொந்தமான, 1 ஏக்கர் வயலில், ஆழ்குழாய் பாசனம் வழியாக, நெற்பயிர் நாற்று தயார் செய்திருந்தனர். அந்த பயிர்களை நடவு செய்வதற்கு, தொழிலாளர்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து, தனி ஆளாக நடவு செய்ய, ராஜலட்சுமி முடிவு செய்தார். அவர் மட்டும், மூன்று நாட்களில், 1 ஏக்கர் நிலத்தில், நெற்பயிர்களை நடவு செய்தார். மாணவியின் இந்த செயலுக்கு, அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், வெகுவாக பாராட்டினர்.
இது குறித்து, ராஜலட்சுமி கூறியதாவது:நடவு செய்ய, நாற்றுகள் தயார் நிலையில் இருந்தன. ஆள்பாற்றாக்குறையால், நடவு செய்ய ஆள் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, 23ம் தேதி, ஞாயிறு அன்று, காலை முதல், மாலை வரை, நடவு செய்தேன். 24, 25ம் தேதிகளில், கல்லுாரிக்கு சென்று வந்த பின், மதியம், 2:00 மணியிலிருந்து, 6:00 மணி வரை நடவு செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.