நிதியின்றி, ஊராட்சிகள் தள்ளாடி வரும் நிலையில், தமிழகம் முழுவதும், நாளை கிராம சபை கூட்டங்கள் நடக்கின்றன.
தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்து, 500 ஊராட்சிகள் உள்ளன. லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், மே 1 தொழிலாளர் தினத்தன்று, கிராம சபை கூட்டம் நடத்தப் படவில்லை. ஒத்திவைக்கப்பட்ட இக்கூட்டம், அனைத்து ஊராட்சிகளிலும், நாளை நடக்கிறது.
குடிநீர் சிக்கனம், டெங்கு தடுப்பு நடவடிக்கை, ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிதி செலவு, பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல் உட்பட பல்வேறு விஷயங்கள், இதில், விவாதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம், 2016 அக்.,உடன் முடிந்தது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், 3 ஆண்டுகளாக, 'பெயரளவுக்கே' கிராம சபைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிராம சபைகளில், 10 சதவீத வாக்காளர்கள்
பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை, முன்பு அமலில் இருந்தது. தற்போது, இது கடைப்பிடிக்கப் படுவதில்லை. பொதுமக்கள் பங்கேற்றதாக, கையெழுத்துகளை மட்டும் பெற்று,'கணக்கு' காட்டப் படுகிறது.அரசு மற்றும் அதிகாரிகள் கூறியபடி மட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதால், கிராம சபைகளில் பங்கேற்க, பொதுமக்களிடமும் ஆர்வம்இல்லை.
ரூ.10 ஆயிரம் கோடி
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், ஊராட்சிகள், நிதியின்றி தள்ளாடுகின்றன. 'உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், ஊராட்சிகளுக்கு மத்திய அரசு தர வேண்டிய, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற முடிய வில்லை' என, ஊரக வளர்ச்சித் துறையினர் கூறுகின்றனர். மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு குறித்து, பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி, 21ம் தேதி, தமிழகத்தில் சிறப்பு கிராம சபைகள் நடந்த நிலையில், நாளை மீண்டும் கிராம சபை கூடுகிறது.
காங்., வேண்டுகோள்
'நாளை நடக்கவுள்ள, கிராம சபை கூட்டங்களில், காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளதால், அதற்கான ஆயத்த
பணிகளில், காங்.,தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக, ஜூன், 21ல், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடத்தப் பட்டு உள்ளது.
அதில் எடுத்துள்ள முடிவின்படி, கட்சியின் சின்னம் இல்லாமல், போட்டியிட வாய்ப்புள்ள, ஊராட்சி மன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்திற்கும் அதிக மான ஊராட்சிகளில், பெரும்பாலான வற்றில், காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட, தீவிரம் காட்ட வேண்டும் என்றும், தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
எனவே, இந்த பின்னணியில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நாளை, 28ல், காலை, 11மணிக்கு நடக்கவுள்ள கிராம சபை கூட்டங்களில், காங்கிரஸ் கட்சியினர், பெருமளவில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (4)
Reply
Reply
Reply