ஊழல் அரசியல்வாதிகளே...
உயிருள்ள ஜீவன்களுக்கு தோற்றமும் உண்டு; மறைவும் உண்டு.சென்னை பொது மருத்துவமனையில், முதுகலை மருத்துவ படிப்பு படித்தபடி, நான் பணியாற்றிய போது, மூத்த அரசியல்வாதிகளான ராஜாஜி, ஈ.வெ.ரா., போன்ற தலைவர்களின் இறுதி நாட்களை பார்த்துள்ளேன்; அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தனர்.
சரி, அகால மரணம் யாருக்கு வரும் என்றால், 'துன்மார்க்கர்களுக்கு துர்மரணம் தான் ஏற்படும்' என்பது, ஹிந்து மத நம்பிக்கை; புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையன்கள், திருடன்கள், சாராய வியாபாரிகள், தேசத் துரோகிகள், லஞ்சம் - ஊழல் புரிந்து, மக்களை சுரண்டி, தின்று கொழுத்த அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு, துர்மரணம் தான் வரும்; இத்தகையோருக்கு நல்ல சாவு வராது!பெரும்பாலான அரசியல் தலைவர்களின் மரணம், பிற சாதாரண மக்களின் மரணத்திலிருந்து மாறுபட்டுஉள்ளதை, டாக்டரான நான், அனுபவத்தில் அறிவேன். பெரிய அரசியல் தலைவர்கள், எந்த வியாதிக்கு, எப்படி சிகிச்சை பெற்றனர்; எப்படியெல்லாம்
வேதனைப்பட்டு இறந்தனர் என்பதையும் நன்கறிவேன்.
என்,50ஆண்டு மருத்துவ சேவையில், ஏழை - எளியோர் மட்டுமின்றி,செல்வந்தர்கள் பலரின் மரணத்தையும் பார்த்திருக்கிறேன்.ஆனால்,அரசியல் தலைவர்களின் மரணம், மிக கொடுமையாகவே இருந்துள்ளதை அறிகிறேன். அவர்களின் மரணத்தை பற்றி எழுத, அருவருப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.ஊரை அடித்து, உலையில் போட்ட அரசியல் தலைவர்களுக்கு, அவர்களின் கடைசி காலத்தில் ஏற்பட்ட நோய்கள்; அவற்றால் அவர்கள் பட்ட வலி; அதனால் அவர்கள் துடித்த துடிப்பு; ஒவ்வொரு வினாடியும் அவர்கள் அலறிய அலறல்; அதன் பின், தாமதமாக வந்த மரணத்தை நன்கு அறிவேன்.'செப்சிஸ்' எனப்படும் தொற்று, மனிதர்களுக்கு வந்தால், அவர்கள் உறுப்புகள் செயலிழந்து விடும். அத்தகைய நிலை, மிகவும் பயங்கரமானது. தொற்று தாக்கத்தின் போது, வியாதிகளின் பாதிப்பும், உடலிலுள்ள, நார் சத்தில் தாதுப்பொருட்கள் குறைபாடு ஏற்பட்டு விடும்.தொற்று என்பது, எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமிகள், உடலிலுள்ள ரத்தத்தில் கலந்து, ஒவ்வொரு உறுப்பையும் உருக்குலைத்து, செயலிழக்க செய்து விடும். மூச்சு விட முடியாமல் திணறுவர். செயற்கை மூச்சுக் குழாய் வைக்கப்படும். அதை, 'வென்டிலேட்டர்' என்கிறோம்.
அந்த கருவியிலும், தொற்று கிருமிகள் பரவி விடும்.அறையிலுள்ள குளிர்சாதன இயந்திரத்திற்குள்ளும் கிருமிகள் சென்று, அந்த சுற்றுப்புறத்தையே பாழாக்கி விடும்.இந்த போராட்டத்தில் மருத்துவமே செயல்படாமல், டாக்டர்களை தோற்கடித்து விடும். இத்தகைய கொடிய, தொற்று பாதிப்பு நோய்க்கு, ஆங்கிலத்தில், 'செப்டிசீமியா' என, பெயர்.தொற்று பாதிக்கப்பட்டவர்களை, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணம், வீடுகள், தங்கம், வைரம், வைடூரியங்கள் காப்பாற்றாது.மருத்துவ மாணவனாக நான் இருந்த போது, சட்டக் கல்லுாரிகளில் படித்த மாணவர்களில் பலர், எம்.பி.,யாகவும், எல்.எல்.ஏ.,வாகவும், மத்திய அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர்; அவர்களில் சிலர், என்னிடம் வைத்தியம் பார்த்தனர்.அவர்களுக்கு என்னென்ன வியாதிகள் வந்தன என்பதை, நினைத்துப் பார்க்கவே, பயங்கரமாக இருக்கிறது. சிறுநீரகம் பழுதடைந்து, மாற்று சிறுநீரகம் பொருத்தி, அதுவும் ஒத்து வராமல், உடல் முழுவதும் புண்கள், சீழ்கள் ஏற்பட்டு, 'செப்டிசீமியா' நோய்க்கு ஆட்பட்டு, கிருமிகளின் நச்சுப்பொருட்கள், உடல் ரத்தத்தில் கலந்து, துடித்து இறந்தனர்.எல்லா அரசியல் தலைவர்களும் இப்படித் தான் இறந்தனர் என, சொல்லவில்லை. நேர்மையாக இருந்த பலர், இயற்கையாக, வலியின்றி, வேதனையின்றி மரணம் அடைந்துள்ளனர். அடாவடியாக சொத்து சேர்த்தோர்; அநாகரிக செயல்களை செய்தோர், இப்படித் தான் வேதனைப்பட்டு இறந்துள்ளனர்.
ஓர் அரசியல் தலைவர் இருந்தார்... மக்கள் செல்வாக்கு இல்லாமல், பதவிகளில் மட்டும் இருந்தவர்; சக அரசியல் தலைவர்களை கவிழ்த்தவர்; ஊழல் புரிந்து தப்பி விடுவதில் வல்லவர்; லஞ்சம் வாங்கி கொள்வார்; காரியம் செய்து தர மாட்டார்.அவரின் அடாவடியால், பல, 'கான்டிராக்டர்கள்' தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த அரசியல்வாதி, தன் கடைசி காலத்தில், நோயுற்று, உடல் முழுவதும் கிருமிகள் தாக்கி, பல உறுப்புகள் செயலிழந்து, படுக்கை புண் ஏற்பட்டு, துடிக்கத் துடிக்க மரணம் அடைந்தார்.இது தான், துர்மரணம்!நம் முன்னோர், 'துன்மார்க்கர்களுக்கு துர்மரணம்' என, கூறியிருப்பது, இத்தகைய மரணங்களுக்குப் பொருந்தும். அதாவது, நாற்றமெடுத்து, அழுகி சாவது தான் துர்மரணம்!இதை, இப்போதைய அரசியல் தலைவர்களும், முறைகேடாக பணம் சம்பாதிப்போரும் அறிந்துள்ளனர். எனினும், அவர்கள் ஏன் திருந்த முற்படுவதில்லை என்பது தெரியவில்லை.
கோடி கோடியாக பணம் சேர்ந்த பல அரசியல் தலைவர்களால், இறுதி காலத்தில், சாப்பிட முடியவில்லை. வாயில் புற்றுநோய் வந்து, பேச முடியாத அளவுக்கு, அவதிப்பட்டு, சீரழிந்து இறந்துள்ளனர்.
இதை அறிந்தும், அரசியல்வாதிகள் பலர், காலை எழுந்தது முதல், இரவு படுக்க செல்லும் வரை, பொய் தவிர, வேறு எதையும் பேசுவதில்லை. தவறுகள் தவிர, வேறு எதையும் செய்வதில்லை. உண்மை, நியாயம், நேர்மை என, எதுவும் அவர்களுக்கு தெரிவதில்லை!மனசாட்சி என ஒன்று, அவர்களுக்கு இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படும். அந்த அளவுக்கு, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விட்ட பலர், என் கண் எதிரிலேயே, வாய்ப்புற்று நோய் ஏற்பட்டு, உணவுக்குழாயில் பரவி, சித்திரவதைப்பட்டு இறந்துள்ளனர்.ஒரு தலைவர், பொய் பேசுவதில் மன்னர்... அவருக்கு, உணவுக் குழாயில் புற்றுநோய் வந்தது. உணவருந்த முடியாமல், மூக்கிற்குள் குழாய் சொருகி, அதன் வழியே, உணவு செலுத்த வேண்டிய நிலைமை. இப்படியே பல காலம் இருந்தார்.ஊழல் செய்து, குன்று போல குவித்த செல்வத்தை வைத்து, நோயை எதிர்க்க, அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படி எல்லாம், மரணம் நேரும் என்பதை, அவர் முன்னரே உணரவில்லை; அதனால் தான், முறைகேடாக சம்பாதித்தார்.இதை ஏன் சொல்கிறேன் என்றால், சில அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட தீராத, குணப்படுத்த முடியாத, வியாதிகளை நினைத்துப் பார்த்து, அநியாயம் செய்பவர்கள் திருந்த வேண்டும். உங்களின் மனைவி, மக்கள் எதிர்காலத்தை நினைத்து, மனசாட்சியோடு செயல்படுங்கள். ஏனெனில், ஊழல்வாதிகளுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும், நல்ல சாவு வரவே வராது!தானாக மரணத்தை வரவழைக்கும் முறைகளாக, முக்தி, சமாதி நிலையை குறிப்பிடலாம். இதை நம் மூதாதையர், முனிவர்கள், சமயப் பெருமக்கள் அடைந்துள்ளனர். 'முக்தி அடைகிறேன்' என, உறுதி எடுத்து, குகைக்குள் நுழைந்து, சமாதி ஆகுவர்; சில நாட்களில் இறந்து விடுவர்!
சமாதி நிலை மரணம், எப்படி நடக்கும் என, அறிய பலருக்கு ஆர்வம் இருக்கலாம். இதய துடிப்பு, மூச்சு நின்று விட்ட நிலையில் தான், மரணம் வருகிறது.
நம்இதயம் நிமிடத்திற்கு, 60 முதல்,72 தடவை வரை துடிக்கிறது. நம் சுவாசம் நிமிடத்திற்கு,18 தடவை நடக்கிறது; நான்கு துடிப்புக்கு, ஒரு முறை, மூச்சு விடப்படுகிறது.திடீரென அது நின்றவுடன், நான்கு தடவை, மார்புக் கூட்டின் மீது அழுத்தி, ஒரு முறை, வாய் மீது வாய் வைத்து, சுவாசத்தை செலுத்துவர். இதை, ஆங்கிலத்தில், 'கார்டியோ பல்மோனரி ரீசசிடேஷன்' என்கிறோம்.மூச்சை அடக்கி, இதயத்துடிப்பை, மூச்சுத் துடிப்புக்கு சமநிலைப்படுத்தும் போது, அதாவது, இதய துடிப்பு, 18க்கும் குறையும் போது, உடலுக்கு ரத்த ஓட்டம் குறைந்து, உடலின் உறுப்புகள், மூளை முதல், உள்ளங்கால் வரை செயலிழந்து, மரணம் ஏற்படுகிறது.இதை, முக்தி என்றும், சமாதி என்றும் கூறுகிறோம். முற்றும் துறந்த முனிவர்கள், மகான்கள் மரணமடைவது, முக்தி!ஆசை, பாசம் உள்ள மனிதர்கள், மரணத்தைக் கண்டு பயப்படுவர். பேராசை பிடித்த மனிதர்கள், லஞ்சம், ஊழல் பேர்வழிகள், நாட்டைக் கெடுக்கும் அரசியல்வாதிகள், மரணத்தைக் கண்டு ஓடி ஒளிவர்.எனவே, ஊழல்வாதிகளே... வானளாவிய அதிகாரமும், உலகளாவிய சொத்து இருந்தும், வியாதிகள் வந்து விட்டால், நீங்கள் சேர்த்த பணம் உதவாது. அணு அணுவாக நோய்த்தாக்கம் ஏற்பட்டு, வேதனைப்பட்டு சாக வேண்டி வரும்.அதிகாரத்தாலும், பணத்தாலும், உயர் மருத்துவத்தாலும், உலகிலுள்ள சிறந்த மருத்துவர்களை அழைத்து வந்து, பல மாதங்கள் சிகிச்சை அளித்தாலும், வியாதிகளின் கொடுமையிலிருந்து தப்பி, உயிர் பிழைக்க முடியாது.எனவே, நேர்மையாக இருங்கள்; நியாயமாக செயல்படுங்கள்!தொடர்புக்கு:இ - மெயில்: prabhuraj.arthanaree@gmail.com