சென்னை: 'தமிழக மக்கள் மீது, கண்ணிய குறைவான விமர்சனம் செய்த, புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி, தான் சட்டப்படி ஆற்ற வேண்டிய செயல்பாடுகளின் எல்லைகளைத் தாண்டி, தமிழக மக்களை, சுயநலமிக்கவர்கள், கோழைத்தனமானவர்கள் என, அநாகரிகமாக விமர்சிக்கிறார். இந்த நாட்டின் பாதுகாப்பு பணியில், எத்தனையோ தமிழக வீரர்கள், தினமும், வீரமரணம் அடைகின்றனர்.
இந்திய ராணுவத்தில் உள்ள தமிழக வீரர்கள், வீர தீரம் நிறைந்த நெஞ்சுரத்துடன், எல்லை பாதுகாப்பு பணிகளில், இரவும், பகலும் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, சீனப் போர், பாகிஸ்தான் போர், கார்கில் போர் என,
நாடு எதிர்கொண்ட அத்தனை போர்களிலும் முன்னின்று, தாராளமாக நிதியுதவி செய்து, நாட்டுப் பற்றை போற்றியவர்கள், தமிழக மக்கள்.
நாட்டின், எந்த மூலையில், மக்கள் பாதிக்கப்பட்டாலும், ஓடோடிச் சென்று, உதவி செய்யும் காக்கும் கரமும், கருணை உள்ளமும் படைத்தவர்கள், தமிழக மக்கள். லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை தோற்கடித்து விட்டனரே என்ற எரிச்சலில், தமிழக மக்களைப் பார்த்து, கோழைகள், சுயநலமிக்கவர்கள் என, கிரண்பேடி கூறியிருப்பது, ஆணவத்தின் வெளிப்பாடு மட்டுமின்றி, ஆதிக்க மேலாண்மையின் அடையாளமாகவே தெரிகிறது.
தமிழக மக்கள் மீது, கண்ணிய குறைவான விமர்சனம் செய்த, கிரண்பேடியை, ஜனாதிபதி, ஒரு நிமிடம் கூடத் தாமதம் செய்யாமல், திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, கவர்னர், கிரண்பேடி, தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். தற்போது, சமூக வலைதளத்தில், 'சுயநலமிக்கவர்கள், கோழைத்தனமானவர்கள்' என, தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில், கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். இது, கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து எல்லைமீறுகின்ற, கிரண்பேடியை கண்டித்து, கவர்னர் மாளிகை எதிரில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கிரண்பேடி, தன் கருத்தை, வாபஸ் பெற்று, மன்னிப்பு கேட்க வேண்டும்.
புதுச்சேரி கவர்னர் கருத்து குறித்து, சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, தி.மு.க., வெளிநடப்பு செய்தது. சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், குடிநீர் பிரச்னை தொடர்பான, கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழக மக்கள், தமிழக அரசியல்வாதிகள், தமிழக அரசு குறித்து, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, 'டுவிட்டரில்' பதிவிட்ட கருத்துகள் குறித்து, பேச ஆரம்பித்தார். அப்போது, சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் குறுக்கிட்டு, கோபமாக, புதுச்சேரி கவர்னர் குறித்து பேசினார். ''சட்டசபை விதிகளின்படி, கவர்னர் குறித்து பேசக்கூடாது,'' எனக் கூறிய, சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அமைச்சர் சண்முகம் ஆகியோர் பேசியவற்றை, சபை குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, ''விதிகளின்படி கவர்னர், நீதிமன்றம் குறித்து விமர்சிக்கக் கூடாது. ஆனால், கவர்னர் கருத்து குறித்து பேச, சபைக்கு உரிமை உண்டு,'' என்றார். அதை, சபாநாயகர் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ''புதுச்சேரி கவர்னர் கூறிய கருத்தை, எங்களால் ஏற்க முடியாது. அவரை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம்,'' என கூறி, வெளிநடப்பு செய்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், வெளிநடப்பு செய்தனர். ஆனால், தி.மு.க., கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்கள், வெளிநடப்பு செய்யவில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (47)
Reply
Reply
Reply