புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முன்வந்து உள்ள ராகுலை, 49, அக்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் நேற்று சந்தித்து, பதவியில் தொடர வலியுறுத்தினர். அதுபோல, லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய, மூத்த தலைவர்கள் முன்வந்துள்ளனர். எனினும், ராகுல் முடிவில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவராக, 2017ல், ராகுல் பொறுப்பேற்றது முதல், அக்கட்சி பலத்த தோல்வியை சந்தித்து வருகிறது. அவரின் தாய் சோனியா, கட்சித் தலைவராக இருந்த காலத்தில், தொடர்ந்து இரண்டு முறை, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தது அக்கட்சி. இப்போது, மத்தியிலும் ஆட்சியை இழந்து, புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் மட்டும் தான் ஆட்சியில் உள்ளது. கர்நாடகாவில் ம.ஜ.த.,- காங்., கூட்டணி நடக்கிறது.
நாடு முழுவதும், 400க்கும் மேற்பட்ட, லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு, ௫௨ தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்வி குறித்து ஆராய, மே மாதம் கூடிய, கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில், தலைவர் பதவியை, ராகுல் ராஜினாமா செய்தார்; வேறு தலைவரை தேர்ந்தெடுக்க, காரிய கமிட்டிக்கு அவர் உத்தரவிட்டார். ஏனெனில், காரிய கமிட்டி தான், கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும். எனினும், அதற்காக இதுவரை, காரிய கமிட்டி கூடவில்லை.
ஆனால், பத்திரிகையாளர் சந்திப்புகளில், 'கட்சித் தலைவர் பதவியில் தொடரப் போவதில்லை' என, ராகுல் உறுதியாக தெரிவித்து வருகிறார். அவ்வப்போது, மூத்த தலைவர்கள் அவரை சந்தித்து, ராஜினாமா முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் ஆளும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்கள், டில்லியில் நேற்று, ராகுலை சந்தித்து, முடிவை வாபஸ் பெறுமாறு கோரினர். எனினும், அவர் முடிவில், மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுல் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட் உட்பட சிலர், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து உள்ளனர்.
கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும் முடிவை, ராகுல் வாபஸ் பெற வேண்டும்; கட்சித் தலைவராக தொடர வேண்டும் என வலியுறுத்தி, இரண்டாம் கட்ட மற்றும் இளம் காங்கிரஸ் தலைவர்கள் சிலர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, இன்று முதல் அவர்கள், போராட்டத்தில் குதிக்க உள்ளனர். காங்., தலைமையகத்தின் முன், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட அவர்கள், அறிவிப்பு ெவளியிட்டுள்ளனர். இது குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் களில் ஒருவரான, பவன் கேரா, ''முடிவை மாற்றிக் கொள்ள, ராகுலிடம் வலியுறுத்தும் வகையில் தான், தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். ''இதில், இளம் தலைவர்கள், மூத்த தலைவர்கள் என்ற பேதமெல்லாம் கிடையாது. கடந்த இரு நாட்களாக, பல மாநில தலைவர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த வண்ணமாக உள்ளனர்,'' என்றார்.
கட்சியை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல, ராகுலால் மட்டும் தான் முடியும். அவர் தான், கட்சியின் தலைவராக தொடர வேண்டும். தோல்விக்கு அவர் பொறுப்பேற்பது நியாயம் இல்லை. தோல்விக்கு, என்னைப் போன்றவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தோல்விக்கு பொறுப்பேற்கத் தயார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (16)
Reply
Reply
Reply