மணி தயவால நீட்டிச்சாங்க பணி...! கோர்ட்டுக்கு போக தயாராகுது எதிரணி| Dinamalar

மணி தயவால நீட்டிச்சாங்க பணி...! கோர்ட்டுக்கு போக தயாராகுது எதிரணி

Updated : ஜூலை 02, 2019 | Added : ஜூலை 01, 2019
Share
வெள்ளலுார் குளக்கரையில், 'மியாவாக்கி' முறையில் நடந்த மரக்கன்று நடுவிழாவுக்கு, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். நுாற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். சிறுவர், சிறுமியரும் கூட பங்கேற்று, மரக்கன்று நட்டு, பங்களிப்பு செலுத்தினர்.அதைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்ட மித்ரா, ''அக்கா, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்பவாவது, நீர் நிலைகளை பற்றிய அக்கறை
 மணி தயவால நீட்டிச்சாங்க பணி...! கோர்ட்டுக்கு போக தயாராகுது எதிரணி

வெள்ளலுார் குளக்கரையில், 'மியாவாக்கி' முறையில் நடந்த மரக்கன்று நடுவிழாவுக்கு, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். நுாற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். சிறுவர், சிறுமியரும் கூட பங்கேற்று, மரக்கன்று நட்டு, பங்களிப்பு செலுத்தினர்.அதைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்ட மித்ரா, ''அக்கா, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்பவாவது, நீர் நிலைகளை பற்றிய அக்கறை மக்களுக்கு ஏற்பட்டிருக்கே. மத்த ஊர்களை விட, நம்மூர்ல நீர் நிலைகளை பாதுகாக்க பலரும் முன்வர்றாங்க.
சென்னையில தண்ணீ இல்லாம அவதிப்படுறதை கேட்கும்போது, நம்மூர் பரவாயில்லைன்னு நெனைக்கத் தோணுது,'' என்றாள்.''ஆமாப்பா, நம்மூரு எப்பவுமே 'பெஸ்ட்' தான். ஊர் கூடி தேர் இழுக்கற மாதிரி, உக்கடம் பெரிய குளத்தை துார்வாருனதை மறக்க முடியுமா? அதே மாதிரி, குளம், குட்டை, ஏரிகளை பலரும் கரம் கோர்த்து துார்வாரி, தயார்படுத்தி வச்சிருக்காங்க. பருவம் தவறாம மழை பெய்யணுங்கிறதுக்காக, மரக்கன்று நடுறது, உயிர் வேலி அமைக்கிறது, 'ரிசர்வ் சைட்'டுகளில் தாவர வேலி அமைக்கிற வேலைகளை செஞ்சுக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.விழா முடிந்ததும் இருவரும் ஸ்கூட்டரில், கோவை நோக்கி புறப்பட்டனர். வெள்ளலுார் - சிங்காநல்லுார் வந்து, ஹோப் காலேஜ் வழியாக அவிநாசி ரோட்டில் பயணப்பட்டனர்.

வழியெங்கும் 'டிராபிக்'. ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழியில்லாத அளவுக்கு நெருக்கடி.அதைப்பார்த்த சித்ரா, 'கிரீன் காரிடர்ங்கிற சிஸ்டம் இதுக்கு முன்னாடி அமலில் இருந்துச்சு; 40 கி.மீ., வேகத்துல, எல்லா சிக்னலையும் கடந்து, சீராக போயிக்கிட்டே இருக்கலாம். இப்ப, என்னடான்னா, ஆம்புலன்ஸ் கூட போக வழியில்லாம தடுமாறி நிக்குது. போலீஸ்காரங்களோ, வேடிக்கைதான் பார்க்குறாங்க...'' என, அங்கலாய்த்தாள்.''இருந்தாலும், மைக் சத்தம் கேட்டா, ரொம்பவே 'அலார்ட்'டாக இருக்காங்களாமே...''''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். எந்த தகவலா இருந்தாலும், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, மைக்கில் தான் சொல்றாராம்.
அதனால, டி.ஐ.ஜி., - எஸ்.பி.,னு எல்லா உயரதிகாரிகளுமே, மைக்கில் வரும் தகவல்களை உஷாரா கேக்குறாங்க. யாரு தப்பு செஞ்சாலும், 'டோஸ்' விடுறாங்க.போன வாரம், மாமூல் வசூலிச்ச போலீஸ்காரங்களுக்கு, 'சஸ்பெண்ட்' உத்தரவே மைக்கில் சொன்னதுதான். அதனால, பேரு கெட்டுப்போயிடக்கூடாதுன்னு ரொம்பவே 'அலார்ட்'டா இருக்காங்க. மைக் சத்தம் கேட்டாலே, போலீஸ்காரங்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிடுதாம்,'' என்றாள் மித்ரா.
''மேட்டுப்பாளையத்துல நடந்த 'டபுள் மர்டர்' விவகாரத்துல, கொலை செஞ்சவங்களை உடனடியா போலீஸ் 'அரெஸ்ட்' பண்ணிட்டாலும், பிரச்னை மட்டும் தீராம இருக்காமே...'' என, கொக்கி போட்டாள் சித்ரா.''ஆமாக்கா, இறந்த பொண்ணோட குடும்பத்துக்கு நிவாரணம் தரணும், அரசு வேலை தரணும், நிலம் தரணும்னு வெவ்வேறு அமைப்புகள் சார்புல கோரிக்கை வச்சிருக்காங்க. அந்த பொண்ணு வளர்ந்தது பாட்டி வீட்டுலதானாம்.
நிவாரணத்த அம்மா கிட்ட தரக்கூடாதுன்னு ஒரு குரூப்பும், பெத்தவங்க கிட்ட நிவாரணம் தரணும்னு ஒரு குரூப்பும், சர்க்யூட் ஹவுசுல அதிகாரிங்க முன்னால சண்டை போட்டுக்கிட்டாங்களாம்,''''ஓ...''''தொழில்துறையை சேர்ந்தவங்க கோரிக்கையை உடனே ஏத்துக்கிட்டதா கேள்விப்பட்டேனே, உண்மையா,'' என, இழுத்தாள் சித்ரா.''ஆமாக்கா, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் கலெக்டர் ஆபீசுல குறைதீர் கூட்டம் நடத்துற மாதிரி, குறுந்தொழில் முனைவோருக்கும் நடத்தணும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.''கொடீசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்த எம்.எஸ்.எம்.இ., தின விழாவில், கலெக்டரிடம் கோரிக்கை வச்சாங்க.
ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை, கூட்டம் நடத்துறதா ஒத்துக்கிட்டாரு. முதல் கூட்டத்தை இந்த மாசமே நடத்துறா உறுதி அளிச்சதால, தொழில்துறையை சேர்ந்தவங்க ரொம்பவே சந்தோஷத்துல இருக்காங்க. இனியாவது, தொழில் பிரச்னைக்கு தீர்வு கெடைக்கும்னு நம்புறாங்க,'' என்றாள் மித்ரா.லட்சுமி மில்ஸ் சந்திப்பை கடந்து, அரசு விருந்தினர் மாளிகை வழியா சுங்கம் வந்தனர்.
திருச்சி ரோட்டில், அரசு மருத்துவமனை நோக்கி ஸ்கூட்டரை திருப்பிய மித்ரா, ''திருச்சி ரோட்டுல பாலம் கட்டுறாங்களே... சர்க்யூட் ஹவுஸ் ரோட்டுல வர்றவங்க ஏற முடியாதாமே...'' என, நோண்டினாள்.''ஆமா, மித்து, சுங்கம் சந்திப்பு பகுதியில நிலம் கையகப்படுத்துனா தான், அந்த இடத்துல பாலத்துல ஏறுறதுக்கேத்த மாதிரி கட்ட முடியுமாம். வருவாய்த்துறை தரப்புல நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வாய்ப்பில்லைன்னு சொல்லி, அந்த வடிவமைப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறைக்காரங்க கை விட்டுட்டாங்களாம்.
கலெக்டர் நேர்ல போயி ஆய்வு செஞ்சு, நிலம் தேவைப்பட்டா, கையகப்படுத்திக் கொடுக்கணும்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''அதெல்லாம் சரி, கவர்மென்ட் ஆஸ்பத்திரி டீனிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிங்க விசாரணை நடத்துனாங்களாமே...''''அதுவா, அரசு மருத்துவமனையில அவசர சிகிச்சை பிரிவுல கஜேந்திரன் என்கிற டாக்டர் இருந்தாரு. அவரை விபத்து சிகிச்சை பிரிவுக்கு மாத்தியிருக்காங்க.
இது, அவருக்கு பிடிக்கல. பழைய பிரிவுக்கே மாத்தணும்னு கேட்டிருக்காரு. நிர்வாகத்தரப்புல ஒத்துக்கலை. தன்னை டீன் அவதுாறா பேசுனதா மனித உரிமை ஆணையத்தில் டாக்டர் புகார் செஞ்சிருக்காரு...''''ஆமா, அந்த புகார் செஞ்ச டாக்டர் மேலேயும் ஏகப்பட்ட புகார் சொல்றாங்களே. ஆஸ்பத்திரிக்கு வர்ற நோயாளிகள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாத்திவிட்டாரு... கணக்கு வழக்கில்லாம விபத்து வழக்குகள்ல கோர்ட்ல ஆஜரானாரு...''னு வேற சொல்றாங்களே...''''ஆமா... அந்த மேட்டரும் ஓடுது. இந்த விவகாரத்தை ஆஸ்பத்திரி வட்டாரத்துல பரபரப்பா பேசிக்கிட்டு இருக்காங்க...'' என்றாள் சித்ரா.அப்போது, அவர்களை, போஸ்ட் ஆபீஸ் வாகனம் கடந்து சென்றது.அதை கவனித்த மித்ரா, ''அக்கா, ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபீசுல இருந்த கேன்டீனை எடுத்துட்டாங்க தெரியுமா,'' என்றாள்.அதைக்கேட்டு உச் கொட்டிய சித்ரா, ''அப்படியா, கம்மியான விலைக்கு பஜ்ஜி, போண்டா, டீ வித்துட்டு இருந்தாங்களே... அதை மூடிட்டாங்களா,'' என, கேட்டாள்.''அக்கா, கேன்டீன் நடத்துனது தப்பில்லை.
15 வருஷமா ஒருத்தருக்கே 'டெண்டர்' கொடுத்தது, தணிக்கை பிரிவு விசாரணையில வெளிச்சத்துக்கு வந்திருக்கு. முறைப்படி டெண்டர் கோராம, 'சம்திங்' வாங்கிட்டு, அனுமதி கொடுத்திருப்பாங்க போலிருக்கு. அதனால, இழுத்து மூட வச்சிட்டாங்க. இதை கண்டிச்சு, ஊழியர் சங்கத்தை சேர்ந்த சிலர், ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்காங்க. முறைகேடு நடந்துருக்கு; இதுக்கு ஆதரவா இருக்காங்களேன்னு அதிகாரிகள், வியப்பா பார்க்குறாங்க...'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ள கூட, ஒரு கேன்டீன் இருக்கே...''''ஆமாக்கா, அம்மா மூலிகை உணவகம்னு, பெயரை மாத்தி வச்சிருக்காங்க. இதுக்கு முன்னாடி, ஊழியர்களுக்காக நடத்துன கேன்டீன். ரொம்ப வருஷமா மூடிக்கெடந்துச்சு. மூலிகை உணவகம்னு பெயர் வச்சு, மகளிர் சுய உதவிக்குழு மூலமா நடத்துறாங்க...''''அதுக்கு... டெண்டர் இல்லையா...''''ஏன்க்கா, விட்டுடுங்களேன்...
இந்த உணவகத்தை வச்சு, லேடீஸ் சம்பாதிச்சிட்டு இருக்காங்க. இந்த கேன்டீனையும் மூடிடப் போறாங்க...''''மித்து, அந்த அர்த்தத்துல கேக்கல. முறைப்படி நடந்தா, எல்லாத்துக்கும் சந்தோஷம்தானே...''''அக்கா, கார்ப்பரேஷன்ல எந்த விஷயம் முறைப்படி நடந்துருக்கு. சவுத் ஜோன் அசிஸ்டென்ட் கமிஷனர் ரவி, போன வருஷமே 'ரிடையர்மென்ட்' ஆனாரு. அவரு, ஆளுங்கட்சி வி.ஐ.பி., 'மணி'க்கு ரொம்பவே நெருக்கமானவரு. அதனால, ஒரு வருஷம் பதவியை நீட்டிப்பு செஞ்சு கொடுத்தாங்க. கடந்த, ஜூன், 30ம் தேதி கால நீட்டிப்பு முடிஞ்சது.''அந்த பதவியை கைப்பத்துறதுக்கு, கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்குள் ஏகப்பட்ட போட்டி இருந்துச்சு. ஆனா, ரவிக்கே, மறுபடியும் ஒரு வருஷம் கால நீட்டிப்பு செஞ்சு அரசு உத்தரவு போட்டிருக்கு. இதனால, சீனியாரிட்டியில இருக்கற, மத்த அதிகாரிங்க ரொம்பவே 'அப்செட்'.'ரிடையர்மென்ட்' ஆனவங்களுக்கு, மறுபடியும் பதவி கொடுத்தா, தங்களுக்கு பதவி உயர்வு கெடைக்காமலே போயிடும்னு புலம்புறாங்க. கோர்ட்டுக்கு போயி, தடையுத்தரவு வாங்குறதுக்கு சிலர் திட்டமிட்டு இருக்காங்க'' என்ற சித்ரா, ரயில்வே ஸ்டேஷன் வழியாக, எஸ்.பி., அலுவலகத்தை கடந்து, ஸ்கூட்டரை இயக்கினாள்.அப்போது, ஹெல்மெட் அணிந்திருந்த இளைஞர்கள், உரசும் வகையில் நெருக்கமாக வந்து, வேகமாக சீறிச் சென்றனர்.அதைப்பார்த்து கோபப்பட்ட மித்ரா, ''அக்கா, இந்த மாதிரி ஏகப்பட்ட இளைஞர்கள் நம்மூர்ல சுத்திக்கிட்டு இருக்காங்க.
ராமநாதபுரத்துல இருந்து சவுரிபாளையம் போற ரோட்டுல, காலைல, 6:30ல இருந்து, 7:30க்குள்ள நடந்து போற பெண்களை, ஆள் அரவமற்ற இடத்துல, பைக்குல போற ஹெல்மெட் ஆசாமிங்க வழிமறிச்சு, நெருங்கி வர்றாங்க. 'அட்ரஸ்' கேக்குற மாதிரி பேச்சுக்கொடுத்து, ஆபாச வார்த்தைகளை சொல்லிட்டு, 'எஸ்கேப்' ஆயிடுறாங்க.''இது, அந்த ஏரியாவுல மிகப்பெரிய, பிரச்னையா ஓடிட்டு இருக்கு. அவுங்கள பிடிச்சு, 'மாத்து' கொடுக்கலாம்னு, சில பெற்றோர் கூடி நின்றிருந்தாங்க. ஆண்கள் திரண்டு இருந்தாங்கன்னா, நிக்காம போயிடுறாங்க.
ராமநாதபுரம் போலீஸ்காரங்களுக்கு, 'மாமூல்' வாங்குறதுக்கே நேரம் சரியா இருக்கு போலிருக்கு; மக்கள் பிரச்னையை பார்க்குறதுக்கு, நேரம் இல்லாம இருக்காங்க,'' என்பதற்கும், வீடு வருவதற்கும் சரியாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X