சங்கீத உலகின் வாணி! இன்று எம்.எல்.வசந்தகுமாரி பிறந்த நாள்

Added : ஜூலை 03, 2019
Advertisement
 சங்கீத உலகின் வாணி!  இன்று எம்.எல்.வசந்தகுமாரி பிறந்த நாள்

மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற எம்.எல்.வசந்தகுமாரி (எம்.எல்.வி.,) பிறந்தநாள் இன்று. இவர் அய்யாசாமி அய்யர், லலிதாங்கி தம்பதியருக்கு 1928 ஜூலை 3ம் தேதி பிறந்தார். பன்னிரெண்டு வயது முதலே இசை கற்கத் தொடங்கினார். ஜி.என்.பாலசுப்ரமணியத்திடம் பத்து ஆண்டுகள் இசை பயிற்சி பெற்றார். 1942-ல் இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம் எம்.எல்.வி.,க்கு பள்ளி படிப்பு தடைபட்டது. இது இவர் இசை உலகில் நுழைவதற்கு ஏதுவானது. கணவர் கிருஷ்ணமூர்த்தி. ஸ்ரீவித்யா(பின்னாளில் நடிகை), சங்கர்ராமன் என இரு பிள்ளைகளுடன் வாழ்கையை நடத்திவந்தார்.

மும்மணிகள்சங்கீத உலகில் மும்மணிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோர். அதில் வசந்தகுமாரி தன்னுடைய குரல் வசீகரத்தாலும், ஸ்ருதி சுத்தமாக, லயசுத்தமாக பாடும் திறமையினாலும் தனி பாணியை வகுத்துக் கொண்டு சங்கீத உலகில் வலம்வரத் தொடங்கினார். இவரின் ஆபூர்வமான மனோதர்மம் என்றழைக்கப்படும் கற்பனை வள ஆற்றலைக் கண்டு இசையுலகமே வியந்தது. இவர் ராகம் பாடும் போது கற்பனை வளம் மிகவும் வியக்கத்தக்க வகையில் இருக்கும்.

ரசிகர்கள் உணரும் படி அலட்டிக் கொள்ளாமல் பாடுவார். பழமைக்கும் புதுமைக்கும் ஏற்ப இசையை சரியான விகிதத்தில் கலந்து அளித்து தன் பாணியில் தலைசிறந்து விளங்கியவர். பாரம்பரிய இசையை புதிய பாணியில் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே. மிருதங்க மாமேதை பாலக்காடு மணிஅய்யரே இவருக்கு பக்கவாத்யம் வாசித்துள்ளார் என்றால் இவரின் தாளக் கட்டுப்பாடு எத்துணை சிறப்பாக இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகின்றது.

நாட்டிற்கு நகை வழங்கியவர்

நேரம் தவறாமல் கச்சேரிக்குவருவது, ரசிகர்களின் தன்மை அறிந்து புரிந்துபாடுவது போன்றன
இவரின் சிறப்பு இயல்புகள். கர்நாடக இசைக்கச்சேரியில் மனோதர்ம சங்கீதத்தில் உயர்வாய் பேசப்படும் ராகம் தானம் பல்லவியை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கண்டிப்பாய் பாடவேண்டும் என்ற வழக்கத்தினை நோக்கமாகக் கொண்டவர்.இவர் சபாக்களின் முன்னேற்றத்திற்காகவும், நிறுவனங்களின் தொடக்கத்திற்காகவும், ராணுவ வீரர்களின் நலவாழ்வு நிதிக்காகவும் பல கச்சேரிகளை விளம்பரமின்றியும், சன்மானமின்றியும் செய்து கொடுத்து உதவியுள்ளார். 1964-ல் சீன ஆக்கிரமிப்பின் போது தான் அணிந்த நகைகள் முழுவதையும் நாட்டு நலனுக்காக வழங்கினார். இது அவரின் நாட்டுப் பற்றை உணர்த்துகிறது.

ஏழை மாணவர்களின் கல்வி, ஏழைகளின் திருமணங்கள் போன்றவற்றிற்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் பல செய்துள்ளார். இளம் கலைஞர்கள் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர்.இவரின் இசை மென்மையானது, சுதந்திரமான போக்குடையது. இவர் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் படியான இசையை ரசிகர்களுக்கு அளிப்பதில் வல்லவர். பெண் பாடகர்களில் பல்லவி பாடுவதில் சிறந்தவர் என பெயர் பெற்றார்.

இவர் புரந்தரதாஸர் பாடல்களை மிக அற்புதமாக பாடியுள்ளார். “யாகே நிர்தய நாடியோ” என்ற சுபபந்துவராளி ராகப் பாடல், “நாராயணா” என்ற சுத்தன்யாஸி ராகப் பாடல், இந்நுதயபாரதே” என்ற கல்யாண வசந்தம் ராகப் பாடல்கள் உதாரணம்.

பக்கவாத்தியம்

பெண் பாடகர்கள், ஆண் பக்கவாத்தியக் கலைஞர்களோடு பாடாத காலத்தில் எம்.எல்.வி., அதனை முறியடித்தார். தன் குருவை எவரேனும் எதிர்மறையாக விமர்சனம் செய்தால் அதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் வருந்துவார். 'கற்பனை வளம் மிக்கவர் வசந்த குமாரி' என்று குரு ஜி.என்.பி.,யின் பாராட்டுதலைப் பெற்றவர்.குருவை போல இவரும் ஒரு நல்லாசிரியர். 1988-ல் சாகுந்தலம் என்ற நாட்டிய நாடகத்தினை தன் சொந்த முயற்சியால் மியூசிக்
அகாடமியில் நடத்திக் காண்பித்தார். சென்னை தமிழிசைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள்
கவுரவ பேராசிரியராகப் பணிபுரிந்தார். திருப்பதி பத்மாவதி பல்கலைக்கழகத்தில் இசைத் துறை தலைவியாக இருந்தார். ரிஷிவேலியில் உள்ள இசைக் கல்லுாரியிலும் கவுரவ பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

சங்கீத ரத்னாகரம், சங்கீதவாணி, திருப்பாவை மணி, இசைச் செல்வம், சங்கீத கலாசிகாமணி, மதுரகலா பிரவீணா போன்ற பட்டங்கள் பெற்றவர். 1967-ல் பத்மபூஷண், 1970-ல் சங்கீத நாடக அகாடமி விருது, 1976-ல் மைசூர் பல்கலையில் டாக்டர் பட்டம், 1978-ல் சங்கீத கலாநிதி விருதுகள் வாங்கியவர்.

உலகநாடுகளில் இசை மழை

இவர் தன்னுடைய தேனிசைக் குரலால் பல உலக நாடுகளுக்கு சென்று நம்முடைய கர்நாடக சங்கீதத்தைப பரப்பியுள்ளார். இலங்கை, நேபாளம், வடஅமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர், நியூயார்க், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் இவரின் இசைக்கு மயங்கினர்.இன்று வரை திரை இசையில் நிலைத்து நிற்பவை கர்நாடக இசை ராகங்களின் அடிப்படையில் இசை மெட்டுக்கள் அமைக்கப்படும் பாடல்களே என்பதை மறுக்க முடியாது.

திரை இசையில் 150 பாடல்களுக்கும் மேலாக பாடியுள்ளார். ராஜமுகி, மீண்ட சொர்க்கம், பார்த்திபன்கனவு, மங்கம்மாள், மனிதன், இன்ஸ்பெக்டர் போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார். “எல்லாம் இன்பமயம்” என்ற பாடலை பி.லீலாவுடன் இணைந்து பாடினார். ஆடாத மனமும் உண்டோ என்ற பாடலை சீர்காழியுடன் இணைந்து பாடினார்.பரதநாட்டியத்திற்காகவே இவர் பாடிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.“சின்னஞ்சிறுகிளியே” என்ற பாரதியார் பாடலை ராஜா தேசிங்கு படத்தில் பாடியுள்ளார்.ஜி.ராமநாதன் இசையில் “பாற்கடல் அலைமேலே” என்ற பாடலை பல ராகங்களில் பாடியுள்ளார். மீண்ட சொர்க்கம் படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் “பாவம் ராகம் தாளம் சேர்ந்த பரதக்கலை” என்ற பாடலை அற்புதமாகப் பாடியுள்ளார். இதன் மூலம் திரை உலக ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

இசைக்கலைஞர்களுக்கு அறிவுரை

வளரும் இசைக் கலைஞர்களுக்கு சிறந்த அறிவுரைகளை எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார். சங்கீதத்தை பொழுதுபோக்காக அல்லாமல், மனபூர்வமாக எடுத்துகொள்ளவேண்டும். இசை ஒரு சமுத்திரம்; பத்துவருட கட்டாய குருவழி பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்; ரசிகர்களை திருப்திப்படுத்துதல், ராகம் தானம் பல்லவி பாடுதல்; அசுர சாதகம் செய்தல் போன்ற அறிவுரைகளை வழங்கினார்.சக கலைஞர்களை தனக்கு இணையாக மதிக்கக் கூடியவர். ரசிகர்களின் மனம் அறிந்து இசை விருந்தளித்தவர். திரைஇசை மூலம் மக்கள் உள்ளத்தில் கர்நாடக
இசையையும் உட்புகுத்த முடியும் என்பதை நிரூபித்தவர். விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாதவர்.

மொழி வேறுபாடு இல்லாது பாடியவர். தன் வாழ்கையில் இன்ப துன்பங்களை மறந்து கலை
ஒன்றையே மூச்சாய் கருதி இசை வழங்கியவர். இசை ஞானத்தை சாருமதி ராமச்சந்திரன், பிரபாவதி, யோகம் சந்தானம், நிர்மலா ஸ்ரீநிவாசன்,சுதாரகுநாதன், சரஸ்வதி ஸ்ரீநிவாசன் போன்ற சிறந்த தன் சிஷ்யர்களுக்கு வாரி வழங்கி விட்டு 1990 அக்டோபர் 31ல் இவ்வுலகில் இருந்து மறைந்தார்.

கர்நாடக இசை இருக்கும் வரை, சங்கீத உலகில் அவரின் தேனிசைக் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.அவரின் அறிவுரைகளையும், இசைப் பயணத்தையும் வளரும் கலைஞர்கள் பின்பற்றினால் கலைத்துறையில் சிறந்து விளங்க முடியும்.

---முனைவர் க.தியாகராஜன்

இணைப் பேராசிரியர்ஸ்ரீஸத்குரு ஸங்கீதவித்யாலயம்

மதுரை

98430 76582

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X