தமிழகத்தில் நடப்பாண்டு 3 அரசு சட்டக் கல்லூரிகள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நடப்பாண்டு 3 அரசு சட்டக் கல்லூரிகள்

Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (6)
 தமிழகத்தில் நடப்பாண்டு 3 அரசு சட்டக் கல்லூரிகள்

சென்னை : ''தமிழகத்தில், நடப்பாண்டில், புதிதாக மூன்று அரசு சட்டக் கல்லுாரிகள் துவக்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: நடப்பாண்டில், புதிதாக, மூன்று அரசு சட்டக் கல்லுாரிகள் துவக்கப்படும். இதற்காக, தலா, 3.17 கோடி ரூபாய் வீதம், 9.52 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். உடனடியாக ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு கல்லுாரிக்கும், ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார். கோவை, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லுாரிகளில், மாணவர்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன், 7.70 கோடி ரூபாய் செலவில், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், தற்போது இயங்கி வரும், பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு, கூடுதல் இடம் அளிப்பதற்காக, 202.40 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படும். துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு, ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், வாகன நிறுத்தம், உணவக கட்டடம், பொது கழிப்பிடம் போன்ற கூடுதல் வசதிகளுடன், 5.09 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்படும்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், 10.93 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X