பொது செய்தி

தமிழ்நாடு

இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா! - 17

Added : ஜூலை 10, 2019
Advertisement
இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா! - 17


சீனியை தோற்கடிக்கும் சிறுவாணி தண்ணீர் ருசி!

'காவிரி தென்பெண்ணை பாலாறு -- தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி -- என
மேவிய ஆறு பலவோடத் -- திரு
மேனி செழித்த தமிழ்நாடு'
என, பெருமையுடன் பாடினான், பாரதி.
'மேனி செழித்திருக்கும் தமிழ்நாடு' எனப் பாடியிருக்கலாம். இன்றைய மணலில்லா, நீரில்லா ஆறுகளை நினைத்து தான், 'செழித்த தமிழ்நாடு' என, பாடியிருப்பானோ!

தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரனுடன் வரலாற்றுக் காலத்துக்கு செல்வோம். பாண்டிய நாட்டில் இருந்து விடைபெறும் முன், கன்னியாகுமரி வரை சென்று திரும்பி, கொங்கு மலைகளில் காலாற நடந்து விட்டு, பிறகு, பிற்கால மன்னர்களை சந்திக்கலாம். பண்டைய நாஞ்சில் நாடு தான், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின், அகஸ்தீஸ்வரம், தோவாளை ஒன்றியங்களை உள்ளடக்கிய வளமான பகுதி. இதை, 'நஞ்சை கொழிக்கும் நாஞ்சில் நாடு' என்றும் புகழ்வர். காரணம், இங்கு பாயும், திருவட்டாறை, 'வளநீர் வாட்டாறு' என, புறநானுாறு புகழும். இந்த ஆறு குறித்த கல்வெட்டுகள் நிறையவே இப்பகுதிகளில் கிடைக்கின்றன.

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த, கல்குளம் கல்வெட்டில், அங்கிருந்த, பெரிய குளக்கரை உடைப்பெடுத்ததையும், அதை கரை கட்டி தடுத்து, நீரை சேமித்ததையும் பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், நிலமானியம் வழங்கிய செய்தியும் அதில் உள்ளது. அதாவது, குளப்பாசனத்தில் விளைச்சல் பெறும், கோவில்கள் மற்றும் புத்த விகாரங்களுக்கு தானமாக அளித்த நிலங்களில் இருந்து கிடைக்கும், குடிவாரம் என்ற வரியில் இருந்து, குளத்தை பராமரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதை செய்யாதோருக்கு, மூன்று கழஞ்சு பொன் அபராதமாக விதிக்கப்பட்டது. ஒரு கழஞ்சு என்பது, 5.5 கிராம். தற்போதைய கணக்கீட்டின்படி, 16.5 கிராம் தங்கம்; அதாவது, இரண்டு சவரனுக்கு மேல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, பாண்டியன் அணை தான், முற்கால பாண்டியர்கள் கட்டிய பழமையான அணை. இதில், 1116ல் பொறிக்கப்பட்ட தமிழ் பாடல் உள்ளது. இந்த கல்வெட்டு, தற்போதைய பெருஞ்சாணி அணையின் அருகில் ஓடும், பறளியாற்று பாண்டியன் அணையில் உள்ளது. வேநாட்டரசனான கூபகன், பறளியாற்றின் நீரை, பழையாற்றுக்கு திருப்பி விட கட்டிய அணை, பொன்மனை கிராமத்தில், பறளியாற்றின் குறுக்கே இருந்தது. காலப்போக்கில், இது சிதைந்ததால், திருவிதாங்கூர் மன்னர், மார்த்தாண்ட வார்மாவால், புத்தர் அணை கட்டப்பட்டது. இனி, குமரியில் இருந்து விடைபெற்று, கொங்கு மலைகளில் பயணிப்போம்.

கொங்கு நாடு என்பது, தற்போதைய தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்கள் அடங்கிய பகுதி. கொங்கு நாடு, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால், மழை வளம் மிக்கது. இங்குள்ள, நொய்யலாற்றின் குறுக்கே, 32 அணைகள் கட்டப்பட்டதாக பட்டயக் குறிப்புகளும், இரண்டு அணைகளைப் பற்றி, கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. கொங்கு சோழன், வீர ராஜேந்திரனின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு, பேரூர் அருகில், இரண்டு கல்லணைகள் இருந்ததைக் குறிப்பிடுகிறது. அதே மன்னனிடம், மாளிகை பழநந்தம் பகுதி மக்கள், தங்கள் பகுதியில் அணைகட்டிக் கொள்ள அனுமதி கேட்டனர்.

தேவிசிறை என்ற அணையை கட்ட வேண்டாம் என்ற, ஒரு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கிறான் மன்னன். அதாவது, கீழேயுள்ள, கோளூர் அணை நிரம்பிய பின் தான், தேவி சிறையில் தண்ணீர் தேக்க வேண்டும் என்கிறான். எவ்வளவு, தொலைநோக்கு சிந்தனை! அரசன், அணைநீர் நிர்வாகப் பொறுப்பை, வெள்ளலுாரைச் சேர்ந்த, செம்படவன் பில்லாளன் என்பவனிடம் அளித்த செய்தியை, சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு கூறுகிறது. அதே கல்வெட்டில், அணைக்கட்டு பராமரித்தல், நீர் பங்கீடு, தானம் பெற்ற நிலங்கள் குறித்த செய்திகளும் உள்ளன. கொங்கு நாட்டில், பல்லடம் உள்ளிட்ட பல ஊர்களை, மன்னர்கள் உருவாக்கியதும், தண்ணீர் இல்லாமல், 'அனாதிபாழ்' என்ற பெயரில், அவ்வூர்கள் காலியானதையும், போளுவாம்பட்டி கல்வெட்டு கூறுகிறது.

கொங்கு நாட்டை ஆண்ட, கொங்கு சோழர்கள் மற்றும் வீரகேரளர்கள் உள்ளிட்டோர், அமராவதி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட ஆறுகளில் இருந்து கால்வாய் வெட்டி, நீரை பாசனத்துக்கு திருப்பினர். இந்த செய்திகளை, கொழுமம், குமரலிங்கம், சோழமாதேவி, கடத்துார் கல்வெட்டுகள் கூறுகின்றன. இன்று, நொய்யலாறாக பிறக்கும் சிறுவாணிதான், கொங்கு பகுதி மக்களின் தாகம் தீர்க்கிறது; இது, உலகின் அதிக ருசி உள்ள நீராக அறியப்பட்டுள்ளது. அரசன் உருவாக்கிய பல கால்வாய்கள், அவர்களின் பெயர்களிலேயே இருந்தன. ஆனைமலைக் கல்வெட்டு, ஆழியாறு கால்வாய்கள் பற்றியும், பேரூர், கோவை, போளுவாம்பட்டி ஆகிய ஊர்க் கல்வெட்டுகள், நொய்யலாற்று கால்வாய்கள் பற்றியும் குறிப்பிடுகின்றன. இந்த நொய்யலாற்றங்கரையில் தான், வரலாற்று செழிப்பு மிக்க பழந்தமிழர்கள் வாழ்ந்த இடம் இருந்ததை, கொடுமணல் அகழாய்வுகள் தெரிவிக்கின்றன.

கி.பி., 14ம் நுாற்றாண்டுக்கு பின், மைசூர் உடையார்கள், அவினாசி, பழங்கரை, பேரூர், சேவூர், அன்னுார், கோவை, சர்க்கார் சாமங்குளம், திருமுருகன் பூண்டி, பெருமாநல்லுார் உள்ளிட்ட ஊர்களில் ஏரி, குளங்களை வெட்டினர். கோவையில் இருந்து, 20 கி.மீ.,ரில் உள்ள, சுண்டைக்காய்முத்துாரின் அய்யாசாமி மலையில், ஆதித்த சோழர் காலத்து, ராசகேசரி பெருவழி பற்றிய கல்வெட்டு உள்ளது. அதாவது, சேர நாடான கேரளாவின் கொச்சியில் இருந்து, கோவை, கரூர், திருச்சி வழியாக, சோழநாட்டு துறைமுகமான பூம்புகார் வரை, வணிகர்கள் பொருட்களை ஏற்றிச் செல்லும் வழி தான், ராஜகேசரி பெருவழி.

அவ்வழியில் செல்லும், வணிகர்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக, அல்லிக்குளம், குறிச்சி குளம், நாகராஜபுர குளம், முத்தனங்குளம், பனங்காட்டு குளம், வாலாங்குளம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை ஏற்படுத்தி, நொய்யலாற்று நீரை கால்வாய்கள் வழியாக, சோழ மன்னர்கள் நிரப்பித் தந்தனர். வீரபாண்டியன் ஆட்சி காலத்தில், கொங்கு பகுதியை ஆண்ட காலிங்கராயன், பவானி ஆற்றில் கட்டிய, காலிங்கராயன் அணை, பாம்பாறு உள்ளிட்டவையும் பாசன வசதியை பெருக்கின. இவ்வாறு, கொங்கு பகுதியில், பல நீர் நிலைகளை, மன்னர்கள் ஏற்படுத்தி இருந்தனர். அவற்றைப் பற்றிய பல குறிப்புகளும், நீர்நிலைகளும் இப்போது இல்லை என்பது தான் வருத்தம்.

- நடுவூர் சிவா
naduvoorsiva@gmail.com


'மாதரச பட்டணம் சொல்லும் கல்வெட்டு'

பெண்ணேஸ்வரமடம் கல்வெட்டு குறித்து, வரலாற்று ஆய்வாளர், சுகவனமுருகன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள, பெண்ணேஸ்வரமடம் என்ற ஊர் பாறையில், 31 வரியுடன் கல்வெட்டு உள்ளது. 1369ல், விஜயநகர அரசனான, குமார கம்பன்னனின் தளபதியான, சோமப்ப தண்டநாயக்கனின் மகன், கண்டம கூலிமாறாயன், தன் பெயரில் வெட்டிய கால்வாய் பற்றிய செய்தியை, இக்கல்வெட்டு கூறுகிறது. அதாவது, பெண்ணேஸ்வரமடத்திலிருந்து, 8 கி.மீ.,யில் உள்ள, பாரூர் ஏரிக்கு நீர் நிறைக்க, இக்கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இது, 5,000 ஏக்கர் நிலத்துக்கு, பாசன வசதியை ஏற்படுத்துகிறது. இந்த கால்வாய், தற்போதும் பொதுப்பணித் துறையால், நல்லநிலையில் பராமரிக்கப்படுகிறது.

இந்த கல்வெட்டில் தான், 700 ஆண்டுகளுக்கு முன், இன்றைய சென்னையை, 'மாதரசப்பட்டினம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழமண்டல கடற்கரையில், ஏழு பட்டணங்கள் இருந்தன. அதில் ஒன்றாக, இந்த பட்டணமும் இருந்துள்ளது. மேலும், திம்மாபுரம் ஏரி, கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட இடங்களில், நீர் மேலாண்மை குறித்த கல்வெட்டுகள் உள்ளன. இரு ஆறுகள் சேருமிடத்தில், சிற்றாறு தடுப்பணை கட்டி, பெரிய ஏரி உருவாக்கப்பட்ட செய்தியை, கிருஷ்ணகிரி கல்வெட்டு கூறுகிறது.

அதேபோல், காட்டாறாக வரும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரியில் தான் ஆறாக நிலைபெறுகிறது. இங்கு தான், சாமி ஏரி, எண்ணெய்கோல் புதுார், கோபச்சந்திரம் உள்ளிட்ட யானைகளின் வழித்தடங்கள் உள்ளன. இந்த ஆற்றின் வெள்ளப்பெருக்கை குறிக்க, 'வெண்ணெய் உருகும் முன், பெண்ணை பெருகும்' என்பர். இதன் அருவியான துாவல், ஊத்தங்கரை அருகில் உள்ளது. இங்கும் பல கல்வெட்டுகள் உள்ளன. இங்கு, தொல்லியல் சின்னங்கள், அதிகமாகக் கிடைக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X