பொது செய்தி

தமிழ்நாடு

காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான கல்லூரி மாணவி பணமின்றி தவிப்பு

Added : ஜூலை 10, 2019
Advertisement
காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான கல்லூரி மாணவி பணமின்றி தவிப்பு

சேலம்: முதல்வரின் ஊரைச் சேர்ந்த, மாற்றுத் திறனாளி கல்லுாரி மாணவி, காமன்வெல்த் பாரா ஜூடோ போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றும், பணமின்றி, உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

முதல்வரின் சொந்த ஊரான, சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, செட்டிமாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர், கூலித்தொழிலாளி பழனிசாமி, 52. இவரது மனைவி அம்மாசி, 45. இவர்களுக்கு மணிமேகலை, 21, சுபாஷினி, 19, என, இரு மகள்கள், ராஜ்குமார், 11, என்ற மகன் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மூவருமே, பார்வை குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள். அயோத்தியா பட்டணத்தில் உள்ள பார்வை குறைபாடு உள்ளோர் விடுதியில், எட்டு ஆண்டுகளாக தங்கி படித்த சுபாஷினி, தற்போது, சேலம், அம்மாப்பேட்டை தனியார் கல்லுாரியில், பி.ஏ., வரலாறு, இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

உடலில் உள்ள குறைபாட்டை வென்று, ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதிலேயே தோன்றியதால், ஏழு ஆண்டுகளாக, ஜூடோ எனும் தற்காப்பு கலையை, ஆர்வத்தோடு கற்று, ஆண்டுதோறும் தேசிய அளவில் தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்று, சாதித்து வருகிறார். ஜன., 17 முதல், 21 வரை, உத்தர பிரதேச மாநிலம், கரக்பூரில் நடந்த தேசிய பாரா ஜூடோ போட்டியில் பங்கேற்ற சுபாஷினி, 44 கிலோ எடை பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து, இங்கிலாந்தின், லண்டன் பர்மிங்ஹாமில், செப்., 25 முதல், 29 வரை நடக்கும் காமன்வெல்த் பாரா ஜூடோ போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் வெற்றி பெற்றால், எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில், சர்வதேச அளவில், சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இவரது தந்தை பழனிசாமிக்கு, இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புக்கு உள்ளானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன்னார்வலர்கள் மூலம், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, தற்போது, கூலி வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டில் உள்ளார். தாய் அம்மாசி, கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். அக்கா மணிமேகலை, சென்னை, பிரசிடென்சி கல்லுாரியில், எம்.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். தம்பி ராஜ்குமார், அயோத்தியாப் பட்டணம் பார்வையற்றோர் விடுதியில், ஆறாம் வகுப்பு படிக்கிறார்.

லண்டனுக்கு சென்று, காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க பணமின்றி, சுபாஷினி தவித்து வருகிறார். முதல்வர் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்த்து, காத்திருக்கிறார். உதவ விரும்புவோர், அயோத்தியாப் பட்டணத்தில் இயங்கும், தமிழ்நாடு பார்வையற்றோர் விடுதி நிர்வாகி சேகர் என்பவரை, 98941 24817 என்ற மொபைல் போன் எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X