ரூ.3.5 கோடி கொள்ளை: போலி போலீசார் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.3.5 கோடி கொள்ளை: போலி போலீசார் கைது

Added : ஜூலை 10, 2019 | கருத்துகள் (1)
ரூ.3.5 கோடி கொள்ளை: போலி போலீசார் கைது

பெருந்துறை : போலீசார் போல நடித்து, நகைக்கடை உரிமையாளரின், 3.5 கோடி ரூபாயை கொள்ளையடித்த, கேரளாவைச் சேர்ந்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பூத்தானங்கடியைச் சேர்ந்தவர், அன்வர் சதர்த். இவர், சென்னை மற்றும் கோவையில், நகை கடைகள் நடத்தி வருகிறார். ஏப்., 3ல், 'டஸ்டர்' காரில், தன் வாகன ஓட்டுனர்கள் சிகாப், முனீர், நிசாத் ஆகியோரிடம், 3.50 கோடி ரூபாயை, சென்னையிலிருந்து, கேரளாவுக்கு கொடுத்து விட்டார். மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு, ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில், போலீஸ் உடையில் இருந்த மர்ம நபர்கள், காரை வழி மறித்து, 3.50 கோடி ரூபாயை கொள்ளையடித்து, தப்பினர்.

பெருந்துறை போலீசார், விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, பெருந்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் வந்த மூவர், முன்னுக்கு பின் முரணாக தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 35 - 48 வயதுடைய மூவரும், 3.50 கோடி ரூபாயை கொள்ளையடித்தது, தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 31 லட்சம் ரூபாய், மூன்று கார்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய, எட்டு பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X