பெங்களூரு: முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் என்ன? என கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே பல்வேறு அதிருப்தி காரணமாக காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள், ராஜினாமா செய்தனர். பா.ஜ.வினர் ஜனநாயக படுகொலை செய்து விட்டதாக கூறி காங்கிரஸ், ம.ஜ.த. தலைவர்கள் ராஜ்பவனை முற்றுகையிட முற்பட்டனர்.
ஆஜராக உத்தரவு
பதவி விலகிய 10 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவர்கள் இன்று(ஜூலை 11) மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ஆஜராகி ராஜினாமா கடிதத்தை அளிக்க உத்தரவிட்டது. அது குறித்து இன்றே முடிவு எடுக்கவும் சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின், முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வார் என்றும், அமைச்சரவையை கலைப்பார் எனவும் தகவல்கள் வெளியாகின.
அவசியம் என்ன?
குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், தற்போது முதல்வர் பதவியை விட்டு ஏன் விலக வேண்டும்? இதற்கான அவசியம் என்ன? கடந்த 2009 - 10ம் ஆண்டில், முதல்வராக எடியூரப்பா இருந்த போது, 8 அமைச்சர்கள் உட்பட 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அப்போது எடியூரப்பா பதவி விலகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
