பொது செய்தி

தமிழ்நாடு

இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!

Added : ஜூலை 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement
இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!


அகழி நீரால் அரண் அமைத்த அரசர்கள்!

'சும்மா கிடந்த நிலத்தை கொத்தி; சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி; கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு; தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு...'
இது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திரைப்படத்துக்காக அமைத்த, எதிர்முனைப்பாடல். இருப்பினும், அன்றைய, தமிழ் மன்னர்கள் ஏற்படுத்திய நீர்நிலைகளில் இருந்து, பாசனம் செய்த விவசாயிகள், இப்படித் தானே பாடியிருப்பர்!

தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரனுடன், பிற்கால மன்னர்கள் ஏற்படுத்திய நீர்நிலைகளை கண்டு வருவோம். தமிழகத்தில், மூவேந்தர்களுக்கு பின், தொடர்ந்து ஆட்சி செய்த, சம்புவராயர்கள், காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கன் உள்ளிட்ட சிற்றரசர்களும், நீர்ப்பாசன பணிகளை சிறப்பாக செய்தனர். பின், விஜயநகர பேரரசர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், முஸ்லிம்கள், ஆங்கிலேயர்கள் ஆண்டனர். இவர்களில், விஜயநகர மற்றும் நாயக்கர்கள், புதிய நீர்நிலைகளை அமைத்தும், பராமரித்தும் வந்தனர்.


சோழர்களை பின்பற்றி:

விஜயநகர பேரரசர்களை பொருத்தவரை, சோழர்களை பின்பற்றியே நீர்நிலைகளை பராமரித்து, விவசாயத்தை பெருக்கினர். ஆனால், சோழர்களை போல, விவசாயத்தை முன்னிலைப் படுத்தாமல், தொழில், வணிகம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தனர். விஜயநகர பேரரசர்கள் பெரிய ஏரிகளை வெட்டி, அதற்கு, சமுத்திரம் என, பெயரிட்டு மகிழ்ந்தனர். அப்படித் தான், காஞ்சி புரம் அருகில், தற்போது, தென்னேரி என, அழைக்கப்படும் ஏரியை, தாதாசாரியார் என்பவர் உருவாக்கி, அதில், 23 மடைகள் அமைத்தார். அதற்கு, அப்போது, அவர் தாத சமுத்திரம் என, பெயரிட்டார்.

மேலும், அந்த ஏரிக்கரையில், ஆஞ்சநேயர் கோவில் ஒன்றையும் கட்டி, ஏரியை புனிதமாக்கினார். ஏரியை பராமரிக்க, ஏரிக்கடமை, ஏரிக்கூலி, ஏரி மீன்பாட்டம், ஏரிப்பாசி, வேலிக்குழி பணம், வாசல்குழி பணம் உள்ளிட்ட வரிகளை விதித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் ஒன்றியத்தில் உள்ள, மேலப்பட்டு ஏரியை, துார் எடுக்கவும், பராமரிக்கவும், 1572ல் ஆட்சி செய்த, முதலாம் திருவரங்கன், பன்றி உருவம் பொறித்த, 400 வராகன் நிதி அளித்துள்ளார். காஞ்சிபுரம் அருகேயுள்ள புத்தேரியை, பொம்மராசு லிங்கப்பையர் கட்டி, சந்திரமேகத் தடாகம் என, பெயரிட்டார்.

பின் ஆட்சிக்கு வந்த, மராட்டிய வேந்தர், அதை அகலப்படுத்தியும், மதகு கட்டியும், பாலாற்றிலிருந்து நீர் எடுத்துவரும் பணியை செய்துள்ளார். செங்கல்பட்டு ஒன்றியம், காட்டாங்கொளத்துார் அருகேயுள்ள, வல்லாஞ்சேரி கல்வெட்டு, ஏரியில் படிந்துள்ள சேற்றை, ஆண்டுக்கு, 30 குழி வீதம், மீன் பிடிப்போர் அகற்ற வேண்டும் என, கூறுகிறது. மேலும், நெல்லைக்கு அருகேயுள்ள, நாங்குநேரியில், குளத்தில் இருக்கும் பாசியை, உரத்திற்காக விவசாயிகள் எடுத்துக் கொள்ளும் உரிமையை, அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. பாசிக்கு பதில், ஒருவர், 18 அடி நீளம், 9 அடி அகலம், 3 அடி ஆழமுள்ள குழியை, ஆண்டுதோறும் எடுக்க வேண்டும் என்கிறது.


இரவிலும் காவல்:

அப்போதுள்ள ஏரிகளில் இருந்து, இரவிலும் நீர் பாயும் என்பதால், மதகை கண்காணிக்க, ஓர் ஊரையே உருவாக்கியதை, 'இரா மதகு காவல் சேரி' என்ற, கல்வெட்டு சொல்கிறது. ரகுநாத நாயக்கரை தொடர்ந்து, தஞ்சையை யும், திருமலை நாயக்கரை தொடர்ந்து, மதுரை யையும் நாயக்கர்கள் ஆண்டனர். அவர்கள், தமிழகத்தில் அதிகமாக நீர் மேலாண்மை பணிகளை செய்துள்ளனர். மதுரையை, 1429 முதல், 1738 வரை, தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, மதுரை நாயக்கர்கள், ஸ்ரீரங்கம் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்களை கட்டி, ஆன்மிக பணி செய்தனர். அதேநேரம், மயிலாடும்பாறை கிராமத்திற்கு தெற்கே, நரசிங்கபுரத்தில், வைகை அணையின் குறுக்கே, விஸ்வநாத நாயக்கர் அணை கட்டினார்.

தளவாய் அரியநாதரை தொடர்ந்து வந்த பலரும், தாமிரபரணி ஆற்றில், அரியநாயகிபுரம் அணைக்கட்டு உட்பட, பாளையன், மருதுார், சுத்தமல்லி, நதியுண்ணி உள்ளிட்ட அணைக்கட்டுகளையும் கட்டினர். ஒரு கால்வாய் பிரியும் இடத்தில், 'ட' வடிவிலும், இரு கால்வாய்கள் பிரியுமிடத்தில், குதிரை லாட வடிவிலும் அணைகளை அமைத்து, நீர்மட்டத்தை உயர்த்தினர். இதனால், மேடான பகுதிகளுக்கும் நீர் சென்றது; விவசாய பரப்பு அதிகரித்தது. அதேபோல், தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள, மகாமக குளம், அய்யன்குளம், அய்யன் வாய்க்கால் ஆகியவற்றை நாயக்க மன்னரின் அமைச்சரான, கோவிந்த தீட்சிதர் அமைத்தார்.

நெல்லை பகுதியில், அரியநாத முதலியாரால், விஸ்வநாத நாயக்கர் பேரேரி என்ற ஏரி வெட்டப்பட்டது. தற்போது, அது, தளவாய்க்குளம் என, அழைக்கப்படுகிறது. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், திருவண்ணாமலை அருகே உள்ள, தேவிகாபுரம் என்ற ஊரில், செல்லங்க சமுத்திரம் என்ற ஏரி மற்றும் குளம், கிணறுகளை வெட்ட நிதியளித்த செய்தியை, கல்வெட்டு கூறுகிறது. அவர்களைத் தொடர்ந்து வந்த, முத்துவீரப்ப நாயக்கர், நீர்நிலைகளில், பல கலிங்குகளை ஏற்படுத்தினார். திருச்சியை தலைநகராக ஏற்று ஆட்சி செய்த, ராணி மங்கம்மாள், உய்யக்கொண்டான் ஆற்றில், மடைகளையும், கலிங்குகளையும் கட்டினார். அவர் பெயரில், ஒரு மடை, மங்கம்மாள் மடை என, வழங்கப்படுகிறது.


பத்ரே ஆலம்:

திருச்சி, நவலுார் குட்டப்பட்டு ஏரியில், பத்ரே ஆலம் என்பவர், குமிழி அமைத்த செய்தி கல்வெட்டில் உள்ளது. செஞ்சியை மையமாக வைத்து ஆட்சியை துவக்கிய வையப்ப நாயக்கர், வராக நதியில் ஒரு அணைக்கட்டை நிறுவி, நீரை, சிறுகடம்பூர் குளத்தில் விழும்படி செய்தார். தஞ்சையை ஆண்ட, செவ்வப்ப நாயக்கன், தஞ்சையில் சிவகங்கை கோட்டை, அரண்மனை, தஞ்சை பெரியகோவில் கோட்டைகளை எழுப்பி, சுற்றி அகழிகளையும் வெட்டினார். தஞ்சையின் சிறிய கோட்டை மற்றும் பெரிய கோட்டைகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, சிவகங்கை குளத்தையும் வெட்டினார்.


சேப்பனாவாரி:

அந்த குளத்தை நிரப்ப, ஓர் ஏரியை வெட்டினார். தற்போதைய தஞ்சையில் உள்ள, சேப்பனாவாரி என்ற குடியிருப்பு பகுதி தான், அப்போதைய, செவப்பன் ஏரியாக இருந்தது. இந்த ஏரிக்குள், தஞ்சையின் மழை நீரை சேமிக்கும் வகையில், வாரிகளை அமைத்தார். ஆனால், அந்த ஏரியில், செம்மண் நிற நீர் வந்ததால், அதன் மேல் மட்டத்தில் இருந்து, தெளிந்த நீரை, மணல் பரப்பிய சிவகங்கை குளத்துக்குள் பாய்ச்சி, அதை, குழாய்கள் வழியாக, தஞ்சை மக்களுக்கு குடிநீராக வினியோகித்தார். அவர், திருவண்ணாமலை கோவில் திருப்பணிக்காகவும் பெரிய குளங்களை வெட்டினார்; குடிநீருக்காகவும் பல நீர்நிலைகளை உருவாக்கினார். இந்த வரலாற்று நாயகர்கள் ஏற்படுத்திய திருக்குளங்கள், கிணறுகளில், நாளை நீர் அருந்துவோம்.

- நடுவூர் சிவா
naduvoorsiva@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramouli - chennai,இந்தியா
12-ஜூலை-201913:52:17 IST Report Abuse
Chandramouli சரி. அந்தக்காலத்தில் குடிமக்கள் எல்லோருக்கும் அவைகளின் நீர்நிலை பயன்பாடுக்குக்கேற்ப கடமை இருந்தது. அதை அவர்கள் மனமுவந்தோ அரசுக்கு பயந்தோ நிறைவேற்றினர் . அனால் இன்று எல்லோரும் மன்னர். உரிமை இருக்கிறது அல்லது உரிமைக்கு போராடுகிறோம் . அனால் கடமை? அப்புறம் தண்ணீர் மட்டும் எப்படி வரும்?
Rate this:
Share this comment
Cancel
S.Pattabiraman - Chennai,இந்தியா
12-ஜூலை-201912:57:24 IST Report Abuse
S.Pattabiraman An excellent series. I request you to publish this in a book form and oblige.
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
12-ஜூலை-201902:05:41 IST Report Abuse
.Dr.A.Joseph பட்டு கோட்டையாரின் வரிகளை படித்தவுடன் என்னுள் எழுந்த கேள்வி .சில மேடைகளில் அப்பாவின் இசையா ?அல்லது எனது இசையா அல்லது பாடல் வரிகளா? என இளையராஜாவும் அவரது புதல்வர்களும் பிதற்றுவதை பார்த்திருக்கிறேன்.இளையராஜா தனித்திறமை படைத்தவர் என்பதை எவரலாலும் மறுக்க முடியாது.ஆனால் எந்த மேடையிலாவது கண்ணதாசனின் வரிகளா? அல்லது எனது இசைக்கு ஈடாகுமா பட்டு கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகள் என இளையராஜா ஏன் முழக்கமிடுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X