கோவை:மூவர் கொலையில் கைதான, முக்கிய எதிரி மோகன்ராம், ஜாமின் மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதுாரை சேர்ந்த வக்கீல் ராஜா,32, கொலை வழக்கில் கைதான, தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன், அருண், தியாகராஜன், மாதவன் ஆகியோர் 2015, ஆக., 26ல், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கோவை சிறையிலிருந்து தஞ்சாவூருக்கு சென்ற போது, திருச்சி ரோட்டில் மர்ம கும்பல், இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். மணிகண்டன் தவிர மற்ற மூவரும் இறந்தனர். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர்.மும்பையில் தலைமறைவாக இருந்த, திண்டுக்கல்லை சேர்ந்த கூலிப்படை தலைவன் மோகன்ராம்,43, கடந்தாண்டு, அக்., 8ல் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் விடுவிக்க கோரி,கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், மோகன்ராம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் ஆறுமுகம், ஜாமினில் விடுவிக்க கூடாது என்று வாதிட்டார்.எதிர் தரப்பு வக்கீல் ஞானபாரதி வாதிடுகையில், ''மோகன்ராம் ஒன்பது மாதங்களாக சிறையில் இருக்கிறார். அவரிடம் போலீசார் 'கஸ்டடி' எடுத்து விசாரித்து விட்டனர். எனவே ஜாமினில் விடுவிக்க வேண்டும்'' என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மோகன்ராம் ஜாமின் மனுவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE