தென்னையில் ஊடுபயிராக மணக்கும் பாக்கு! நமக்கு நாமே உற்பத்தி செய்யலாம் நாற்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் ஊடுபயிராக மணக்கும் பாக்கு! நமக்கு நாமே உற்பத்தி செய்யலாம் நாற்று

Added : ஜூலை 11, 2019
 தென்னையில் ஊடுபயிராக மணக்கும் பாக்கு! நமக்கு நாமே உற்பத்தி செய்யலாம் நாற்று

பொள்ளாச்சி:தென்னையில் ஊடுபயிராக பாக்கு பயிரிட விரும்புவோர், தரமான நாற்றுகள் உற்பத்தி செய்வது குறித்து அனுபவ விவசாயிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.இந்தியா முழுக்க பொதுப் பழக்கமாக உள்ளது தாம்பூலம் தரிப்பதாகும். தாம்பூலத்துக்கு முக்கிய கூட்டுப் பொருளாக இருப்பது பாக்கு ஆகும். இதற்காக, உள் நாட்டில் மட்டும் ஆண்டுக்கு, 1.5 லட்சம் டன் பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.பாக்கு பணப்பயிராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பாக்கு மரம் கிளைகள் இல்லாத, உயரமாக வளரக்கூடிய மர வகையை சேர்ந்தது. 15 - 38 டிகிரி வெப்ப நிலையில் நன்கு விளைச்சல் கொடுக்கும். நல்ல பாசன வசதியும், வடிகாலும் அவசியம். பாக்கு மரத்துக்கு நிழல் முக்கியம் என்பதால், தென்னையில் ஊடு பயிராக பயிரிட சிறந்தது.கேரளாவில் பாக்கு தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. கேரள எல்லையை ஒட்டிய பொள்ளாச்சி பகுதியில், பாசனம் அதிகமுள்ள தோட்டங்களில் விவசாயிகள் பாக்கு சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.இதற்காக விவசாயிகள் பாக்கு நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்கின்றனர். ஆனால், அனுபவ விவசாயிகள், நேரடி நாற்று உற்பத்தியே சிறந்தது என்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:குறைந்தது, 30 - 40 வயதுள்ள தரமான மரத்தில் இருந்து பழுத்து உதிர்ந்த முற்றிய பாக்கு காய்களை சேகரித்து, அவற்றில் குறைந்தது, 40 கிராம் எடையுள்ள காய்களை எடுத்து, நீரில் மிதக்க விட வேண்டும். அவற்றில், காம்புகள் மேல் நோக்கி மிதக்கும் காய்களை விதை காய்களாக தேர்வு செய்ய வேண்டும்.
அவற்றை, 20 நாட்கள் நிழலில் உலர்த்தி, பிறகு மாட்டு கோமியம், சாணம் மற்றும் தண்ணீர் கலந்து பிசைந்த கலவையில் பொதிந்து நேர்த்தி செய்ய வேண்டும். இரண்டு மாதங்களில் பெரும்பாலான விதைகள் முளை விட்டிருக்கும். முளை விடாத விதைகளை நீக்கி விட வேண்டும். தேர்வு செய்ய விதைகளை மீண்டும் ஒரு முறை விளை நிலத்தின் மண், மாட்டு சாணம், தண்ணீர் கலந்த கலவையில் முக்கி, வைக்கோல் கொண்டு மூடாக்காக போட்டு வைக்க வேண்டும்.பிறகு, நிலத்தில் இரண்டு செ.மீ., ஆழத்தில், இரண்டு மரங்களுக்கு இடையே ஒன்பது அடி இடைவெளியில் குழி எடுத்து, குருத்து மேல் நோக்கி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். குழியில் மணலை கொட்டி, ஜீவாமிர்தம் அளிக்க வேண்டும்.
கன்றுகளுக்கு நிழல், களைகள் கட்டுப்பாடு மற்றும் மண் வள மேம்பாட்டுக்காக, நாற்றுகளின் இடைவெளியில் துவரை விதைக்கலாம்.இம்முறையில் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யும் போது, மரங்களின் உற்பத்தி திறன் உறுதிப்படுத்தப்படும். நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளரும். ஆறு ஆண்டுகள் முதல் காய்க்க துவங்கும்; 50 ஆண்டுகள் வரை காய்க்கும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு, 250 -- 300 கிலோ பாக்கு சராசரியாக கிடைக்கும். இவ்வாறு, அனுபவ விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X