புதுடில்லி:உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள், இந்திரா ஜெய்சிங், அவரது கணவர் ஆனந்த் குரோவர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களாக இருப்பவர்கள், இந்திரா ஜெய்சிங், அவரது கணவர் ஆனந்த் குரோவர். இந்திரா ஜெய்சிங், மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சியில் இருந்த போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார்.
புகார்
இந்திரா ஜெய்சிங்கும், ஆனந்த் குரோவரும், 'லாயர்ஸ் கலெக்டிவ்' என்ற பெயரில், தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர்.இந்த தொண்டு நிறுவனத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்ற விவகாரத்தில், எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் மீறப்பட்டதாக, இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் மீது, புகார்கள் கூறப்பட்டன.
இந்த புகார்கள் பற்றி, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரித்தது.விசாரணையில், இருவரும், 2006 - 15ம் ஆண்டுகளில், வெளிநாடுகளில் இருந்து, எப்.சி.ஆர்.ஏ. விதிமுறைகளை மீறி, 32.39 கோடி ரூபாய் நிதி பெற்றது தெரிந்தது.
இது பற்றி, 2016ல், குரோவர், ஜெய்சிங்கிடம், மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை, 2016ல், உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.மேலும், இந்த முறைகேடு பற்றி விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. அதனால், குரோவர் மற்றும் அவர் நடத்தும், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.இந்நிலையில், இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் ஆகியோரின், டில்லி மற்றும் மும்பையில் உள்ள வீடுகள், அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று, அதிரடி சோதனை நடத்தினர்.
ஆவணங்கள்
அத்துடன், இவர்கள் நடத்தம், லாயர்ஸ் கலெக்டிவ் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் வீடுகள், அலுவலகங்களிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
முறைகேடு செய்யவில்லை
நாங்கள், எந்த முறைகேடும் செய்யவில்லை. மனித உரிமைக்காக, நானும், என் கணவரும், பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம். மனித உரிமை மீறல் சம்பவங்களை எதிர்த்து, பல வழக்குகளில் தொடர்ந்து, வெற்றி பெற்றுள்ளோம். அதனால், எப்.சி.ஆர்.ஏ., விதிகளை மீறியதாக கூறி, எங்கள் வீடுகள், அலுவலகங்களில், சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது.
இந்திரா ஜெய்சிங், மூத்த வழக்கிறஞர்