தாண்டிக்குடி:தாண்டிக்குடி அருகே உள்ள கொடலங்காட்டில் புகுந்த காட்டு யானைகள் ஏராளமான ஏக்கர் பரப்பிலிருந்த மலை வாழைகளை சேதப்படுத்தியது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலுார் பகுதியில் யானைகள் நடமாடின. தொடர்ந்து தாண்டிக்குடி பெருங்கானல், சேம்படியூத்து, கள்ளக்கிணறு பகுதியில் தங்கின. இதில் தபால்காரர் மாதி, தாண்டிக்குடியில் மூக்கம்மாள் இருவர் பலியாகினர்.இதையடுத்து அகழி, சூரிய மின்வேலிகளை வனத்துறையினர் அமைத்தனர். இடம் பெயர்ந்த யானைகள் தடியன்குடிசை, கூப்பலாங்கோட்டையில் கடந்த இரு மாதத்திற்கு மேல் நடமாடின. கடந்த வாரம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், அருகிலிருந்த வாழைத் தோட்டங்களை துவம்சம் செய்தன. செங்கரகானல் மார்க்கமாக காமனுார், கொடலங்காடு பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட யானைகள் புகுந்த நிலையில் அப்பகுதியிலுள்ள வாழை மற்றும் பிற பயிர்களை சேதப்படுத்தியது. குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் வந்த யானைகளால் இப்பகுதி மக்கள் துாக்கத்தை தொலைத்து அச்சமடைந்தனர்.
விவசாயி நாகராஜன் கூறுகையில், ''சில வாரங்களாக 4க்கும் மேற்பட்ட யானைகள் காமனுார், கொடலங்காட்டில் வாழை மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. யானை நடமாட்டத்தால் தோட்டங்களுக்கு செல்ல அச்சமாக உள்ளது. யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE