ஆண்டிபட்டி:தெப்பம்பட்டியில் இரவு நேரங்களில் ஓடைகளில் மணல் திருடப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவூற்று வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து சிற்றோடைகளில் மழைக்காலத்தில் மழை நீருடன் வரும் மணல் ஆங்காங்கே தேங்கி கிடக்கும். கடந்த சில ஆண்டுக்கு முன் இப்பகுதியில் செயல்பட்ட அரசு மணல் குவாரி மூலம் பெருமளவில் மணல் சுரண்டி எடுக்கப்பட்டு விட்டது. தனியார் பட்டா நிலங்களில் உள்ள மண் கலந்த மணலும் விற்பனை செய்யப்பட்டு விட்டது. மண் வளம் குறைந்ததால், நிலங்களில் நீர் உறிஞ்சும்தன்மையும் குறைந்துள்ளது.நிலத்தடி நீர் வற்றியதால் தெப்பம்பட்டி, வேலப்பர் கோயில், பாலக்கோம்பை, ஆவாரம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், கொழிஞ்சிபட்டி, வண்டியூர், ராசக்காள்பட்டி உட்பட பல கிராமங்களில் விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் ஓடைகளில் ஆங்காங்கே மிஞ்சி இருக்கும் சிறிதளவு மணலையும் இரவு நேரங்களில் சிலர் சுரண்டி எடுத்து வாகனங்களில் கடத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் கனிம வளத்துறை அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து கண்காணித்து மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.----------