சென்னைக்கு ரயிலில் வந்தது ஜோலார்பேட்டை தண்ணீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னைக்கு ரயிலில் வந்தது ஜோலார்பேட்டை தண்ணீர்

Added : ஜூலை 13, 2019
Share
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு, ரயில் கலன்களில், குடிநீர் எடுத்து வரும் பணி, நேற்று துவங்கியது. தினசரி, 1 கோடி லிட்டர் தண்ணீர், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. ஆனால், மாநகரில் ஏற்பட்டுள்ள, கடும் தட்டுப்பாட்டை போக்க, இந்த குடிநீர் மட்டும் போதுமா என, கேள்வி எழுந்து உள்ளது.சென்னையில், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகருக்கு குடிநீர் வழங்கும்,
 சென்னைக்கு ரயிலில் வந்தது  ஜோலார்பேட்டை தண்ணீர்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு, ரயில் கலன்களில், குடிநீர் எடுத்து வரும் பணி, நேற்று துவங்கியது. தினசரி, 1 கோடி லிட்டர் தண்ணீர், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. ஆனால், மாநகரில் ஏற்பட்டுள்ள, கடும் தட்டுப்பாட்டை போக்க, இந்த குடிநீர் மட்டும் போதுமா என, கேள்வி எழுந்து உள்ளது.சென்னையில், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகருக்கு குடிநீர் வழங்கும், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் புழல் ஏரிகள் வறண்டு விட்டன.சென்னையை பொருத்தவரை, ஒரு நாளைக்கு, 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், வாரியம் சார்பில் அதிகபட்சமாக, 52.5 கோடி லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, வீராணம் ஏரி, கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், விவசாயக் கிணறுகள், கல்குவாரி குட்டைகள் ஆகியவற்றில் இருந்து, நீர் பெற்று, வாரியம் சமாளித்து வருகிறது.சென்னையில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண, வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து, ரயிலில், தினசரி, 1 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து வர, அரசு முடிவு செய்தது. இதற்காக, 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஜூன் மாதம் பணிகள் துவங்கப்பட்டன.
சென்னை, வில்லிவாக்கம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய இரு பகுதிகளிலும், குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகள், நேற்று முன்தினம் நிறைவு பெற்றன.இதையடுத்து, முதல் கட்டமாக, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய, 50 கலன்களில், 25 லட்சம் லிட்டர் நீர் ஏற்றப்பட்டு, நேற்று காலை, 4:30 மணிக்கு, ஜோலார்பேட்டையில், ரயில் புறப்பட தயார் நிலையில் நின்றது.
சிறப்பு பூஜைக்கு பின், காலை, 7:00 மணிக்கு, தமிழக குடிநீர் வாரியம் மற்றும் ரயில்வே அதிகாரிகள், கொடி அசைத்து, ரயில் பயணத்தை துவக்கி வைத்தனர். ரயில், 204 கி.மீ., பயணம் செய்து, மதியம், 2:30 மணிக்கு, வில்லிவாக்கம் நிலையத்திற்கு வரும், என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ரயில், காலை, 11:45 மணிக்கே, வில்லிவாக்கம் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது அமைச்சர்கள் யாரும், அங்கு இல்லாததால், குடிநீர் ரயில், ஐ.சி.எப்., ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கிருந்து மீண்டும், மதியம், 2:30 மணிக்கு, வில்லிவாக்கம் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, அமைச்சர், வேலுமணி உள்ளிட்டோர், மலர் துாவி வரவேற்றனர்.ரயிலில் வந்த, 25 லட்சம் லிட்டர் நீர், கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சுத்திகரித்து, மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

செலவு அதிகம்!
ரயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்ல, ரயில்வே கட்டணம், ஒரு முறைக்கு, 8.6 லட்சம் ரூபாய். இதை, தமிழக அரசு செலுத்துகிறது. சராசரியாக, 1 லிட்டர் தண்ணீருக்கு, 34 காசு
செலவழிக்கப்படுகிறது.கடல் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க, 1,000 லிட்டருக்கு, அதிகபட்சமாக, 55 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. சென்னைக்கு, குடிநீர் வழங்கும், இதர திட்டங்களை விட, இத்திட்டத்திற்கான செலவு, பல மடங்கு அதிகம். ஆனால், தற்போது நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை கருதி, இந்த திட்டத்தை, அரசு அறிவித்தது.
இத்திட்டத்திற்கு, கட்டணம் இல்லாமலோ அல்லது சலுகை அடிப்படையில், குறைந்தபட்ச கட்டணத்தையோ, ரயில்வே துறை நிர்ணயம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பற்றாக்குறை தீருமா?
சென்னைக்கு, ரயிலில், தினசரி, 1 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து வருவதால், மாநகருக்கு வழங்கப்படும் தண்ணீர் அளவு, 52.5 கோடி லிட்டரில் இருந்து, 53.5 கோடி லிட்டராக, உயர்ந்துள்ளது. ஆனால், சென்னையின் ஒரு நாள் தண்ணீர் தேவை, 83 கோடி லிட்டர்.

ரயில் தண்ணீரால், பற்றாக்குறை கொஞ்சம் குறையுமே தவிர, முற்றிலும் நீங்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி, ரயிலில் குடிநீர் எடுத்து வருவது, அதிக செலவு மிக்கது.அதனால், மாநகரை சுற்றி உள்ள, கல்குவாரிகள் அனைத்தையும், குடிநீர் வினியோகத்திற்கு, பயன்படுத்த நடவடிக்கை எடுக்க, அரசு முன்வர வேண்டும். இதற்கு, பெரிய அளவில் நிதி தேவைப்படாது. மேலும், தினசரி, அதிகபட்சமாக, 10 கோடி லிட்டர் நீர் எடுக்க முடியும்.
நல்ல நேரம் பார்த்து..

.சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 233.72 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து, ரயிலில், தினசரி நான்கு நடை வீதம், 1 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து வந்து, சென்னை மக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்தை துவக்க, மதியம், 2:00 மணி முதல், 3:00 மணி வரை, நல்ல நேரம் என்பதால், சிறிது கால தாமதம் ஆனது.

வேலுமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர்

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X