ஜனாதிபதி ஆசையை நிறைவேற்றிய தலைமை நீதிபதி| President Kovind's desire fulfilled by Chief Justice of India! | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி ஆசையை நிறைவேற்றிய தலைமை நீதிபதி

Updated : ஜூலை 13, 2019 | Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (17)
Share
President, Kovind, CJI, ஜனாதிபதி, ராம்நாத், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களில் ஆங்கிலத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை, இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஆசையாக இருந்தது. இதனை அவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அல்லது ஐகோர்ட் தலைமை நீதிபதிகளை சந்திக்கும் போது எல்லாம் வலியுறுத்தி வந்தார்.


மொழிபெயர்ப்பு நகல் வெளியீடு


ஜனாதிபதியின் இந்த ஆசை, ஜூலை 17 அன்று நிறைவேற்றப்பட உள்ளது. அன்று, சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட 100 தீர்ப்புகளை, ஹிந்தி, அசாமி, வங்காளம், கன்னடம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் நகல்களை ஜனாதிபதி வெளியிட உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவது இது முதல்முறையாகும்.


latest tamil news
அனுபவம்


தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை, ஜனாதிபதி ராம்நாத் முதல்முறை சந்தித்த போது, கோர்ட்களில் ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதால், பொது மக்களுக்கு இழப்பு ஏற்படுவதாக, வழக்கறிஞராக இருந்த போது, தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மொழி பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுடன் பல முறை விவாதித்துள்ளார். தீர்ப்பு விபரங்கள் ஒன்றும், ரகசியம் கிடையாது. சாமான்ய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் ஆசையாக இருந்தது.


கூடுதல் கட்டணம்


தங்களது தாய்மொழியில் தீர்ப்பு நகலை பெற, வழக்கு தொடர்ந்தவர்கள், வழக்கறிஞரிடம் இரு மடங்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது என, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடமும், முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடமும் ஜனாதிபதி பலமுறை கூறியுள்ளார். அப்போது, இந்த பிரச்னை குறித்து தானும் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கோகோய் உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சாமான்ய மக்களுடன் தொடர்புடைய 100 தீர்ப்புகளை, முன்னிலைப்படுத்தி தயாரித்தனர். அவை, தொழிலாளர் , குடும்பம், தனிநபர், நுகர்வோர் சட்டங்கள் சார்ந்தவையாக இருந்ததாக சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள், அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்க கோகோய் நடவடிக்கை எடுத்துள்ளார்.


latest tamil news
வலியுறுத்தல்


மாநில மொழிகளில் தீர்ப்பு என்ற தனது ஆசையை, ஜனாதிபதி, கடந்த அக்டோபர் மாதம் கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவின் போது வெளிப்படுத்தினார்.அந்த விழாவில், ஜனாதிபதி பேசுகையில், மக்களுக்கு நீதி கிடைக்க செய்வது மட்டுமல்லாமல், அதனை, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு புரியும் மொழியில் வழங்குவது அவசியம். ஐகோர்ட்கள் ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்கலாம். மொழிபெயர்க்கப்பட்ட தீர்ப்பு நகல்கள், பிராந்திய அல்லது உள்ளூர் மொழிகளில் கிடைக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனப்பேசினார். இதனை தொடர்ந்து, பல ஐகோர்ட்கள், முக்கியமான வழக்களின் தீர்ப்பை மொழிபெயர்க்கும் பணியை துவங்கியுள்ளன.


latest tamil newsஇன்று(ஜூலை 13) சட்ட பல்கலைகழகத்தில் நடந்த விழாவில், சென்னை ஐகோர்ட் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X