பெயர் மறந்து விடுமோ என்ற அச்சம்!

Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (11) | |
Advertisement
தமிழகத்தின் இன்றைய நிலைமையை, அனைவரும், சற்று யோசித்து பார்க்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு, சரியான வேலை இல்லை; தொழில் வளம் குறைந்து வருகிறது; புதிய திட்டங்கள் எதையும் அரசு, செயல்படுத்துவது இல்லை; சாதாரண மக்கள் நிலைமை, மிகவும் மோசமாக உள்ளது.ஆனால், அரசியல்வாதிகளும், அரசியலுக்கு புதிதாக வந்தவர்களும் கூட, செல்வச் செழிப்பாக இருப்பதை காண முடிகிறது. ஆனால், அவர்களால்
 பெயர் மறந்து விடுமோ என்ற அச்சம்!

தமிழகத்தின் இன்றைய நிலைமையை, அனைவரும், சற்று யோசித்து பார்க்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு, சரியான வேலை இல்லை; தொழில் வளம் குறைந்து வருகிறது; புதிய திட்டங்கள் எதையும் அரசு, செயல்படுத்துவது இல்லை; சாதாரண மக்கள் நிலைமை, மிகவும் மோசமாக உள்ளது.
ஆனால், அரசியல்வாதிகளும், அரசியலுக்கு புதிதாக வந்தவர்களும் கூட, செல்வச் செழிப்பாக இருப்பதை காண முடிகிறது. ஆனால், அவர்களால் 'மூளைச்சலவை' செய்யப்படும் இளைஞர்கள் நிலை, மிகவும் மோசமாக உள்ளது.அரசியல்வாதிகளும், குட்டிக் கட்சி தலைவர்களும், பெரிய சொகுசு கார்களில் வலம் வரும் நிலையில், அவர்களால் கோஷமிட வைக்கப்படும், குறுகிய உணர்வுகளை துாண்டி விடப்படும் இளைஞர்கள் நிலை, அந்தோ பரிதாபம்!
அவர்களின் சொந்த செலவுகளை கூட மேற்கொள்ள முடியாமல், வளர்த்து, படிக்க வைத்த பெற்றோரையும் கவனிக்க முடியாமல், சரியான வேலையின்றி அவதிப்படுகின்றனர். திருமணம் ஆனால், குடும்பச் செலவுக்கு சிக்கல் என்பதால், திருமணத்தை கூட, பலர் தள்ளிப் போடுகின்றனர்.இளைஞர்களின் எதிர்காலத்திற்கு, எவ்வித கொள்கையும் இல்லாமல், வெற்று கோஷமிட மட்டும் வைக்கும் கும்பல்கள், இப்போது மேற்கொள்ளும், மூளைச்சலவை, இன்னும், 30 - 50ஆண்டுகளுக்கு, தமிழக மாணவர்களுக்கு, பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்!
ஏனெனில், 'கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம்; ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை வேண்டாம்; புதிய துறைமுகமா, அதுவும் வேண்டாம்; எட்டுவழிச் சாலை இங்கு போட வேண்டாம்; உயர் மின் கோபுரங்கள் ஊன்ற வேண்டாம்' என, எதிர்க்கட்சிகளும், அவர்களுக்கு, 'ஜால்ரா' போடும் குட்டி அமைப்புகளும், மக்களை போராட துாண்டுகின்றன.சுற்றுப்புறத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், பூமியில், பல நுாறு மீட்டருக்கு கீழே துளை அமைத்து, 'ஹைட்ரோ கார்பன்' எடுக்க முயன்றால், அதற்கும் எதிர்ப்பு. 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு நமக்கு வேண்டாம்; தமிழ் தவிர வேறு மொழி படிக்க வேண்டாம்' என, அனைத்தையும், கண்ணை மூடி எதிர்க்கின்றனர்.
இதனால், நம் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள், நிச்சயம் பாதிக்கப்படுவர்.இரண்டொரு நாட்கள் ஊடகங்களிலும், செய்திகளிலும், தலை காட்டாமல் இருந்து விட்டால், தங்களை மக்கள் மறந்து விடுவரோ என்ற, அச்சம் கொண்டுள்ள அரசியல்வாதிகள், இளைஞர்களை போராடத் துாண்டும் வகையில், எதிர்ப்புணர்வை ஏற்படுத்திய வண்ணமாகவே உள்ளனர்.இந்தப் போராட்டங்களுக்கும், இவர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றால், அறவே இல்லை என்பது தான் பதில்.
சரி, அவர்கள் வீட்டில் உள்ளவர்களாவது, இந்த திட்டங்களால் பாதிக்கப்படுவரா என்றால், அதுவும் இல்லை.அரசியல்வாதிகளின் வாரிசு கள், பல மாநிலங்களில், பல விதமான தொழில்களில், பிரமாண்டமாக வளர்ந்துள்ளனர். இதுபோக, உள்ளூரில், அரசு வேலை, அரசிடம் இருந்து, 'கான்ட்ராக்ட்' வாங்கித் தருவதாக கூறி, கோடிகளில் புரளுகின்றனர்.சரி... இவர்களால், தமிழ் இளைஞர் முன்னேற்றத்திற்கு, ஏதாவது ஒரு, செயல் திட்டத்தையாவது அறிவிக்க முடிகிறதா என்றால், அதுவும் இல்லை. பின், இவர்கள் போராட்டம், 'பப்ளிசிட்டி'க்கானது தானே தவிர, வேறு என்ன...
நீட் தேர்வில் இருந்து, தமிழ கத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கையை முன் வைத்துப் போராடும் இவர்கள், எதார்த்த நிலையை புரிந்து கொண்டிருக்கின்றனரா?கடந்த ஆண்டை விட, தமிழகத்தில் அதிக மாணவ - மாணவியர், நீட் தேர்வு எழுதியதாகவும், கடந்த ஆண்டை விட, கூடுதலான விழுக்காடு, தேர்ச்சி பெற்றுள்ள தாகவும், புள்ளி விபரங்கள் கூறுகின்றன. நீட் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த, மாணவ - மாணவியர் ஓரிருவர், தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் மறுப்பதற்கில்லை. அது, வேதனைக்குரியது தான்.
நீட் தேர்வால் மட்டும் தான், தற்கொலைகள் நடக்கிறதா; 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்விலும், தோல்வி அடைந்தோரும், குறைந்த மதிப்பெண் பெற்ற சிலரும், தற்கொலை செய்து கொள்கின்றனர். அப்படியானால், அந்தத் தேர்வுகளே வேண்டாம் என, கூறி விட முடியுமா? தேர்வு என்பது என்ன... ஒரு மாணவன், தான் கற்றறிந்த கல்வியின் வளர்ச்சி, எந்த அளவில் அவனுக்கு, அறிவாற்றலை கொடுத்துள்ளது என்பதை, அளவீடு செய்து கொள்வது தானே!
அதுபோல, மனித உடலில் ஏற்படும் நோயை நீக்கி, அவரது உயிரை காப்பாற்றும், மருத்துவ படிப்பைக் கற்பதற்காக, அவரது திறமைகளை, கணக்கீடு செய்வது தான், நீட் போன்ற தேர்வுகள். அதற்கான தகுதிதேர்வை எழுத முடியாது, எழுதக் கூடாது என, போராட்டம் நடத்துவது முறை தானா?சில தினங்களுக்கு முன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, உயர் நீதிமன்றத்தில் ஒரு இயக்கத்தின் சார்பில், மனுத் தாக்கல் செய்யப் பட்டது.
அந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி, கேட்ட கேள்வி என்ன தெரியுமா...'இந்த திட்டத்திற்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு... இத்திட்டத்தால், எந்த வகையில் நீங்கள் பாதிப்பு அடைகிறீர்கள்' எனக் கேட்டார். மேலும், 'அரசின் எல்லா திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்டு, போராட்டம் நடத்தினால், தமிழகத்தில் எந்தத் திட்டத்தையுமே நடைமுறைப்படுத்த முடியாதே. 'தமிழகத்தில், தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும், முன்னேற்றமும் எவ்வாறு ஏற்படும்...' என, நீதிபதி கேட்டதை, போராட்டத்தை துாண்டிவிடுபவர்கள் சிந்திக்க வேண்டும்.
மேற்கூறிய திட்டங்களால், சில பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும், மறுப்பதற்கு இல்லை. அந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்ய, வழிமுறைகளை கொண்டு வர, நிர்ப்பந்திக்கலாமே தவிர, புதிய திட்டமே வேண்டாம் என, போராட்டம் நடத்துவது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு, உகந்ததாக கருத முடியாது.பல ஆண்டு காலமாக, ஒரு ஆலை இயங்குகிறது, சில ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், யாருடைய துாண்டுதலினாலோ, அப்பகுதி மக்கள், திடீரென ஆலையை மூட, போராட்டம் நடத்துகின்றனர்; ஆலையும் மூடப்படுகிறது.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலை இழந்து, தெருவில் நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட அந்தத் தொழிலாளர்கள், ஆலையை மீண்டும் திறக்க, கோரிக்கை வைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும், சட்ட போராட்டங்கள் நடப்பதால், ஆலை திறப்பதும் அதனால் பிழைத்த, ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கையும் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.
இந்தப் போராட்டங்களால் ஏற்படும் பின் விளைவுகளை, துாண்டிவிட்டவர்கள் யோசிக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களால், தொழிலதிபர்கள் அச்சமடைந்து, தமிழகத்தில் தொழில் துவங்க மறுக்கின்றனர். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவதை கண்டு, துவங்க முன் வந்த தொழிற்சாலைகளை, வேறு மாநிலத்திற்கு மாற்றுகின்றனர்.
தமிழகத்தில்,சில கட்சிகள், போராட்டம் நடத்துவதையே, கொள்கையாகவும், குறிக்கோளாகவும் வைத்துள்ளன. சாலைகள் அமைப்பது, மின் கம்பம் நடுவது, பூமிக்குள் குழாய்கள் பதிப்பது போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்துவோருக்கு ஒரு கேள்வி...நம் நாட்டை ஆண்ட, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இருப்புப் பாதை அமைக்கும் போதோ, சாலைகள் அமைக்கும் போதோ, அன்றைய மக்கள் போராட்டம் நடத்தி, அவற்றை தடுத்திருந்தால், தமிழகத்தில் எங்குமே, ரயில் போக்குவரத்து வசதியே கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
'என் நிலத்தின் வழியே, இருப்புப் பாதை அமைக்கக் கூடாது; எங்கள் ஊரின் வழியே, சாலைகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம்' என, அன்றைய மக்கள் போராட்டம் நடத்தி யிருந்தால், தற்போது நம் நாட்டின் நிலைமை, எவ்வாறு இருந்திருக்கும்?நம் நாட்டில், போராட்டம் என்பது புதிதல்ல.அன்னிய நாட்டினரின் ஆட்சியை எதிர்த்து, பலரும் போராடினர். அந்த போராட்டங்களில், நியாயமும், நேர்மையும் இருந்தது. ஆனால், எக்காரணம் கொண்டும், ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, முடக்கும் வகையிலோ, தொழில் வளர்ச்சியை தடுக்கும் வகையிலோ, நம் மக்கள் போராடவில்லை.
நிலங்களின் வழியாக சாலைகள் அமைப்பது, மின் கம்பம் நடுவது, குழாய்கள் பதிப்பது போன்ற திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும், 'புரட்சியாளர்களே' உங்களிடம் ஒரு கேள்வி... தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு, வட மாநில, நதிகளை நம் தமிழக நதிகளுடன் இணைக்க வேண்டும் என, கூறுகிறீர்களே, அந்த நதி நீரை, எப்படி கொண்டு வரச் சொல்கிறீர்கள்... குடத்திலா அல்லது வாளியிலா... கால்வாய் மூலமோ, குழாய்கள் மூலமாகவோ தானே, கொண்டு வர முடியும்!
அப்படியான திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, எத்தனை மாநிலங்களைத் தாண்டி வர வேண்டும்... எவ்வளவு விளைநிலங்கள், கிராமங்கள், நகரங்கள், மலைகள் குறுக்கிடும்... அங்கிருக்கும் மக்கள் அனைவருமே, உங்களை போன்றே, எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினால், நீங்கள் என்ன செய்வீர்?ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில், குறைகளோ, மக்கள் நலப் பாதிப்போ ஏற்படும் போது, எதிர்க்கட்சிகளாக இருப்போர், குரல் எழுப்ப வேண்டியது அவசியமானதே. எனினும், எதுவும் எல்லை தாண்டி போகக் கூடாது.
'எதற்கெடுத்தாலும் போராட்டமா?' என, நீதிபதிகள் கேட்கின்றனரே... என்ன பதில் கூறப் போகிறீர்கள். தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றித் தான், அரசியல் செய்ய வேண்டும் என, நீங்கள் எண்ணினால், உங்கள் கட்சி, நாளை ஆட்சியில் அமரும் நிலை வந்தால், என்னவாகும் என, எண்ணிப் பாருங்கள்.அரசியல் என்பது, வெறும் கூட்டம் சேர்ப்பது மட்டுமன்று... புதிய கொள்கைகள் மூலம், புதிய கோஷங்கள் மூலம், நாட்டை முன்னேற்றுவதே! உங்களின் கொள்கை உறுதிப்பாடு, நாட்டின் முன்னேற்றத்திற்காக இருக்கட்டும்.

கவிஞர் தி.அனந்தராமன்சமூக ஆர்வலர்

தொடர்புக்கு:கைப்பேசி எண்:99409 69616

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (11)

govind - kish Island,ஈரான்
20-ஜூலை-201912:37:10 IST Report Abuse
govind அருமையான அற்புதமான எல்லாரும் படிக்க மற்றும் சிந்திக்க வேண்டிய பதிவு. ஐயா ஒரு சிறிய வேண்டுகோள் இது மாதிரியான விழிப்புணர்வை தூண்டும் மக்களின் அறியாமையை போக்கும் படைப்புகளை கொடுக்கவும் . இது ஒரு தாழ்மையான கோரிக்கை . மக்கள் அறியாமையில் இருந்து மீள வேண்டும்
Rate this:
Cancel
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
20-ஜூலை-201912:30:05 IST Report Abuse
Ganesan.N அரசியல் பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கின்றனர். வெளி நாடு அனுப்புகின்றனர். ஒன்றும் இல்லாமல் இருந்தவர்கள் இன்று கோடியில் புரளுகின்றனர். தொழிலிலும் கோடி கட்டி பறக்கின்றனர். மற்றவர்கள் அதுவும் ஏழைகள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முன்னேறிவிடக்கூடாது என்பதில் இவர்கள் மிகுந்த கவனமாய் இருக்கின்றனர். sterlite ஆலையை மூடிவிட்டனர். அதில் வேலை பார்த்த குடும்பங்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று இவர்களுக்கு அக்கறை இல்லை. அந்த ஆலையை சார்ந்த மற்ற தொழில்கள் படுத்து விட்டதை பற்றி இவர்களுக்கு அக்கறை கிடையாது. இவர்களின் அக்கறை எல்லாம் தமிழகத்தில் தங்கள் வாரிசுகள் வளர வேண்டும் அனுபவிக்க வேண்டும் என்பது மட்டுமே. மக்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் தமிழக இளைஞர்களின் எதிர் காலம் கேள்விக்குறியே.
Rate this:
Cancel
AarKay - Madurai,இந்தியா
20-ஜூலை-201908:03:56 IST Report Abuse
AarKay தங்களின் தலைவர் யார், அவரின் பின்னணி என்ன,அவர்களை இயக்குவது யார் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். போலிகளை இனம்கண்டு ஒதுக்கினால் தான் இளைய சமுதாயத்திற்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X