56 துணை மின் நிலையங்கள் அமைக்க முடிவு: அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

56 துணை மின் நிலையங்கள் அமைக்க முடிவு: அமைச்சர்

Added : ஜூலை 14, 2019

குமாரபாளையம்: ''இந்தாண்டு, 56 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன,'' என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் தங்கமணி, நிருபர்களிடம் கூறியதாவது: கிராமங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில், ஒற்றை கம்ப மின்மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. ஒரே மின்மாற்றியில் இருந்து, 600க்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு மின்சாரம் வினியோகிக்கும்போது ஏற்படும் தடைகளை சமாளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால், மின்மாற்றிகளில் பழுது ஏற்படாது. இது, மத்திய அரசின் திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப, இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். மின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதிகளில், துணை மின்நிலையம் அமைத்து சீரான மின்சாரம் அளிக்கப்படுகிறது. இதன்படி, முதல்வர் ஒப்புதலுடன், இந்தாண்டு, 56 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. டெல்டா மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் துணை மின்நிலையம் விரைவில் அமைக்கப்படும். கேங்க்மேன் பணியிடங்களுக்கு, மூன்று மாதங்களில் உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். அரசின் கொள்கை முடிவு என்பதால், இப்பணியில், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்படும். 'நீட்' தேர்வு விலக்கு கோரி, ஜனாதிபதியிடம் அரசின் மனு சென்றபோது, 'வித் ஹெல்ட்' என்று தான் பதில் வந்துள்ளது. அதற்குரிய விளக்கத்தை தமிழக அரசு கோரியுள்ளது. 'நீட்' விலக்கிற்கு தொடர்ந்து தமிழக அரசு பாடுபடும். குமாரபாளையத்தில், நிலத்திற்கடியில் மின்சார ஒயர் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் தரமான முறையிலேயே ஒயர் பதிக்கப்படுகிறது. சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டி, அதற்கான நிதி நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X