நளினிக்கு 2 பேரின் உறுதிமொழி பத்திரம்: வக்கீல் புகழேந்தி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நளினிக்கு 2 பேரின் உறுதிமொழி பத்திரம்: வக்கீல் புகழேந்தி தகவல்

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (1)

வேலூர்: ''நளினி பரோல் தொடர்பாக, இரண்டு பேரின் உறுதிமொழி பத்திரம், சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது,'' என,வக்கீல் புகழேந்தி கூறினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அவரது கணவர் முருகன், வேலூர் சிறையில் உள்ளார். இவர்கள் மகள் அரித்திரா. லண்டனில் டாக்டருக்கு படித்துள்ளார். மகளின் திருமண வேலைகள் கவனிக்க சென்னை உயர்நீதிமன்றம், நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. பரோல் தேதி, தங்குமிடம் குறித்த விவரத்தை, 10 நாளில் தெரிவிக்க சிறை அதிகாரிகள் நளினியிடம் கூறினர். இந்நிலையில் வக்கீல் புகழேந்தி, நேற்று சிறைக்கு சென்று நளினியை சந்தித்து பேசினார்.


பிறகு வெளியே வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. அதற்கு இரண்டு பேர் உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும். இதனால், நளினியின் தாய் நர்ஸ் பத்மா, உறவினர் சத்தியவாணி ஆகியோரது, உறுதிமொழி பத்திரம், சிறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. காட்பாடி பிரம்மபுரம் மற்றும் சென்னை கோட்டூர்புரம் ஆகிய இரண்டு இடங்களில், தங்க அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை, சிறை நன்னடத்தை அதிகாரிகள் விசாரணை நடத்தி, எங்கு தங்க வேண்டும் என, உத்தரவு கொடுப்பர். அதன் பிறகு, பரோல் தேதி முடிவு செய்யப்படும். நளினியின் மகள் அரித்திரா, அடுத்த மாதம் சென்னை வருகிறார். அவரிடம் நளினி மற்றும் உறவினர்கள் கலந்தாலோசித்து திருமணம் குறித்து, முடிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X