கல்வி தந்த காமராஜர்!| Dinamalar

கல்வி தந்த காமராஜர்!

Added : ஜூலை 15, 2019
Share
கல்வி தந்த காமராஜர்!

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும் 'என்ற வரிகளுக்குப் பொருத்தமானவர் பெருந்தலைவர் காமராஜர்.1903 ஜூலை 15 இந்தியாவின் கருப்பு வைரம்' பிறந்த நாள். சிவகாமியின் செல்வப் புதல்வனாய், குமாரசாமியின் குமரனாய் அவதரித்தான் இந்த தமிழன்.விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் விருது காமராஜர். அவரின்ஆறு வயதில் தந்தை இறந்து விட தாயைக் காக்கும் தனயனாய் தாய் மாமன் கடையில் வேலை பார்த்த காமராஜர், அங்கு வந்த தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு, தாய் நாட்டைக் காக்கும் தலைவனாக மாறினார்.
காங்கிரஸ் கட்சியின் கரம் பிடித்து 16 வயதில் நடக்கத் தொடங்கிய காமராஜரை பின்னாளில், கட்சியின் தலைவராக மாற்றியது அவரின் அயராத உழைப்பு. அறம் சார்ந்த அரசியலை தன் வழியாக கொண்டார் கர்ம வீரர். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளமாய் விளங்கினார். தாய்நாட்டிற்காக 9ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து,காந்திய வழியில் கடமையாற்றிய காமராஜரை, 1954ல் முதலமைச்சராக அரியணை ஏற்றி மக்கள்அழகு பார்த்தனர்.
பெருந்தலைவர்
தலைவர்களுக்கெல்லாம், தலைவராய் இருந்ததாலேயே, பெருந் தலைவர் என்று அழைக்கப் பட்டார். காமாட்சி என்ற செல்லப் பெயரை சூட்டிய அன்னைக்கு, அது மட்டுமல்லாமல் வேறு பல பேர்களில் அவர் அழைக்கப்படப் போகிறார் என அப்போது தெரிந்திருக்க வில்லை.கருப்புகாந்தி, கருப்பு வைரம், ஏழைப் பங்காளன், பகல் உணவு தந்த பகலவன்,கர்ம வீரர், கிங் மேக்கர் என்பதெல்லாம் மக்கள் அவருக்கு சூட்டிய செல்லப் பெயர்கள். படிப்பறிவை விட அனுபவ அறிவால் பல திட்டங்களை வகுத்து, அதில் வலிமை இருந்த போதும் எளிமையோடு இருந்தவரை வரலாறு வாயடைக்கப் பார்த்தது.
வேட்டி கட்டிய தமிழனாலும், சாதனை படைக்க முடியும் என்பதற்கான அடையாளமாய் விளங்கினார் காமராஜர். கடமையையே கல்யாணம் செய்து கொண்டவர். நெருக்கடியான சமயங்களில் மக்களுக்கு வழிகாட்டியாய், எளியவர்களின் தோழனாய் வாழ்ந்தவர். சாமானிய மக்களின் துயர் துடைப்பவராய், அவர்களின் நிலையில் நின்று பிரச்னைகளை நோக்குபவராகவும் திகழ்ந்த காமராஜரை, மக்களுக்குப் பிடித்திருந்தது. பகட்டுகள் இல்லாத அந்த பச்சைத் தமிழன் அனைவரின் மனம் கவர்ந்தவராய் இருந்தார்.
பட்டிதொட்டியெங்கும் பள்ளிகள்
காமராஜர் முதலமைச்சரானதும், ஜாதி மத வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்க கல்வி இலவசமாக்கப்பட்டது. ஆறாயிரம் கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்பதை அறிந்து, பள்ளி இல்லாத ஊர்களில் எல்லாம் ஓராசிரியர் பள்ளிகளைத் திறந்தார். ஏழைக் குழந்தைகள் கல்வி பெற கையேந்தி பிச்சையெடுக்கவும் தயார் என்றார். தான் படிக்கா விட்டாலும், இந்த தேசம் படிக்க வேண்டும் என்று நினைத்தவர் கர்ம வீரர். எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி ஒரு சொத்து. கல்வி என்ற சொத்தை பெற்று விட்டாலே வறுமை தானாகவே ஒழிந்து விடும் என்பதே காமராஜரின் எண்ணம்.
'விலை போட்டு வாங்கவா முடியும்? கல்விவேளை தோறும் கற்று வருவதால் படியும்மலை வாழை அல்லவோ கல்வி' என்ற பாரதிதாசனின் வரிகளை உணர்ந்திருந்த அந்த படிக்காத மேதை வாயார உண்ண வாருங்கள் பள்ளிக்கு என்று மாணவர்களை அழைத்தார். எவர் ஒருவரின் இதயம் ஏழைகளுக்காக கண்ணீர் சிந்துகிறதோ ,அவரே உயர்ந்த மனிதர் ஆவார்.எளிய மனிதர்களின் காவலனாய் காமராஜர் இருந்தார்.
ஏழைப் பங்காளன்
மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், பள்ளிக்கு செல்லவில்லையா' என்று கேட்டதற்கு, சாப்பாடு தருவீங்களா என்ற பையனின் எதிர்கேள்வியை மனதில் கொண்டு, போட்டார் ஒரு சட்டம். அது தான் இலவச மதிய உணவுத் திட்டம். பணப்பையை பார்க்கும் மனிதர்கள் மத்தியில், ஏழைகளின் இரைப்பையை பற்றி சிந்தித்தவர். வயிற்றின் ஈரமும், கண்களின் நீரையும் உணர்ந்த தலைவன் என்பதால் தான் ஏழைப் பங்காளன்என்று போற்றப் பட்டார். அதனால் தான் 'காலத்தின் கடைசிக் கருணை- காமராஜர்' என்று கண்ணதாசன் கூறுகிறார். மாடு பிடித்த கைகளை ஏடு பிடிக்க வைத்த பெருமை காமராஜரையே சாரும். மதிய உணவுத் திட்டம் பள்ளிகளில் வந்த பிறகு, இடை நிற்றல் குறைந்தது. கல்வி கற்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்தது.கல்வியில் புரட்சி செய்த கர்ம வீரரின் அரும் பணி, காலத்தால் மறக்க இயலாது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால், கல்விக் கண் திறந்த காமராஜரும் கடவுள் தான். அறியாமை இருளை நீக்கி, கல்வி என்னும் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர். கல்வியில் புரட்சி செய்த கறுப்புக் காந்தி காமராஜருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளான ஜூலை 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம்.
எளிமையின் சின்னம்
மூன்று லட்சம் ரூபாயில் அரசின் செய்திகளை சாதனைப் படமாக எடுக்கலாமே என்று ஒருவர் கேட்டதற்கு, அந்த தொகையில் பத்து ஊர்களில் நான் பள்ளிக்கூடம் கட்டிடுவேனே என்று பதிலளித்தாராம் காமராஜர். அவர் இறந்த போது அவரின் சட்டைப் பையில்100 ரூபாயும், ஒரு செட் உடையும், ஒரு ஜோடி செருப்பு மட்டுமே இருந்தது என்றால், இவரைப் போன்ற ஒப்பாரும், மிக்காரும் உண்டோ?'சீராட்டும் தாய் தவிரச் சொந்தமென்று ஏதுமில்லை! துணையிருக்க மங்கையில்லை!துாயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை!ஆண்டி கையில் ஓடிருக்கும்; அதுவும் உனக்கில்லையே!'என்ற கவிஞன் கண்ணதாசனின் வார்த்தைகள் தான் காமராஜருக்கு எத்துணை பொருத்தம். எத்தனை தந்தாலும் நிறையாத மனித மனங்களுக்கு மத்தியில், எல்லாம் இருந்தும் எதுவும் வேண்டாம் என்ற உயரிய பக்குவமாய் வாழ்ந்த மகான் காமராஜர்.
தீட்டிய திட்டங்கள்
காமராஜரின் ஆட்சிக் காலத்தை பொற் காலம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். எதனால் இந்தச் சிறப்பு என்று கேட்பவர்களுக்கு பதில்அளிக்கிறது அவரின் அசாத்திய திட்டங்கள்.நீர்ப் பாசனத் திட்டங்கள், பரம்பிக் குளம் ஆழியாறு அணை ஒப்பந்தம், நீர் மின் திட்டம், நிலச் சீர்திருத்தம்,அணைக் கட்டுகள், மின் துறை சாதனைகள்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனம்,பஞ்சாயத்து ராஜ் திட்டம்,தொழில் வளர்ச்சி,கிராமப் புற வளர்ச்சி என காமராஜரின் ஆட்சியின் அசத்தல் திட்டங்களால் வளமானது நாடு.
கிங் மேக்கர்
நேருவிற்குப் பின் அடுத்த பிரதமர் யார் என்று அரசியல் களம் சிந்தித்த வேளையில், லால் பகதுார் சாஸ்திரியை தேர்ந்தெடுத்தார். லால் பகதுாரின் மறைவுக்குப் பின் மீண்டும் ஒரு குழப்பம். இந்திராவைத் தேர்ந்தெடுத்து, பிரதமராய் அரியணை ஏற்றி, தான் ஒரு கிங் மேக்கர் என நிரூபித்தார். அரசியலில் மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட காமராஜர் வகுத்த திட்டம் தான் கே பிளான். இதற்கு முன்னுதாரணமாக தானே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். கொள்கையில் உறுதியென நின்று, பதவியைப் பெரிதென எண்ணாமல், அதனை துச்சமென துாக்கி எறிந்த காமராஜர் அரசியல் உலகின் ஆச்சர்யம். தன் சொந்த தாய்க்கு கூட சலுகைகளை வழங்காத தலைவர்.
காந்திய நெறியில் வாழ்ந்த காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் அன்றே மறைந்தது இறைவன் எழுதிய விதி அன்றோ?காந்தியத்தின் கடைசித் துாண் சாய்ந்து விட்டது. ஆனால் அது காட்டிய பாதை நேராகவே உள்ளது. 1975 அக்டோபர் இரண்டு அன்று காமராஜர் தன் உதவியாளர் வைரவனிடம் கடைசியாக கூறிய வார்த்தை, விளக்கை அணைத்து விட்டுப் போ என்பதாகும்.
ஆம்..இந்தியாவின் அரசியல் சகாப்தம் அணைந்து போய் விட்டது. இறந்த பின்பும் தன் திட்டங்களால் இருந்து கொண்டே இருக்கிறார். காவியத் தலைவன் பிறந்த நாளை காலம் முழுதும் நினைத்துப் போற்றுவோம். அவரின் வழி நடப்போம்.
-ம.ஜெயமேரி ஆசிரியை, ஊ.ஒ.தொ.பள்ளிக.மடத்துப்பட்டி.bharathisanthiya10@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X