துாத்துக்குடி, : 'கோவில்பட்டி, கழுகுமலையிலுள்ள வெட்டுவான்கோவில் மற்றும் சமணச் சிற்பங்களை, உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்' என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இருக்கிறது, கழுகுமலை.இங்கு, வரலாற்று சிறப்பு மிக்க வெட்டுவான்கோவில், கழுகாசமூர்த்தி முருகன் கோவில், சமணர் சிற்பத் தொகுப்பு ஆகியவை உள்ளன. இவை, முற்காலப் பாண்டியரின் கலைப்பாணிக்கு ஆதாரமாக உள்ளன. இதில் வெட்டுவான் கோவில், கடினமான பாறை அடுக்குகளாலான, பெரிய மலையை, 7.50 மீ., ஆழத்திற்கு, சதுரமாக வெட்டியெடுத்து, அதன் நடுப்பகுதி பாறையில், கோவில் அமைத்துள்ளனர். சிற்ப வேலைப்பாடு நிறைந்த, ஒற்றைக் கற்கோவிலான இது, முழுமை பெறவில்லை.
இது, மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, எல்லோரா கைலாசநாதர் கோவில் போன்ற வேலைப்பாடுடையது. இத்தகைய கோவில், தமிழகத்திலேயே இது ஒன்று தான் என்பது, இதன் மற்றொரு சிறப்பு.இந்தக் கோவிலில் தான், மிருதங்கம் வாசிக்கும், தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும், புன்னகை தவழும் முகத்துடன் காட்சிஅளிக்கின்றன. இந்த மலையின் கிழக்கு சரிவில், 100க்கும் மேற்பட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
இவை, பாண்டிய மன்னன், பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டவை. சிலைகளின் கீழ், அவற்றை உருவாக்கியவரின் பெயர் விபரங்கள், வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு, சமணப் பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளன.முற்காலப் பாண்டியர்களின் கலைப் பாணியில் அமைந்த மரபுச் சின்னங்கள் இவை.மிகச் சிறந்து விளங்கும், கழுகுமலை வெட்டுவான்கோவில் மற்றும் சமணச் சிற்பங்களை, உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE