இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா! - 22| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா! - 22

Added : ஜூலை 16, 2019
Share
துப்பாய துாஉம் மழை!துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்துப்பாய துாஉம் மழை - குறள்.உணவு பொருள்களை விளைவிக்க தேவையானஊக்கியாக இருக்கும்; உணவு பொருள் இல்லாதபோது தானே உணவாய் மாறும்; இந்த அற்புதஆற்றல் மழைநீருக்கு மட்டுமே உண்டு.தமிழக நீர்நிலைகளின் வரலாற்றை தொல்லியல் சான்றுகளுடன் பார்த்தோம். இனி அறிவியல் பார்வையில் பார்ப்போம். நமக்கு நீர் பற்றிய
இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா! - 22


துப்பாய துாஉம் மழை!

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்
துப்பாய துாஉம் மழை
- குறள்.

உணவு பொருள்களை விளைவிக்க தேவையானஊக்கியாக இருக்கும்; உணவு பொருள் இல்லாதபோது தானே உணவாய் மாறும்; இந்த அற்புதஆற்றல் மழைநீருக்கு மட்டுமே உண்டு.தமிழக நீர்நிலைகளின் வரலாற்றை தொல்லியல் சான்றுகளுடன் பார்த்தோம். இனி அறிவியல் பார்வையில் பார்ப்போம். நமக்கு நீர் பற்றிய அறிவியல் தகவல்களை அண்ணா பல்கலையின் நீர்வள ஆதாரத்துறை இயக்குனர் அம்புஜம் கூறுகிறார்.

நாட்டின் தெற்கே முக்கோண வடிவில் தக்காண பீடபூமி உள்ளது. அதில் சிறிய முக்கோண வடிவில் இருப்பது தான் தமிழகம். மேற்கிலும் கிழக்கிலும் மலை தொடர்கள்; தெற்கில் முக்கடல்கள்; இதுதான் பறவை பார்வையில் தமிழகத்தின் இயற்கையமைப்பு. வடக்கில் ஆந்திரா, வடமேற்கில் கர்நாடகா, மேற்கில் கேரளா இவை எல்லை மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இருந்து தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் தண்ணீரை எதிர் நோக்கி இருக்கிறது.

காரணம் ஜூன் பாதியிலிருந்து செப்டம்பர் பாதி வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை; அக்டோபர் மத்தியிலிருந்து டிசம்பர் பாதி வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை; கடலோர மாவட்டங்களில் பெய்யும் சூறாவளி பருவமழை என தமிழகத்திற்கு மூன்று முறை அரிய மழை கிடைக்கிறது; ஆனால் பெரிய மழை ஏதும் இல்லை. மலைத்தொடர், அதை ஒட்டிய பீடபூமி, கடலுக்கு முன் உள்ள சமவெளி, கடலோர பகுதி என்ற நான்கு நிலைகளில் மேற்கிலிருந்து கிழக்காக மேடு பள்ளமான நில அமைப்பு தமிழகத்தில் உள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவையின் மேற்குப்பகுதி, தர்மபுரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மழையை பெறும். இங்கெல்லாம் சராசரியாக 70 முதல் 150 செ.மீ. வரை மழை கிடைக்கும்.


பருவக்காற்று:

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் சமவெளி மாவட்டங்களுக்கு வடகிழக்கு பருவக்காற்று தான் மழையை வழங்குகிறது.கடலோர மாவட்டங்களான சென்னை, கடலுார், திருவள்ளுர், காஞ்சிபுரம், நாகபட்டினம், திருவாரூர், மற்றும் நெல்லை 80 செ.மீ. முதல் 100 செ.மீ. வரை மழையை பெறுகின்றன. வங்கக்கடலின் தென்பகுதியில் நவம்பரில் ஏற்படும் காற்றழுத்த வேறுபாட்டால் தாழ்வுப்பகுதி உருவாகி தீவிரமடைந்து மழையாக பொழியும். இவ்வாறாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 100 செ.மீ. மழை பொழிகிறது.

தமிழகத்தில் மிக குறைந்த மழை, குறைவான மழை, மிக அதிக மழை, அதிக மழை, மிதமான மழை என மழை பெய்யும் அளவின் அடிப்படையில் தமிழக மாவட்டங்களை ஐந்து பிரிவுகளாக பிரிக்கலாம்.மிக அதிக மழையை கடலோர மலையோர மாவட்டங்கள் பெறுகின்றன. அதிக மழையை பீடபூமி பகுதிகளும் மிதமான மழையை சமவெளி பகுதிகளும், குறைந்த, மிகக்குறைந்த அளவு மழையை கடல் மலையிலிருந்து தள்ளியுள்ள பகுதிகளும் பெறுகின்றன.என்றாலும் தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் ஒரு சிலவற்றை தவிர மற்றவை அருகேயுள்ள மாநிலங்களில் தோன்றுகின்றன.

அதனால் நாம் தண்ணீர் தேவைக்காக அவர்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. அதே நேரம் தமிழகத்தில் பெய்யும் மழைநீர் முழுவதையும் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். நம் முன்னோர்கள் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு நீர்நிலைகளை உருவாக்கி அவற்றில் மழைநீரை சேமித்து வந்தனர். அந்தந்த தேவைக்கு அந்தந்த நீர்நிலை என்பதில் கட்டுப்பாட்டுடன் இருந்தனர். ஊரில் இருந்த ஊருணியில் வீட்டு தேவைக்கான நீரை எடுத்தனர்.

வண்ணாந்துறை எனப்படும் குளத்தை துணி துவைக்க மட்டுமே பயன்படுத்தினர். வீட்டுக்கு வீடோ தெருவுக்கு தெருவோ ஆழ்துளை கிணறுகள் வந்த பின் நம் முன்னோர்கள் கட்டிக் காத்த கட்டுப்பாடுகள் உடைந்தன.அதேபோல ஊர்க் கட்டுப்பாட்டில் இருந்த நீர்நிலைகள் அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின் குளங்கள் ஏரிகளுடன் விவசாயிகளுக்கு இருந்த நேரடி தொடர்பு அறுந்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வயலுக்கு வண்டல் மண் எடுப்பதும் துார் வாருவதும் குறைந்து நீர்நிலைகள் மேடுதட்டி நின்று பின் படிப்படியாக அழிந்தும் போயின. இந்த மாற்றங்கள் 50 ஆண்டுகளில் தான் ஏற்பட்டன.

அதேநேரம் மக்கள் தொகை பெருக்கம் நகரமயமாக்கல் தண்ணீர் தேவைக்கு அரசை சார்ந்திருத்தல் போன்ற படிப்படியான மாற்றங்களால் பெரும்பாலான நீர்நிலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.அதேநேரம் முன்னர் போல் இல்லாமல் பருவகாலங்கள் மாறிவிட்டன. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வெள்ளமும் அதைத் தொடர்ந்து இரண்டாண்டுகள் கடும் வறட்சியும் ஏற்பட்டு விடுகிறது. கிணற்று பாசனம் இருந்த மாவட்டங்களில் எல்லாம் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனம் அமோகமாக நடந்தது. இப்போது அதுவும் இல்லை. காரணம் அசுரத் தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டனர்.

இதிலிருந்து மீள ஒரே மாதிரியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க முடியாது. காரணம் ஒரு இடத்தில் சரியாக இருக்கும் ஒரு திட்டம் மற்றொரு இடத்திற்கு பொருந்தாமல் போகும். தமிழகத்தில் நான்கு விதமான நில அமைப்புகள் இருப்பது தான் இதற்கு காரணம்.இந்நிலையில் கடல்நீரை குடிநீராக்குவது கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயமும் தொழிலும் செய்வது என அடுத்தகட்ட ஆராய்ச்சிகளில் இறங்கி விட்டோம். ஆனால் ஆய்வு முடிவுகள் நம்மை அதிர்ச்சியாக்குகின்றன.ஆய்வு முடிவுகள் விபரம் என்ன? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

- நடுவூர் சிவா
naduvoorsiva@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X